Home அரசியல் முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்

முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்

by admin
நாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறியோடு நடந்து கொள்வதை மக்கள் காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை, அரசியல் தலைவர்களும் மதம் சார்ந்த மதம்பிடித்தவர்களாக இத்தகைய பௌத்த மதத் தலைவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
பௌத்த மதத்தைச் சேர்ந்த எல்லா தலைவர்களும் இவ்வாறு செயற்படுவதில்லை. ஒரு சில பௌத்த மதத் தலைவர்களே இனவாதத்திலும், மதவாதத்திலும் தோய்ந்தெழுந்திருக்கின்றார்கள்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்புக்களில் உள்ள அமைச்சர்கள் சிலரும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும்கூட, இவர்களுடன் அணி சேர்ந்து, இனவாத, மதவாத போக்கிற்கு ஊக்கமளித்து வருகின்றார்கள். மதமும், அரசியலும் வௌ;வேறானவை. ஆயினும், மதத் தலைவர்கள் அரசியலை வழிநடத்துகின்ற போக்கு காலம் காலமாக இலங்கை போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
அதிகார பலம் கொண்ட அரச தலைவர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து வழிதவறிச் சென்றுவிடாமல் தடுத்து நெறிப்படுத்துவதற்காகவே, மதத் தலைவர்களின் அரசியல் தலையீடு அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டிய மதத் தலைவர்களின் அரசியல் தலையீடு அத்துமீறிச் செயற்படுகின்ற போக்கு இலங்கையின் அரசியலில் படிப்படியாக அதிகரித்து பௌத்த மதத் தலைவர்கள் முழுமையான அரசியல்வாதிகளாக மாறியிருக்கின்றார்கள்.
இவர்கள் பௌத்த மதத் துறவிகளுக்குரிய அங்கிகளுடன் மத குருக்களாகவும், அதேவேளை, முழு நேர அரசியல்வாதிகளாகவும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்.
மத குருவாகின்ற ஒருவர், ஆசாபாசங்களையும் லௌகீக வாழ்க்கை முறைகளைத் துறந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது பௌத்த மதத்தின் விதியாகும். உணவையும் அவர்கள் மற்றவர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கென்று எதுவுமே இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
ஆனால் இலங்கையில் அவர்கள் முற்றும் துறந்தவர்களைப் போன்ற வேடத்தை அணிந்து கொண்டு அரசியல்வாதிகளாக, அனைத்து வசதிகளையும் அனுபவிப்பவர்களாக மாறியிருக்கின்றார்கள்.
பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்களாக, எத்தகைய ஒரு நிலைமைக்கும் கீழிறங்கிச் செல்லக் கூடியவர்களாக மாறியிருக்கின்றார்கள். மத குரு தோற்றத்தில் இருந்து கொண்டே, அந்தத் தோற்றத்திற்கு எந்தவகையிலும் பொருந்தாத வகையில் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்களை பேசுவதைத் தங்களுக்குரிய பண்பாகக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு இன மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்பட்டு, அதனை அந்த மக்கள் பேணி வருகின்ற போதிலும், இலங்கையில் உள்ள பௌத்தர்கள் மட்டுமே இந்த மதத்திற்கு உரித்துடையவர்கள்,
அதனை அவர்கள் மட்டுமே பேணி பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டிருக்கின்றார்கள் என்ற பாவனையில் செயற்படுகின்றார்கள. தாங்கள் இல்லாவிட்டால், தாங்கள் செயற்படாவிட்டால் பௌத்த மததே அழிந்தொழிந்து போய்விடும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகள், உண்மையிலேயே புனிதம் நிறைந்த பௌத்த மதத்திற்கு இழுக்கையும் அவப்பெயரையும் பெற்றுக்கொடுப்பதற்கே வழி வகுத்திருக்கின்றன. அவர்கள் இதனை உணரத் தவறியுள்ளார்கள். அல்லது அதனை உணர்ந்து, வேண்டுமென்றே அந்த சமயத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுக் கொண்டிருப்பது, அவர்களின் சுயலாபம் கருதிய கபடத்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றது.
