கட்டுரைகள்

இனம் சார்ந்த அரசியல் மயப்பட்ட சூழலில் உண்மையான நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்:-

இனம் சார்ந்த அரசியல் மயப்பட்ட சூழலில் உண்மையான நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்:-

குமாரபுரம் கிராமத்து மக்கள் மட்டுமல்ல. குமாரபுரம் படுகொலை வழக்கின் விசாரணைகளில் அளிக்கப்பட்ட சாட்சியங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்த சாமான்யர்களும் இந்த வழக்கு மேன் முறையீடு செய்யப்பட வேண்டும் என்ற மன எழுச்சியைக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

குமாரபுரம் கொலை வழக்கின் எதிரிகளாகிய 6 இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி வெளியாகியதும், என்ன இப்படி நடந்திருக்கின்றது என்று பெரிய ஏமாற்றத்துடன் அங்கலாய்த்தவர்களே அதிகம். அதிலும் இது ஏன் இப்படி நடந்தது, என்ன காரணம் என்று அறிவதற்கான மன உந்துதலைக் கொண்டிருந்தவர்களையும் காணக்கூடியதாக இருந்தது.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நீதிமன்றத்தில் சட்ட ரீதியான ஆதாரங்கள் அவசியம். அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சட்டவிதிகளுக்கு உட்பட்ட வகையில் தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சட்ட நடவடிக்கைக்கு உட்டபட்ட வகையிலேயே அறங்கூறும் அவையோர் விசாரணையின்போதும் தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

ஆறங்கூறும் அவையோர் முன்னிலையில் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விருப்பத்திற்கு விடப்பட்டிருக்கின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தனக்கு நியாயமான முறையில் நீதி கிடைக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் நிரபாராதி ஒருவர் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பவற்றை உறுதி செய்வதற்காக சட்டத்தில் இந்த வசதி செய்யப்பட்டிருக்கலாம்.

ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், அவர் உண்மையில் குற்றம் செய்தாரா என்பது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால், அவர் விடுதலையாவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதேநேரம் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு யார் காரணம் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு எழுவது இயல்பு. அந்த வகையிலேயே குமாரபுரம் கிராமத்து மக்களும் சரி சமூகத்தில் உள்ள சாமான்யர்களும் சரி இன எழுச்சிக்கு உள்ளாகி குமாரபுரம் படுகொலை வழக்கில் மேன் முறையீடு செய்யப்பட வேண்டும் என்ற ஆவலையும் எதிர்பார்ப்பையும் வெளியிட்டிருக்கின்றார்கள் என்று கருதுவதற்கு இடமுண்டு.

அதேவேளை, மறுபுறத்தில்இராணுவத்தினர் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதை  குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர செய்தியாளர்களுடனான சந்திப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இந்த அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகி;ன்றது என்று எதிர்க்கட்சியினர் செய்து வருகின்ற அரசியல் பிரசாரத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அரசியல் கூற்றை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அத்துடன் எதிர்க்கட்சியில் உள்ள பொது எதிரணியினர் நடத்திய பாதயாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என கோர் செய்யப்பட்ட விண்ணப்பத்தை சில நீதிமன்றங்கள் நிராகரித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இப்போது நாட்டில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகின்றது என்பதற்கான இது சிறந்த உதாரணமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதேவேளை, இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் பொதுபலசேன ஆகிய கட்சிகளை அவர் உதராணம் காட்டி இந்தத் தடையுத்தரவைக் கோரியிருந்தார். அவருடைய கோரிக்கையை எதிர் மனுதாரார்கள் எதிர்த்திருந்தனர். அத்தகைய தடையுத்தரவை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அவர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த உச்ச நீதிமன்றம் சரியான சட்டரீதியான காரணங்களை  அந்த மனு கொண்டிருக்கவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.

ஒரு சில செய்திக்கண்ணோட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உதாரணம் காட்டி நாட்டில் நீதி;த்துறை சுதந்திரமாகச் செயற்படுகின்றது என வாதிட்டு வருகின்றனர். ஆனால் இந்த நிலைப்பாடு குறித்து சாமான்யர்கள் மத்தியில் சந்தேகங்களே நிலவுகின்றன.

ஜுரிமார் – அறங்கூறும் அவையினர்

கொலை, கூட்டுக் கொலைகள் அல்லது கொலை முயற்சி மற்றும் பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்புனர்வின் பின்னரான கொலை போன்ற பாரதூரமான குற்றச் செயல்கள் தொடர்பில் ஜுரிமார் – அறங்கூறும் அவை விசாரணை முறை நாட்டில் கைக்கொள்ளப்படுகின்றது. இந்த அறங்கூறும் அவைக்கு சட்டத்துறை சார்ந்த புலமையற்ற சமூக முக்கியஸ்தர்களே உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர்கள், நிர்வாக சேவையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றனர். குறிப்பாக இணக்கசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுகின்ற சமூகப் பெரியார்கள் அறங்கூறும் அவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் வழக்கு விசாரணைளின்போது சாட்சிகளினால் அளிக்கப்படுகின்ற சாட்சியங்களையும் வழக்கு நிகழ்வுகளையும், ஆதாரங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்கி;ன்றார்கள்.

