அரசியல் கட்டுரைகள் பிரதான செய்திகள்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு

பத்து வருடங்களுக்கு முன்னர், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி. அழகிய சுறுசுறுப்பான ஒரு காலை நேரம். கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் பிளேஸ் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மெய்ப்பாதுகாவலர் சாந்த லக்ஸ்மன் லொக்குவெல என்பவருடன் காரில் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார்.
வீட்டில் இருந்து சிறிது தொலைவு சென்றதும், வாகன நடமாட்டங்களும் பெருமளவிலான மக்கள் நடமாட்டமும் மிகுந்திருந்த ஒரு பிரதான வீதியில் நகர்ந்து கொண்டிருந்த அவருடைய காரின் மீது சரமாரியாகத் துப்பாக்கிக் குண்டுகள் சீறி வந்து துளைக்கின்றன.
சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்ட காரில் இருந்த ரவிராஜும் அவருடைய மெய்ப்பாதுகாவலரும் பட்டப்பகலில் நட்ட நடு வீதியில் கொல்லப்படுகின்றனர். வீதியில் சென்ற பலர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
திடீரென தங்களையும் ஆபத்து சூழ்ந்துவிடும் என்ற உணர்வு ஏற்பட்டதும், அச்சத்தினால் பதட்டமடைந்து, பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடிச்சென்றனர். ஒரு சிலரே விடுப்புப் பார்க்கும் துணிவில் மறைவாக இருந்து என்ன நடந்தது என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்திருந்தனர்.
நடுவீதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு வாகனம் ஒன்று இலக்காகியதையடுத்து வாகனப் போக்குவரத்து திடீரென ஸ்தம்பிதமடைந்தது. எனினும் ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து வாகனங்கள் வீதியில் கிடைத்த சிறிய இடைவெளிகளுக்குள்ளாக ஓடிச் சென்றன.
சுறுசுறுப்பு மிகுந்திருந்த அந்த அழகிய காலை நேரம் இரத்தத்தில் தோய்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீயைப் போல பரவி, தமிழர் நெஞ்சங்களைப் படபடபத்து அதிர்ச்சியடையச் செய்தது.
பத்து வருடங்களுக்குப் பின்னர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு 12.25 மணி. இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை, அமைதியும் மகிழ்ச்சியும் கூடிய கிறிஸ்மஸ் பண்டிகைப் பரிசாக ரவிராஜ் கொலை வழக்கின் எதிரிகள் ஐந்து பேரையும் குற்றமற்றவர்கள், நிரபராதிகள் என பிரகடனம் செய்து தீர்ப்பளிக்கின்றது.
இந்த நள்ளிரவுத் தீர்ப்பையடுத்து, கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.
ரவிராஜின் கொலைச்சம்பவம் பற்றிய செய்தி எவ்வாறு அதிர்ச்சி தரத்தக்க வகையில் வந்து மோதியதோ அதேபோன்று அவரது கொலை வழக்கின் தீர்ப்பும் பலருடைய மனங்களில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
இராணுவ முகாம் ஒன்றிற்கு அருகில் வீதிச் சோதனைக்கான, பொலிசாரின் இரண்டு வீதித்தடை நிலையங்களுக்கிடையில் இடம்பெற்றிருந்த ரவிராஜ் கொலைச் சம்பவம் தொடர்பில், உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் ஓய்ந்து, ஒன்பது வருடங்களுக்குப் பின்பே, சந்தேகத்தின் பேரில் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து, இந்தக் கொலை வழக்கு 2016 செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரவிராஜ் கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணைகளுக்காக பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்று இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களைக் கொண்டதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2016 ஜுலை மாதம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி ஏழு பேர் கொண்ட சிங்கள அறங்கூறும் விசேட அவையினர் முன்னிலையில் இந்த வழக்கை விசாரணை செய்வதற்கான அனுமதியை மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க வழங்கியிருந்தார். எதிரி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் 23 ஆம் திகதி நள்ளிரவு வரையில் ஆலோசனைகளை நடத்திய அறங்கூறும் அவையினர் நள்ளிரவுக்குப் பின்னர் 24 ஆம் திகதி அதிகாலை 12.25 மணியளவில் இந்த வழக்கில் எதிரிகள் ஐந்து பேரும் நிரபராதிகள் என்ற தமது ஏகமனதான முடிவை வெளியிட்டு, அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக அறங்கூறும் அவையினர் முன்னிலையில் நடத்தப்பட்;ட ஒரு வழக்கு விசாரணையில் இவ்வாறு நள்ளிரவில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முரண்பாடுகளும் கேள்விகளும்  
பட்டப்பகலில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தலைநகரப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த ரவிராஜ் கொலை வழக்கில் எதிரிகள் அனைவருமே நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல சட்டத்துறை நீதித்துறை வட்டாரங்களிலும் அதேபோன்று அரசியல்துறை வட்டாரங்களிலும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
விசேடமாக தமிழ் அரசியல்வாதிகள் பலரை இந்தத் தீர்ப்பு சீற்றமடையச் செய்திருக்கின்றது, இந்தத் தீர்ப்புக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிடத் தூண்டியிருக்கின்றது.
ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைகளில் காணப்படுகின்ற முரண்பாடுகளும், அவை தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளுமே இதற்குக் காரணமாகும்.
இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர்களில் சம்பத்  என்றழைக்கப்படுகின்ற பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, வஜிர என்றழைக்;கப்படுகின்ற பிரதீப் சமிந்த என்ற மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் இருவர் அதிகாரிகள் தரத்தினர். அத்துடன் சாமி என்றழைக்கப்படுகின்ற பழனிச்சாமி சுரேஷ், சிவகாந்தன் விவேகானந்தன் ஆகிய இருவரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவைச் சேர்ந்;தவர்களாவர். அத்துடன் பபியன் ரொய்ஸ்டன் டுசைன் என்பவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது குற்றம் சுமத்தப்பட்ட ஆறு எதிரிகளில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மிகுதி ஐந்து பேரில் இருவர் தலைமறைவாகிவிட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஐந்து எதிரிகளுக்கும் எதிராக சாதாரண குற்றச் சட்டம் மற்றம் விசேட சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
விசேட சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதனால், இந்த வழக்கில் சாதாரண குற்றவியல் சட்டம் வலுவிழந்து போகின்ற நிலையில், அறங்கூறும் அவையினராகிய ஜுரிகள் சபை முன்னிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய முடியாது என்று சட்டத்தரணி சுமந்திரன் ஆட்சேபணை தெரிவித்து, வாதம் புரிந்திருந்தார்.
அவருடைய வாதம் புறந்தள்ளப்பட்டது. அறங்கூறும் அவையினர் முன்னிலையில் விசாரணை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு முரண்பாடு.
சுமந்திரனுடைய வாதத்தின்படி, இந்த வழக்கில் கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறு எதிரிகளுடன் சட்டமா அதிபரினால்  இன்னார் என்று அடையாளம் காணப்படாத வேறு சிலரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எதிரிகளுடன் இணைந்து இந்தக் குற்றச் செயலைச் செய்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சட்டமா அதிபருக்குத் இன்னார் என்று தெரியாதவர்கள் -அடையாளம் காணப்படாதவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் தனது வாதத்தின்போது நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கை உரிய முறையில் கவனத்திற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
குற்றப்பத்திரம் ஒன்றில் பெயர் குறிப்பிட்ட எதிரிகளுடன் பெயர் குறிப்பிட முடியாத – இன்னார் என்று அடையாளம் காணப்படாதவர்களும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என தெரிவித்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது.
நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்பொழுது யார் என்ன குற்றம் செய்தார் என்பது துல்லியமாகத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பது முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை.
பெயர் குறிப்பிடப்பட்டவர்களுடன் வேறு சிலரும் இந்தக் குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் அல்லது குற்றச் செயலைத் திட்டமிட்டிருந்தார்கள் அல்லது குற்றச் செயலைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்கள் என்ற அனுமானத்திற்குரிய வகையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, இந்தக் குற்றப்பத்திரம் முழுமையானதா என்ற கேள்வி சாதாரண மக்களிடையே எழுந்திருக்கின்றது.
எனவே முழுமை பெறாத ஒரு குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் ஒரு வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளிப்பது, முழுமையானதொரு நீதித்துறை நடவடிக்கையாகுமா என்ற கேள்வியும் மக்கள் மனங்களில் எழுந்திருக்கின்றது. இதற்கு சட்ட ரீதியான – சரியான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
அதே நேரத்தில் இந்த வழக்கானது, நாட்டின் சட்டங்களை இயற்றுகின்ற ஓர் உயர்ந்த சபையாகிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராகிய ரவிராஜுடன், அவருடைய மெய்ப்பாதுகாவலரான சிங்களவர் ஒருவரும் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியதாகும். அத்துடன் இந்த வழக்கில் நான்கு சிங்களவர்களும் இரண்டு தமிழர்களும் எதிரிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் முழுமையாக சிங்கள இனம்சார்ந்த அறங்கூறும் அவையினரைக் கொண்ட சபை – ஜுரி சபையினால் விசாரணை செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மனச்சாட்சியுமில்லை நீதியுமில்லை
போர்க்குற்ற வழக்குகளில் நீதி கிடைக்கமாட்டாது என்பது இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அனுபவமாகும்.
அந்த வகையில் குமாரபுரம் கொலை வழக்கு, மயிலந்தனை கொலை வழக்கு என்ற வரிசையில் ரவிராஜ் கொலை வழக்கும் இணைந்து விட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதிகளைத் தலைகுனியச் செய்திருக்கின்றது.
இலங்கையின் நீதித்துறை சுயாதீனமற்றது. படையினருக்கு எதிராக நீதி வழங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதியாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
இனரீதியான போர்க்குற்றம் சார்ந்த வழக்குகளில் ஜுரி விசாரணை முறைமை பயன்படுத்தப்படும்போது நீதி கிடைக்கமாட்டாது என்பதற்கு குமாரபுரம் கொலை வழக்கு மயிலந்தனை கொலை வழக்கு என்பன ஏற்கனவே உதாரணங்களாகியிருக்கின்றன.
குமாரபுரம், மயிலந்தனை மற்றும் ரவிராஜ் கொலை ஆகிய மூன்று வழக்குகளிலும் ஜுரிமார்கள் முழுப்பேரும் சிங்களவர்களாகவே இருந்தனர். ரவிராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் யாவரும் சிங்களவர்கள். குமாரபுரம் கொலை வழக்கில் சிங்களவர்களும் சாட்சிகளாக இருந்தார்கள். அதேபோன்று தமிழர்களும் இருந்தார்கள்.
முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைச்சம்பவம் முழுமையான சிங்களப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தமிழராகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜுடன், அவருடைய மெய்ப்பாதுகாவலராகிய சிங்கள மகன் ஒருவரும் கொலை செய்யப்பட்டார்.பொதுமக்கள் மத்தியில் இருந்து ஜுரிகள் என்ற முறையில் சென்ற சிங்களவர்களே இந்த வழக்கில் விசாரணை நடத்தினர்.
ஆயினும் கொலைச் சம்பவத்தில் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டிருந்த போதிலும், இனரீதியான பார்வை மட்டுமல்ல கடற்படையினரைக் குற்றம் சாட்டி எந்தவொரு சிங்களவரும் தீர்ப்பளிக்கமாட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களுடைய தீர்ப்புக்கான தீர்மானம் அமைந்திருந்திருக்கின்றது.
ஜுரிமார்  மனச்சாட்சிப்படி நடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரவிராஜ் கொலை வழக்கில் மனச்சாட்சியும் செயற்படவில்லை. உண்மையான நீதியும் செயற்படவில்லை. இனரீதியான பார்வையும் கடற்படையினரைக் காப்பாற்றுகின்ற நோக்கும் ரவிராஜ் வழக்கின் நிலைமையை மாற்றியமைத்துவிட்டது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
அரச படையைச் சேர்ந்;தவர்களை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தால், அவர் பாதுகாப்புடன் இருக்க வேண்டியுள்ளது. அத்தகைய தீர்ப்பின் பின்னர் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அரசாங்கத்தின் பாதுகாப்பு அவருக்கு உறுதியாகக் கிடைக்கும்.
அதேநேரம் சிங்கள ஜுரிகள் படை அதிகாரிகளைக் குற்றவாளி என தீர்ப்பளித்தால் அவர்கள் துரோகிகளாகத்தான் பார்க்கப்படுவார்கள்.
இத்தகைய ஆபத்தான நிலைமை இருப்பதை ரவிராஜ் வழக்கில் ஜுரிகளாகச் செயற்பட்டவர்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை. ஆயினும் வழக்கு விசாரணைகளின் போக்கிலேயே அவர்கள் தெரிந்திருப்பார்கள் என்று நம்பலாம்.
இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்ட கடற்படையினரை குற்றம் சாட்டினால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் முன்கூட்டியே நிச்சயம் சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்திருந்தார்களா என்பது தெரியவில்லை. தெரியவரப் போவதுமில்லை.
விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் தமிழ் ஜுரி சபையினர், அவரைக் குற்றவாளி என முடிவு செய்து தீர்ப்பளித்தால், அவர்களை தமிழ் மக்கள் நிச்சயமாக சந்தேகப்படுவார்கள். அவர்களைத் துரோகிகள் என கட்டாயம் குறிப்பிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஒரு நிலைமைதான் ரவிராஜ் கொலை வழக்கில் ஏற்பட்டிருக்கின்றது.
