Home கட்டுரைகள் ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-

ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-

by admin

ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது.

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.
தமிழகத்தில், இந் நாளில்  விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை ‘ஆடிப்பெருக்கு’ என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழகத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.
ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்
இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை… என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடசாலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியதென்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.
ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது. சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
– நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்
இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது. விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டது.
ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும்.
பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு – கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More