அவர்களுக்கு உதவியாக அரச சட்டத்தரணியும், எதிர்த்தரப்பு சட்டத்தரணியும், வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்குகின்ற நீதிபதியும் சாட்சியங்கள், வழக்கு நிகழ்வுகள் மற்றும் வழக்கில் முன்வைக்கப்படுகின்ற ஆதாரங்கள் என்பவற்றில் உள்ள சட்டரீதியான அம்சங்கள் குறித்து அறங்கூறும் அவiயிருக்குத் தெளிவுபடுத்தி அவர்கள் ஒரு முடிவுக்கு வரத்தக்க வகையில் அவர்களை வழிநடத்துவார்கள்.

விசாரணையின் முடிவில் இடம்பெறுகின்ற தொகுப்புரைகளிலும் சட்டரீதியான அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்படும். இறுதியில் அறங்கூறும் அவையினர் தமது அறிவுக்கும அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் சமூக நீதி சார்ந்து தமது மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பதை முடிவு செய்து அறிவிப்பார்கள்.

அறங்கூறும் அவையினர் ஏழு பேரும் ஏகோபித்த முடிவை மேற்கொள்ளாவிட்டால் பெரும்பான்மையோரின் கருத்துக்கமைவாக தீர்ப்பு வழங்கப்படும். இத்தகைய நடைமுறை இனப்பிரச்சினை தீவிரம் பெற்று, இன ரீதியான சிந்தனைகள் மேலோங்கியுள்ள சூழலில் உண்மையான குற்றவாளிகள் சரியான முறையில் இனங்காணப்படுவது சந்தேகமே என்ற கருத்து சட்ட வல்லுனர்கள் மத்தியில் நிலவுகின்றது.

பண்டாரவளை பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாம் படுகொலை

அறங்கூறும் அவையோர் – ஜுரி முறையிலான விசாரணை ஒருபக்கம் இருக்க சமூகத்தில் பெரும் தாக்கத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்துகின்ற மேசாமான கொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவு, வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக மூன்று பேர் கொண்ட  நீதிபதிகள் குழாம் – ட்ரையல் எட் பார் முறையில் விசாரணைகளi நடத்தும் நடைமுறையும் நாட்டில் கைக்கொள்ளப்படுகின்றது. இந்த நடைமுறையின் மூலம் சரியான முறையில் நீதி வழங்கப்படுகின்றதா என்பதும் கேள்விக்குற்யாகவே உள்ளது.

இவ்வாறான விசாரணைகளின் மூலம் அளிக்கப்படுகின்ற தீர்ப்புக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்த நீதித்துறை வரலாறும் இலங்னையில் பதிவாகியிருக்கின்றது. பண்டாரவளை பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற படுகொலை வழக்கு சிறந்த உதாரணமக அமைந்திருக்கின்றது.

இந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களான 18 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 27 இளைஞர்கள் வெட்டியும் உயிரோடு எரித்தும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தச் சம்பவம் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை வேளையில் இடம்பெற்றது.

விடுதலைப்புலிகளுக்கான புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த வேனையில் அவர்கள் கலகத்தில் ஈடுபட்டதாகவும் அங்கு காவலுக்கு இருந்த பொலிசாரினால் அதனை அடக்க முடியாதபோது பொலிசாரையும் மிஞ்சிய காடையர் கூட்டம் ஒன்று அந்த முகாமுக்குள் புகுந்து அந்த இளைஞர்களைத் தாக்கியதால் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக அங்கு காவல் கடமையில் இருந்த இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர். ஒரு சில பொலிசாரே அங்கு கடமையில் இருந்தார்கள். அப்போது கத்திகள், வாள்கள், பொல்லுகள் என்பவற்றுடன் அந்த முகாமுக்குள் புகுந்த கோஸ்டியொன்று அந்த இளைஞர்களை வெட்டிச் சரித்து தீயிட்டுக் கொளுத்தியது.

கண்கண்ட சாட்சியங்களின்படி, 4 இளைஞர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் 11 பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத வகையில் எரிந்திருந்தன. மின்சாரத்தில் மரம் அரியும் வாளினால் இளைஞன் ஒருவனின் கழுத்து அறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் படுகொலைச் சம்பவம் அப்போது நாட்டைப் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியிருந்தது. தமிழர் தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நாட்டின் தென்பகுதி அதற்கு எதிர்மாறான ஓர் உணர்வையே பிரதிபலித்திருந்தது.