ஒரு தமிழ் மகன் அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராகிய ரவிராஜ் கொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் 3 நீதிபதிகளைக் கொண்ட ட்ரையல் அட் பார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை என்பது சட்டத்துறை சார்ந்தவர்களின் ஆதங்கமாகும்.
ட்ரையல் அட் பார் 
பொதுவாக தேசிய முக்கியத்துவம் மிக்க வழக்குகளையே ட்ரையல் அட் பார் முறையில் விசாரிப்பார்கள். எனவே, ரவிராஜ் கொலை வழக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய முக்கியத்துவம் மிக்கவரா அல்லது அந்தக் கொலை வழக்கில் எதிரிகளாகக் கூண்டில் நிறுத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் தேசிய முக்கியத்துவம் பெற்றவர்களா என்பதை அரசாங்கத் தரப்பு நிச்சயமாக சீர்தூக்கிப் பார்த்திருக்கும். பார்;த்திருக்க வேண்டும்.
அத்தகைய ஒரு சீர்தூக்கல் சிந்தனையின் முடிவின் அடிப்படையிலேயே இந்த வழக்கின் விசாரணை முறைமை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடந்தது, என்ன காரணத்;திற்காக ஜுரிகள் முன்னால் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை. இனிமேலும் வெளியிடப்படுமா என்பதும் சந்தேகமே.
இந்த வழக்கு 3 நீதிபதிகளைக் கொண்ட ட்ரையல் அட் பார் முறையில் விசாரிக்கப்பட்டு எதிரிகள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், படையினரைத் தண்டிப்பதற்காகத்தான் 3 நீதிபதிகளை அரச தரப்பினர் வழக்கை விசாரணை செய்ய நியமித்தார்களா என்ற சந்தேகமும் கேள்வியும் சிங்கள மக்கள் மத்தியில் நிச்சயமாக எழுந்திருக்கும்.
அத்தகையதோர், அரசியல் மற்றும் நீதித்துறை சார்ந்த ஒரு சூழல்தான் இப்போது நாட்டில் நிலவுகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அத்தகைய கேள்வி எழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்று அரச தரப்பினர் அஞ்சியுமிருக்கலாம்.
அத்தகைய அச்சம்தான் இந்த வழக்கை ஜுரிகள் முன்னிலையில் விசாரணை நடத்துவதற்குத் தூண்டியிருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமுண்டு.பாரத ரத்ன பிரேமச்சந்திரன் கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா எதிரியாகக் குறிப்பிடப்பட்டு ட்ரையல் அட் பார் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் கொல்லப்பட்டவரும், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரும் இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். தேர்தல் பரப்புரையின் போது இருவரும் மோதிக்கொண்டார்கள். ஒரு தேர்தல் கால ரவுடிச்சண்டையின் விளைவாகவே இங்கு கொலை விழுந்தது.
ஆயினும் அதற்குத் தேசிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ட்ரையல் அட் பார் முறையில் 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார்.
ஆனால் ரவிராஜ் கொலை வழக்கிற்கு அந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்காக உரத்து குரல் கொடுத்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரே இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனை காரணமாகக் கொண்டுதான் ட்ரையல் அட் பார் முறையிலான விசாரணை நடத்தப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது.பாதாள குழுச் சண்டையின் கொலைக்குக் கூட ட்ரையல் அட் பார் விசாரணை நடத்தப்பட்ட முன் உதாரணம் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கானது, ட்ரையல் அட் பார் முறையில் 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டிருந்தால், இலங்கை நீதித்துறையின் மீது இப்போது எழுந்துள்ளதைப் போன்ற கடும் விமர்சனங்கள் எழுந்திருக்க மாட்டாது. ஏனெனில் நீதிபதிகள் துறைதோய்ந்தவர்கள். சட்டரீதியாக ஆராய்ந்து தீர்ப்பளித்திருப்பார்கள்.
அவர்கள் அளிககின்ற தீர்ப்புக்குரிய காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த நிலைமை இங்கு ஏற்படவில்லை
காரணம் கேட்க முடியாது மாற்றமும் செய்ய முடியாது
சட்டமும் சட்ட நுணுக்கங்களும் ஒரு வீதம் கூட தெரியாத ஜுரிகள் சபையினர் அளி;த்த தீர்ப்பின் காரணமாக இந்த வழக்கில் நீதிபதிகளுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறைக்கு அவமானம் ஏற்படுத்திய தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு கருதப்படுகின்றது.
