குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்து, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்தும் இன்று மூன்றாவது நாளாகவும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளாகவும் தொடரும் இவ் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள விவசாயபீடத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆரம்பித்த இப் போராட்டம் அதனைத் தொடர்ந்து பொறியியற்பீட வளாகத்திலும் இடம்பெற்றது.
அரசியல் தலையீடுகளற்ற புதிய நியமனங்கள் வேண்டும், மொழிக் கொடுப்பனவு வேண்டும், சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், மாதாந்த இழப்பீட்டு தொகையை சமமாக வழங்கு, ஓய்வூதியத் திட்டத்தில் பாராபட்சம் ஏன்? சகல பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான காப்புறுதித் திட்டம் வேண்டும், சொத்துக்கடன் தொகையை அதிகரி போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தமது கோரிக்கைகள் நிறைவேற்றப் படாதவிடத்து தமது போராட்டங்கள் பல வடிவங்களை எடுக்கும் எனவும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியில் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment