Home இலங்கை உள்நாட்டில் ஒருமுகம் வெளிநாட்டில் இன்னொரு முகம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

உள்நாட்டில் ஒருமுகம் வெளிநாட்டில் இன்னொரு முகம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin
இலங்கை  அரசின் இன அழிப்புப் போரின் பின்னர், கிளிநொச்சி டிப்போ சந்தியில் உள்ள சந்திரன் பூங்காவை இராணுவ வெற்றிச் சின்னமாக மாற்றினர் அரச படைகள். சந்திரன் பூங்காவின் முன் மதில் மற்றும் டிப்போ சந்தியின் நான்கு புறமும் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட பழமையான கற்கள் கொண்டு சுவர் எழுப்பப்பட்டிருந்தது. தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தச் சுவர் பன்னெடுங்காலமாக, கிளிநொச்சியில் இருப்பதாக அரச படைகள் கூறினர். இப்படித்தான் தமிழர் பூமியில் பௌத்த, சிங்கள அடையாளங்கள் நிறுவிப் புனையப்படுகின்றன.
வடக்கு கிழக்கில் ஏராளமான பௌத்த தொல்பொருட் சின்னங்கள் இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்க சிவில் பாதுகாப்பு படையினரை அனுப்பவுள்ளதாகவும் இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். தமிழ் நிலம் பாரியதொரு பண்பாட்டழிப்பு யுத்தத்தை எதிர்கொள்ளப் போகிறது என்று ஜனாதிபதியின் இந்த சொற்கள் எமை அச்சுறுத்துகின்றன. காலம் காலமாக இலங்கையை ஆட்சி செய்தவர்கள் எதைக் கூறினரோ அதையோ தானும் கூறி, ‘மெய்யான இலங்கை ஜனாதிபதி’ என்பதை மைத்திரிபால நிரூபித்துள்ளார்.
இலங்கையின் இனச் சிக்கலுக்கு பௌத்த பெருமதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்களப் பேரினவாதப் போக்கே அடிப்படையாகும். பெரும்பான்மையின பலத்தை வைத்துக்கொண்டு இந்த தீவில் காலம் காலமாக பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் உரிமையையும் அடையாளத்தையும் மறுப்பதே பேரினவாதப் போக்கின் குணா அம்சம். இந்த ஆதிக்கப் போக்கு தெற்கில் தமிழ் மக்களுடன் தொடர்புடைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் சிங்கள பௌத்த இடமாக்கியது. இதற்கு கதிர்காமம் என்ற தமிழர் ஆலயம் நல்ல எடுத்துக் காட்டு.
அத்துடன் நிறுத்தப்படாமல், வடக்கு கிழக்கில் பரந்தும், காலம் காலமாகவும் நிலைத்தும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்ய, சிங்களக் குடியேற்றங்களுக்கு ஈடாக, இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு ஈடாக, பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் கட்டி எழுப்பட்டுகின்றன. புத்தரின் ஆக்கிரமிப்புப் படையெடுப்பு, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே, அதாவது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு சிங்கள அரசால் வடக்கு கிழக்கில் தமிழ் நில, பண்பாட்டு  அழிப்பு தீவிரமாக முன்னெடுப்படுகிறது.
கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் இராணுவத்தினர் புத்தர் சிலைகளை வைக்கும், பௌத்த விகாரைகளை கட்டி எழுப்பும் பணியை அரச கடமையாக மேற்கொண்டனர். அத்துடன் சிங்கள மக்கள் குடியேறி சிங்கள பௌத்த சின்னங்களை வடக்கு கிழக்கில் நிறுவ அரசால் ஊக்குவிக்கப்பட்டனர். அத்துடன் தமது காணியில் புத்தர் சிலை வைக்க விடுபவர்களுக்கு இலவச வீடு கட்டித் தருவோம் என்று தமிழ் மக்கள் மத்தியிலும் விளம்பரம் செய்ஙப்பட்டது.
இராணுவத்தால் போருக்குப் பிந்தைய காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் ஏராளமான சிங்கள பௌத்த சின்னங்கள் நிறுவி தமிழ் மக்களின் பண்பாடு சிதைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்தப் சிங்கள பௌத்த அடையாளங்கள்மீது இப்போது நெடுங்கால பழமை கொண்டவை என்று புனையத் தயாராகியிருக்கும் மைத்திரி அரசின் போக்கும் நோக்கமும் தமிழ் பண்பாட்டு, வரலாற்று, இன அடையாள அழிப்பே ஆகும்.
ஏற்கனவே வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள சிங்கள பௌத்த பேரினவாதப் பிக்குகள் சிறுபான்மை இனங்களை மிகவும் வெளிப்படையாகவும் கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தி இனவாதக் கருத்தை வெளிப்படுத்தி கலவரங்களை ஏற்படுத்தி இன அழிப்புக்கு முனைகின்றனர்.  இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் உண்மைக்குப் புறம்பான மதவாதக் கருத்துக்கள் அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தி இனவாத மதவாத ஆதிக்க  வன்முறைகளுக்கு வழிசமைப்பதாக அமையப்போகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் குறித்த கூட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத வெறியர்களாகச் செயற்படும் எல்லாவல மேதானந்த தேரர், ஞானசார தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர். மிகச் சமீப நாட்களின் முன்பு இவர்கள் ஆடிய மதவாத வெறியாட்டத்தை எவரும் மறிந்திருக்க மாட்டார்கள். இதற்கு பக்க பலமாக திருகோணமலையிலும் வவுனியாவிலும்  தொல்லியல் இடங்கள் அழிக்கப்படுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.
திருகோணமலையின் பழமையை, அங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னனின் சரித்திரத்தை இவர்கள் அறியாதவர்கள் அல்ல. அவற்றை நன்கு அறிந்து கொண்டு, அங்கு சிங்கள பௌத்த பேரினவாத அடையாளத்தை நிலை நிறுத்துவதே இவர்களின் நோக்கமாகும். தமிழர்களின் வலியை புரிந்து கொள்கிறோம்! எங்களால்தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் என்று சொல்லிக் கொண்டே இத்தகைய மதவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பது இரட்டை முகம் கொண்ட நடிப்பு செயலாகவே அம்பலமாகிறது. உள்நாட்டில் ஒருமுகமும் வெளிநாட்டில் இன்னுமொரு முகமும் காட்டுகிறார் மைத்திரிபால.
தமிழ் மக்கள் தமது தாயக நிலப்பரப்பை, தமிழ் பண்பாட்டை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதற்காகவே பல்வேறு தியாகங்களைப் புரிந்து போராட்டத்தை நடத்தினர். இன்றும் தம் வாழ்வை போராட்டமாக்கினர். இலங்கை அரசு மீண்டும் மீண்டும் பழைய குருடி கதவை திறவடி என்ற போக்கில் செயற்படுவது நல்லதல்ல. அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் ஒரு இனத்தை அழித்துவிட இயலாது. நாம் சரியாய் இருந்திருந்தால் தமிழர்கள் ஆயுதம் ஏந்தியிரார் என்று கூறிய ஜனாதிபதியின் மதவாதக் கருத்தே தமிழ் மக்களை மீண்டும் ஆயுதம்  ஏந்த வைகக்கக்கூடியது என்பதே கவலைக்குரியது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More