இந்த வழக்கில் நீதிபதி தவறிழைக்கவில்லை என்பது சட்டத்துறை சார்ந்தவர்களின் வாதமாகும். ஏனெனில் ஜுரிகள் சபையொன்றின் முன்னால் நடைபெறுகின்ற வழக்கில் ஜுரி சபையினர் எடுக்கின்ற முடிவின்படி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நீதிபதியைச் சார்ந்திருக்கின்றது.
அதேவேளை, ஜுரி சபையினர் எடுக்கின்ற முடிவுக்கு, அவர்களிடம் நீதிபதி காரணம் கேட்க முடியாது. அதேபோன்று ஜுரி சபையினர் எடுக்கின்ற முடிவில் மாற்றம் செய்யவும் அவரால் முடியாது.
அத்தகைய அதிகாரம் நீதிபதிக்கு சட்ட ரீதியாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜுரிகளின் முடிவிற்கு அமைய தீர்ப்பை மட்டுமே அவரால் வழங்க முடியும். இந்த நிலையில், தமிழ் அரசியல்வாதியும் சட்டவாக்கத்திற்கான உயர்ந்த சபையாகிய நாடாளுமன்றத்தின் உறுப்பினருமாகிய ஒருவருடைய கொலை வழக்கில் நீதித்துறை தோல்வி கண்டிருககின்றது.
இதனால் பலரும் நீதித்துறையை சாடியிருக்கின்றனர். நீதித்துறையின் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றனர். இந்தத் தீர்ப்பையடுத்து அரசியல்வாதிகள் பலரும் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
அதேபோன்று சில அரசியல்வாதிகள் சரியான முறையிலேயே நீதி வழங்கப்பட்டதாக சப்பைகட்டு கட்டியிருப்பதையும் காண முடிகின்றது. இங்கு நீதிபதி குற்றம் இழைத்ததாகக் கூற முடியாது. ஜுரிகளின் முடிவையே பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர். ஜுரிகளின் முடிவினால் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சரிவு நிலைமையை சீர் செய்வதற்கு நீதிபதிகளினால் முடியாமல் போயிருப்பது துரதிஸ்டமாகும்.
போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு இலங்கையின் நீதித்துறை சுதந்திரமானதல்ல. சுயாதீனத்தைக் கொண்டதல்ல என்று குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிபதிகளும் சர்வதேச விசாரணையாளர்களும் தேவை என்ற கோரிக்கை ஏற்கனவே சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பானது, எதிர்வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்து அவரை, கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, ரவிராஜையும், அவருடன் இருந்த அவரது மெய்ப்பாதுகாவலரையும் கொலை செய்த பின்னர் கொலையாளியை மீண்டும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஏற்றிக் கொண்டுவந்துவிட்ட குற்றச் செயலுக்கான உடந்தையாளி அரச சாட்சியாக மாற்றப்பட்டார்.
சட்டமா அதிபரினால் குற்றநடவடி கோவையின் 256 ஆம் பிரிவின் கீழ் நிபந்தனையின் கீழ் இவருக்கு மன்னிப்பளித்து, அவரை, அரச சாட்சியாக – அப்ரூவராக மாற்றியிருந்தனர். நடைபெற்ற சம்பவம் பற்றிய உண்மையைக் கூறினால், நீ செய்த குற்றத்தை மன்னிப்போம் என்பது இந்த விடயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனையாகும்.
இத்தகைய சாட்சியின் சாட்சியத்தை அடிநாதமாகக் கொண்ட ரவிராஜ் கொலை வழக்கில் ஜுரி முறைமையின் கீழ் விசாரணை நடத்தியது பொருத்தமான செயலல்ல என்பது சட்டவல்லுநர்களின் கருத்தாகும்.
மொத்தத்தில் இந்த வழக்கு ஜுரிமார்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையானது, முறையற்ற ஒரு செயலாக நிரூபணமாகியிருக்கின்றது. ரவிராஜ் கொலை வழக்கு நடைபெற்ற விதம், சாட்சியப் பதிவுகள் போன்ற அனைத்தும் செய்தித்தாள்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று ஜுரிகள் சபையினர் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு, கடற் படையினரைப் பாதுகாப்பதற்காகவே வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாக அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கத்தக்க வகையில் வந்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் இந்தத் தீர்ப்பு நீதித்துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போர்க்குற்றச் சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்த்து, சர்வதேச விசாரணைகளைப் புறந்தள்ளியுள்ள அரசியல் வட்டாரங்களின் நிலைப்பாட்டைத் தடுமாறச் செய்திருக்கின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.