பௌத்த மத குருக்கள் அல்லது பௌத்த மதத் தலைவர்கள் என்ற பொறுப்பான நிலையில் உள்ள ஒரு சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். பௌத்த மதத்தின் உன்னதமான கொள்கைகளைப் பின்பற்றி, நெறி தவறாமல், மனிதாபிமான பண்பு நிறைந்த எத்தனையோ பௌத்த மத குருக்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் உள்ள எல்லா இன மக்களுடைய மனங்களிலும், உயர்வான ஓரிடத்தில் இருந்து, பணியாற்றி வருகின்றார்கள்.
அவர்களுடைய உண்மையான செயற்பாடுகளுக்கு, இனவாத மதவாத அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களின் போக்கு உண்மையிலேயே இழுக்கை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
மதவாதம் கொண்ட அரசியல்வாதிகள் 
அரசியல்வாதிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்குகின்ற ஆதரவு, இனவாத, மதவாத கடும்போக்காளர்களான பௌத்த மதத் தலைவர்களின் போக்கிற்கு மேலும் மேலும்  ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
நாட்டின் இருபெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன மக்களுடைய அரசியல் ஆதரவை, அமோகமாகப் பெற்றிருந்தாலும்கூட, பௌத்த மத அமைப்புக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே செயற்பட்டு வருகின்றார்கள். இந்த வழிமுறை காலம் காலமாக அவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
பௌத்த மத பீடாதிபதிகள் கூறுகின்ற கருத்துக்கள் அல்லது அவர்கள் விரும்புகின்ற அரசியல் போக்கு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பொதுவான நன்மைக்கு உகந்ததாக இல்லாதிருந்தாலும்கூட, அவற்றை மறுத்துரைத்துச் செயற்படுவதற்கு .இந்தக் கட்சிகள் ஒருபோதும் முனைவதில்லை. துணிவதுமில்லை.
பௌத்த மத பீடாதிபதிகள் மட்டுமல்ல. ஞானசார தேரர் போன்ற தீவிரச் செயற்பாடுடைய தனிப்பட்ட அல்லது அமைப்பு ரீதியான செயற்பாட்டு வல்லமை கொண்டவர்களின் கருத்துக்களையும் அவர்கள் ஒதுபோதும் புறந்தள்ளுவதில்லை. அவர்களுடைய மனம் கோணாத வகையிலேயெ சிங்கள அரசியல் தலைவர்கள் நடந்து வருகின்றார்கள். இதனை அவர்கள் மரபு ரீதியான நடைமுறையாகப் பின்பற்றி வருவதையும் காண முடிகின்றது.
இந்தப் போக்கானது, இனங்களுக்கிடையில் ஒரு மோசமான யுத்தத்தினால் சீரழிந்துள்ள நல்லிணக்கம். சகிப்புத் தன்மை என்பவற்றை மேலும் மோசமடைவதற்கே வழிவகுத்துள்ளது.
அடிமட்டத்தில் உள்ள மக்கள் மத ரீதியாகவோ அல்லது இனரீதியாகவோ பிளவுபட்ட மனப்பாங்கைக் கொண்டவர்கள் அல்ல.
அவர்கள் வௌ;வேறு மொழியைப் பேசி, வௌ;வேறு மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றி வந்தபோதிலும், அவர்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட்டிருக்கின்றார்கள். ஒருவருடன் ஒருவர் இணங்கிச் செல்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணைந்து வாழ்கின்றார்கள்.
ஆனால், அவர்களின் மனிதாபிமானத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அரசியல்வாதிகளும், சுயநலப் போக்கு கொண்ட மதவாதிகளுமே குழப்பியடித்து, அதில் அரசியல் ரீதியாகக் குளிர்காய்ந்து வருகின்றார்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால், இனங்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்கே கொண்டாட்டம் என்ற நிலைமையே அரசியல் ரீதியாகக் காணப்படுகின்றது. இது சுயலாப நோக்கம் கொண்ட அரசியல் பண்பாகத் தலையெடுத்து படிப்படியாக வளர்ந்தோங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
அமைச்சருடைய விஜயத்தின் நோக்கம்
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரையடுத்து, மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டியே சுமணரத்தன தேரோ அரசியலில் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்றார். தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிராக இனவாதத்தைக் கிளப்புவதிலும், வெறுப்பூட்டுகின்ற கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் செய்து வசைபாடுவதிலும் அவர் முன்னணியில் இருக்கின்றார்.
முறையற்ற வகையில் காணிகளைக் கைப்பற்ற முயற்சித்த சிங்களக் குடும்பங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தமிழ் கிராம சேவை அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொண்டதுடன், தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் அடாவடியாக பௌத்த விகாரை அமைப்பதற்கும் அவர் முயன்றிருந்தார்.
அவருடைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரிடமே கட்டுப்பாடற்ற முறையில் நடந்து கொண்டிருந்தார். பகிரங்கமான அவருடைய இந்தச் செயற்பாடுகளை சட்டம் எதுவுமே செய்யவில்லை.
நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும், இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளப்பி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள பௌத்த மத குருக்களுக்கு எதிராகப் பாய்வதில்லை. அவர்களையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் அந்தச் சட்டங்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது.
அம்பிட்டியே சுமணரத்தன தேரோவின் செயற்பாடுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த பதட்ட நிலைமையை சீர்செய்வதற்காக நீதி அமைச்சரும், புத்த சாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.
பதட்ட நிலைமையைத் தணித்து, சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த அச்சத்தைப் பேக்குவதே அவருடைய விஜயத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால், சட்டத்தையும் ஒழுங்கையும் துச்சமாக மதிப்பவரும்,  இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் தூண்டுகோலாக இருப்பவருமாகிய ஞானசார தேரரையும் அமைச்சர் தம்முடன் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்.
இந்தச் செயலானது, அமைச்சருடைய விஜயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது என்றே கூற வேண்டும். முறையற்ற விதத்தில் சுமணரத்தன தேரர் நடந்து கொண்டிருந்ததை நாடும் உலகமும் நன்கு அறிந்துள்ள போதிலும், அவருடைய செயலை நியாயப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மட்டக்களப்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மையினராக உள்ள சிங்கள மக்களைப் பிரதிநிதிப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இல்லாத காரணத்தினால், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமணரத்தன தேரர் நடந்து கொள்வதாக அமைச்சர் கூறியிருக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முனைப்புடன் செயற்படுவதாகக் கூறப்படுகின்றது. மோசமான யுத்தத்தினால் நலிவடைந்துள்ள இனங்களுக்கிடையிலான உறவை சீர்செய்வதற்கு நல்லிணக்கம் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்து, அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இந்த வகையில் வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையிலான ஒரு வாரத்தை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க வாரமாகக் கொண்டாட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இது ஆரம்பமாகவுள்ளது. நாட்டு மக்கள் மத்தியில் சமாதானம், ஒற்றுமை, சகோரதத்துவத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
குற்றப் பொறுப்பும் நீதி வழங்கும் பொறுப்பும்……………..
இந்த அறிவித்தல் வெளியாகியுள்ள சந்தர்ப்பத்திலேயே நீதி அமைச்சரும், புத்த சாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ச, இனவாதச் செயற்பாட்டில் முன்னணி வகிக்கின்ற பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பில் சென்று ஆராய்ந்துள்ளார்.
மட்டக்களப்பு சுமரணத்தன தேரரின் செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்ற வகையிலேயே, அமைச்சர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளார். பௌத்த பிக்குகளின் செய்பாடுகளே அங்கு இனங்களுக்கிடையில் பதட்டத்தை உருவாக்கியது என்பதைத் தெரிந்து கொண்டும்கூட, அது குறித்து கவலைப்படும் வகையிலோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ளும் வகையிலோ அவர் கருத்து வெளியிடவில்லை.
அவருடைய விஜயத்தின் போது ஒரு கட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களை ஒரு நிகழ்வில் பிரசன்னமாகியிருக்கக் கூடாது என தெரிவித்து, வெளியேற்றியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அமைச்சரின் இந்தச் செயலானது, பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதை உறுதிப்படுத்துவதுடன் நில்லாமல், உள்நோக்கம் ஒன்றுடனேயே, அவர் மட்டக்களுப்புக்கான  விஜயத்தை மேற்கொண்டிருந்தாரோ என்று எண்ணுவதற்குத் தூண்டியிருக்கின்றது.
மட்டக்களப்பில் வசிக்கின்ற சிங்கள மக்களுக்கென நாடாளுமன்ற பிரதிநிதிகள் இல்லாத நிலையில், சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற பௌத்த பிக்குகள் இனவாத, மதவாத ரீதியில் செயற்படுவதனால்தான் இங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக, மட்டக்களப்பில் உள்ள தமிழர்கள் நாட்டில் ஒருவித மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியிருக்கின்றார்.
