Home இலங்கை மாணவர் கல்வி தடைப்படாமல் செயற்பட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்:-

மாணவர் கல்வி தடைப்படாமல் செயற்பட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்:-

by admin

16.07.2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையான நிகழ்வினையும், நிலைப்பாட்டினையும் தொடர்புசாதனங்கள் மூலம் மக்களுக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்து தகவல்களை பத்திரிகைகளிலும் சமூக வலைத் தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்கள் சுய இலாபம் கருதி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

பல்கலைக்கழகங்களில் முரண்பாடுகள் அல்லது குழு மோதல்கள் பல அடிப்படைகளில் எழுந்து வருவதை பல்கலைக்கழகத்தில் படித்தோர் அனுபவரீதியாகவும் பல்கலைக்கழகத்தில் படியாதோர் அறிவு ரீதியாகவும் அறிந்திருக்கின்றார்கள். பல்கலைக்கழகங்களில் இத்தகைய முரண்பாடுகள் சிரேஷ;ட மாணவர், கனிஷ;ட மாணவர் என்ற அடிப்படையில், மாணவ மன்ற தேர்தலின்போது, காதல் விவகாரம், விழாக்கள் ஒழுங்கமைத்தல் தொடர்பாக, விழாக்களை ஒரு குழு குழப்புவது தொடர்பாக, நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்த முனைவது தொடர்பாக, மாணவர்கள் சமநிலை இழக்கும்போது இவ்வாறு பல அடிப்படைகளில் முரண்பாடுகள் குழுமோதல்கள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுவதுண்டு. இவ்வாறான நிலமை சகல பல்கலைக்கழகங்களிலும் காணப்படுகின்றது. அதன் ஒரு வழி வந்ததாகவே 16.07.2016இல் விஞ்ஞானபீடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்த முனைந்தபோது ஒரு சிறு குழுவினரிடையே நடைபெற்ற முரண்பாடே தவிர வேறு எந்த விடயமும் இல்லை. கடந்தகாலத்தைப் போல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற சகல மாணவர்களும் ஒன்றாகப் படித்து, ஒன்றாக அறைகளில் தங்கி, ஒன்றாக விளையாடி, ஒன்றாக நிகழ்வுகளை நடத்தி, ஒற்றுமையாக இருப்பார்கள். இந்நிலையில் மாணவர்களிடையே எந்த ஒரு அடிப்படையிலும் குழு மனப்பான்மையினையும் ஏற்படுத்த யாழ்பபாணப் பலக்லைக்கழ மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது. ஆகவே இத்தகைய ஓர் சூழ்நிலையினை உருவாக்குவதற்கு மாணவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் அரசு, அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள், சமூக நலன் அமைப்புக்கள் இச்சூழ்நிலையினை உருவாக்கவும் தொடர்ந்தும் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கையினை இதய சுத்தியுடன் மேற்கொள்ள வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

இந்நிகழ்வு தொடர்பாக பல்கலைக்கழகம் உள்வாரியாகவும், மூன்றுபேர் கொண்ட குழுவினை அமைத்து சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளுகின்றது. நீதிமன்றமும் இவ்விடயத்தில் விசாரணையினை மேற்கொள்ளுகின்றது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதேவேளை எந்த ஒரு மாணவனும் பாதிக்காத வகையிலும் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் சுமூகமாக செயற்படக்கூடிய வகையில் நீதியான விசாரணை நடைபெற வேண்டுமெனவும் எதிர்பார்த்து நிற்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளின்றி படித்து இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் துறைசார்ந்த நிபுணர்களாக, பண்பாளர்களாக வாழ்கின்றார்கள். இத்தகைய கல்விமான்களையும் பண்பாளர்களையும் உருவாக்கிய பெருமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. இன்று தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்து சமூக நன்மதிப்புடன் 1974ஆம் ஆண்டிலிருந்து இப்பல்கலைக்கழகம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தபோதிலும் துணைவேந்தராக இருந்தவர்கள் அச்சவால்களில் வெற்றி கொண்டு சிறப்பாக வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தினை நிர்வகித்து வந்திருக்கின்றார்கள். அதன்வழி வந்ததாக தற்போதைய சாதகமான சூழ்நிலையினை பயன்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை பல் துறைகளிலும் வளர்த்து ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்கு நிகராக ஆக்கிய பெருமை தற்போதைய துணைவேந்தராக இருக்கின்ற பேராசிரியர். செல்வி வசந்தி அரசரட்ணம் அவர்களை சார்ந்தது. இத்தகைய நிர்வாகத்திறனுக்கு, ஊழல் அற்ற அர்ப்பணிப்பான நிர்வாக திறனும், சுமூகமான உறவைப் பேணும் நடத்தையுமே அடிப்படையாக அமைகின்றது. இந்நிலையில் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என்பதற்காகவும், எதிர்பார்த்த துறை கிடைக்கவில்லை என்பதற்காகவும் தனிப்பட்ட சுயநலம் கொண்ட ஒருசிலர் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு எமது பல்கலைக்கழகம் நன்மதிப்பை குறைக்க முனைகின்றனர். அத்துடன் மாணவர்கள் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களையும் பத்திரிகைகளிலும், சமூகவலைத் தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். இவர்களுடைய உண்மையான நோக்கம் பல்கலைக்கழகத்தின் சுமூக செயற்பாட்டிற்கு இடையூறாக அமைவதும் அதன் நற்பெயரை கெடுப்பதுமாகவே அமைந்திருக்கின்றது. உண்மைக்கு மாறான தகவலை சமூகத்திற்கு வழங்கி எமது பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை கெடுப்பது கண்டணத்திற்கு உரியது. சிலர் உண்மை நிகழ்வுகளை திரிவு படுத்திக் கூறுவதில் அக்கறை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே சகல தரப்பினரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுடைய கல்வி தடைப்படாமல் இருப்பதற்கு பல்கலைக்கழகத்தினை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More