இருப்பினும் பத்தொன்பது பொலிசார், சிங்கள தேசியவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட 24 சிங்களவர்கள் உட்பட 44 பேர் இந்தக் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்டார்கள்.இவர்களில் இரண்டு பொலிசாருக்கும் 3 சிங்களவர்களுக்கும் 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான சரத் அம்பேபிட்டிய, எரிக் பஸ்நாயக்க, உப்பாலி அபேரத்ன ஆகிய 3 நீதிபதிகள் குழாமின் ட்ரையல் எட் பார் நீதி விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிந்துனுவௌ முகாமில் 27 பேரைக் கொலை செய்ததான கொலைக்குற்றச்சாட்டு உட்பட 83 குற்றச்சாட்டுக்களுடன், 14 பேரைக் கொலை செய்ய முற்பட்டதாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஆயினும் ட்ரையல் எட் பார் விசாரணையில் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யப்பட்டதையடுத்து, 2005 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஐந்து நீதியரசர்களைக் கொண்ட நீதியரசர்கள் குழு அந்த மரண தண்டனையை ரத்துச் செய்து அவர்களை விடுதலை செய்தது.

ட்ரையல் எட் பார் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் உச்ச நீதிமன்ற விசாரணையின்போது பிந்துனுவௌ படுகொலை நிகழ்வுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாக உறுதியான சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி இவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்கள்.

நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள சிறைப் படுகொலைகளுக்கே நீதி கிடைக்கவில்லை என்றால்…….

இலங்கையில் காலத்திற்குக் காலம், இன ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்  இடம்பெற்று வருகின்ற கூட்டுப் படுகொலைகள் பாலியல் வன்புனர்வுக் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான நீதி வழங்கப்படுகின்றதா என்ற கேள்வி நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகின்றது.

கடந்த 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது வெலிக்கடை சிறைச்சாலையில் இரு வேறு சம்பவங்களில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தச் சம்பவம் நீதிமன்றக் காவலில் சிறைக்காவலர்களின் பொறுப்பில் பாதுகாப்புக்காக விடப்பட்டிருந்தவர்களைப் பாதுகாப்பதற்கு உரியவர்களும் அரசாங்கமும் தவறிவிட்டது அல்லது வேண்டுமென்றே உதாசீனம் செய்துவிட்டது என்ற பழிச் சொல்லுக்கு இடமளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களின் பின்னர் அரசியல் கைதிகளாக புனர்வாழ்வுப் பயிற்சிக்காகத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறி பண்டாரவளை பிந்துனுவௌ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 27 இளைஞர்கள் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதன் காரணமாக சிறைச்சாலைகளில் அல்லது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர்கள் அங்கு பாதுகாக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற அரசாங்கத்தின் நடைமுறைக்குப் பதிலாக அவர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டுவிடுவார்களோ என்ற பதட்டத்திற்கும் பேரச்சத்திற்கும் தமிழ் சமூகத்தினர் உள்ளாக்கப்பட்டார்கள். இந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே பின்னாளில் நிமலரூபன், டெல்றொக்சன் தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் அடித்து நொறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வரலாறு பதிவாகியிருக்கின்றது.

நீதித்துறையின் பொறுப்பில் கைதிகளாக வைக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நீதி வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஏனைய கூட்டுக்கொலைகள், பாலியல் வன்புனர்வு, பாலியல்வன்புனர்வுக் கொலைகள் என்பவற்றிற்கு உரிய நீதி இங்கு கிடைக்கப் போவதில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. மிகவும் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒரிரு சம்பவங்களில் நீதி வழங்கப்பட்டிருப்பதைக் கவனத்திற் கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் பெரும்பான்மையான சம்பவங்களில் சமூக நீதி சார்ந்த நிலையில் சிந்திக்கும்போது சரியான நீதி வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே காரியங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் மத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையற்ற தன்மை காலம் காலமாகத் தொடர்ந்து நிலவி வருகின்றது.

இத்தகைய சூழலில்தான் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் சம்பவங்களுக்கும் உள்நாட்டு விசாரணைகளில் உரிய நீதி வழங்கப்படமாட்டாது என்று பாதிக்கப்பட்ட மக்கள அடித்துக் கூறுகின்றார்கள். நீதித்துறையில் நம்பிக்கையற்ற நிலை காரணமாகவே, சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் அவர்கள் அழுங்குப் பிடியாக இருக்கின்றார்கள்.

ஜுரி – அறங்கூறும் அவையினர் விசாரணை முறையிலும்சரி, 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் விசாரணையிலும்சரி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவது சந்தேகமே என்பது இந்த நாட்டின் யதார்த்தமாக உள்ளது.

எனவேதான், பொறுப்பு கூறும் விடயத்தில் – இனம் சார்ந்த உணர்வுகள் கூர்மை பெற்றிருக்கின்ற அரசியல் மயப்பட்ட சூழலில் உரிய நீதி வழங்கப்படும் என்பது குதிரைக் கொம்பாகவே கருதப்படுகின்றது.

எனவே உண்மையான நீதி வழங்கப்பட வேண்டுமானால், மூன்றாந்தரப்பு அவசியம். இன ரீதியான உணர்வுகள் மேலோங்கி நடுநிலைமையைப் பாதிக்கின்ற போக்கில் இருந்து விடுபட வேண்டுமானால் சர்வதேசத்தின் பங்களிப்பு நீதி விசாரணை பொறிமுறையில் நடைமுறையில் அவசியம்.

அத்தகைய பொறி முறையொன்றே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களுக்கு மேற்பட்ட கால தாமதத்தின் பின்னராவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.