புத்த சாசன அமைச்சர் என்ற ரீதியில் இனவாத, மதவாத நோக்கில் செயற்பட்டிருந்தாலும்கூட அவ்வாறு செயற்படுகின்ற பௌத்த பிக்குகளைப் பாதுகாக்க வேண்டிய கடமைப் பொறுப்புக்காக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கலாம். ஆனால் இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற வகையில் அவருடைய இந்தக் கருத்து விநோதமானது. நேர் விரோதமானது என்பதில் சந்தேகமில்லை.
புத்தசாசன அமைச்சர் என்ற ரீதியில் அவர் பௌத்த மக்களுக்காகச் செயற்பட வேண்டியவராக இருக்கலாம். ஆனால் நீதி அமைச்சர் என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும், அவர்  நீதியாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்..
நீதி அமைச்சர் என்ற வகையில், அவர், நீதியான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும். இந்தக் கடமையும் பொறுப்பும் அவரைச் சார்ந்திருக்கின்றது. அதனை அவர் தவிர்க்க முடியாது. இதனை எவரும் மறுக்க முடியாது.
இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெத்த பிக்குகள் மட்டக்களப்பில் நடந்து கொண்ட சம்பவம் குறித்து பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு புத்த சாசன அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சார்ந்திருக்கின்றது.
அதேவேளை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு சூழலில், அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொண்ட சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் அவரைச் சார்ந்திருக்கின்றது.
நல்லிணக்கம் என்பது……..
இந்த நிலையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் மாறுபட்ட நிலையில் மட்டக்களப்பு விஜயத்தின்போது அவர் செயற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதல்ல. பொறுப்பு கூற வேண்டியதும் நானே, பொறுப்பு கூறப்பட வேண்டிய சம்பவத்திற்கு நீதி வழங்குவதும் நானே என்ற இரட்டை நிலைப்பாட்டிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச காணப்படுகின்றார். குற்றம் புரிந்ததும் நானே நீதி வழங்குவதும் நானே என்றதொரு நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் அமைச்சரின் நடவடிக்கை எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
இந்த நிலையிலேயே, மட்டக்களப்பு சம்பவங்கள் தொடர்பில் நீதி அமைச்சரின் செயற்பாட்டையும், அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களையும் நீதி அமைச்சரின் நீதியற்ற செயல் என சுட்டிக்காட்டி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் கண்டனம் வெளியிட்டிருக்கின்றார்.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தமும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் கையாளப்பட்ட இராஜதந்திர வழிமுறைகளும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாறாத கசப்பான வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நல்லுறவைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது.
அது மட்டுமல்லாமல், யுத்தம் ஒன்று மூள்வதற்குரிய காரணங்களைக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து கண்டறிந்து, வெளிப்படையாக அதற்கான பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். அதனை அந்த அரசு செய்யவில்லை. மாறாக யுத்தத்தில் கிடைத்த வெற்றியையே அரசியலுக்கான முதலீடாக்கி, வெற்றிவாதத்தின் மீது ஆட்சியைக் கொண்டு நடத்தியது.
அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசம் செய்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, யுத்தத்தின் மூலம் கிடைத்த ஆயுத ரீதியான வெற்றியை, அனைத்து மக்களினதும் அரசியல் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும். அத்தகைய அரசியல் மூலோபாயச் செயற்பாட்டையும் முன்னைய அரசு கோட்டை விட்டிருந்தது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாக்கி, அவர்களை மேலும் மேலும் மனம் நோகச் செய்கின்ற நடவடிக்கைகளையே அநத அரசு முன்னெடுத்திருந்தது.
இதன் காரணமாகத்தான் யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
எதேச்சதிகாரப் போக்கில் சென்ற அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சி;ப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கமும், வெற்றிவாதத்தின் நிழலில், இனவாத மதவாத அரசியல் போக்கை ஊக்குவிக்குமானால், இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏட்டளவிலேயே எஞ்சியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அது மட்டுமல்லாமல் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரும்கூட நாளடைவில் பொய்த்து பொல்லாத ஆட்சி நடத்தும் அரசாங்கம் என்ற அவப்பெயருக்கு ஆளாகவும் நேரிடலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More