Home இலங்கை இரனைமடுகுள அபிவிருத்தியில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நன்னீர் மீனவர்கள். மு.தமிழ்சசெல்வன்:-

இரனைமடுகுள அபிவிருத்தியில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நன்னீர் மீனவர்கள். மு.தமிழ்சசெல்வன்:-

by admin

2017 இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரும் வகையில் கிளிநொச்சி இரனைமடுகுளம் 5200 மில்லியன் ரூபாக்கள் செலவில் அபிவிருத்திச் செய்யப்பட்டு வருகிறது.
ஆசிய அபிவிருத்தி  வங்கியின் நிதி உதவியின் கீழ் இரனைமடுகுளத்தின் அபிவிருத்திப் பணிகள் இரண்டு பிரிவுகளாக இடம்பெறுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2017 இறுதிக்குள்  நிறைவு செய்யப்படல் வேண்டும். அதற்கமைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இடம்பெற்று வருகிறது.
இந்த அபிவிருத்திப் பணிகளுக்காக 2016 மற்றும் 2017 ஆண்டுகளின் இரனைமடுக்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை. காரணம் குளத்தின் அணைக்கட்டு உயர்த்தப்படுவதனால் குளத்தில் நீர் வழமை போன்று சேமிக்கப்படாது திறந்து விட்டப்பட்டது. இதற்காக பல தடவைகள் மாவட்டச் செயலகத்தில்  கூட்டங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இவ்வாறு நடத்தப்பட்ட கூட்டங்களிலும்,கலந்துரையாடல்களிலும் இரனைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புகள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கமக்கார அமைப்புகள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்படுவதற்கான காரணம் அவர்கள் இரனைமடுக்குளத்தை மட்டும் நம்பி தங்களுடைய வாழ்க்கையை கொண்டு செல்கின்றவர்கள் என்பதனால்.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை நெற்செய்கையில்  ஈடுப்படுகின்றவர்கள் இரண்டு போக பயிர்ச்செய்கையையே மேற்கொண்டு வருகின்றனர். ஆதாவது சிறுபோகம், பெரும்போகம். இதில் சிறுபோகம் குளத்து நீரில் முழுமையாக தங்கிநிற்கிறது. பெரும்போகம் பெருமளவுக்கு பருவகால மழையை நம்பி மேற்கொள்ளப்படுகிறது. எனவே இரனைமடுகுள அபிவிருத்தியில் அதன் கீழான கமக்காரர்களுக்கு 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சிறுபோக நெற்செய்கையே தவிர்க்கப்பட்டிருக்கிறது.
குளம் என்று வருகின்ற போது அது பிரதானமாக விவசாயத்தையே முதன்மைப்படுத்துகின்றமையினால் இரனைமடுகுளத்தின் அபிவிருத்தியிலும் விவசாயிகளே முதன்மைப்படுத்தப்பட்டு அவர்கள் எல்லாக் கூட்டங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும்  அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் கருத்துக்களும் அபிவிருத்தி நடவடிக்கையில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் இங்கே  இந்த இரனைமடுகுளம் அபிவிருத்தியில் மிகப்பெரும் திட்டமிடல் குறைபாடு ஒன்று ஏற்பட்டிருப்பதாக தற்போது பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ஆதாவது வேறு எந்த தொழிலுக்கும் பழக்கப்படாத இரனைமடுகுளத்தைய முழுமையாக நம்பி தங்களது வாழ்க்கையை கொண்டு சென்ற சுமார் 300 வரையான  இரனைமடுகுள நன்னீர் மீன்பிடி தொழில் ஈடுப்பட்டு வந்தவர்கள் இரனைமடுகுள அபிவிருத்தியில் கவனத்தில் எடுக்கப்படாமையே  இந்தக் குறைபாடு என விமர்சிக்கப்படுகிறது.
எந்தவொரு மிகப்பெரும் அபிவிருத்தி நடவடிக்கையின் போது அதனால் பாதிப்புக்குள்ளாகின்றவர்களின் விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு அதற்கான நிவாரன ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். உலக வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் அபிவிருத்தியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆசிய அபிவிருத்தி வங்கியின்  இரனைமடுகுள அபிவிருத்தி திட்டத்தில் முழுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவர்களுக்கு எவ்வித நிவாரன ஏற்பாடுகளும் காணப்படவில்லை.

இரனைமடுகுளத்தை நம்பி கடந்த முப்பது முப்பதைந்து வருடங்களாக நன்னீர் மீன் பிடியில் பல நூற்றுக்காணக்கான குடும்பங்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களால் வேறு தொழிலை மேற்கொள்ள முடியாது நன்னீர் மீன் பிடியும் அதனோடு இணைந்த தொழிலையும் மேற்கொண்டு வந்தவர்கள்.
இரனைமடு மேற்கு கரையில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 132 நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களும், குளத்தின் கிழக்கு கரையில் 85 வரையான தொழிலாளர்களும் அவர்களுது குடும்பங்களும் இரனைமடுகுளத்தை நம்பியே தங்களுடைய வாழ்க்கையை கொண்டு நடத்தியவர்கள். அது மாத்திரமன்றி 35 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள்  நன்னீர் கறுவாடு உற்பத்தியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அத்தோடு 42 வரையான வியாபாரிகளும்  இரனைமடுகுளத்தை நம்பியே வாழக்கை நடத்தியவர்கள்.
ஆனால் இன்று இவர்கள் அனைவரினதும் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் குளத்தில் நீர் இல்லை, நீர் இன்மையால் போதிய மீன் இல்லை, இதனால் வருமானம் இல்லை, அதனால் வாழ்வாதாரம் இல்லை. என்ற நிலையாகிவிட்டது.
எனவே இது தொடர்பாக இரனைமடு நன்னீர் மீன்பிடி சங்கத்தின்  தலைவர் வெள்ளைச்சாமி புஸ்பதேவன்  எம்மிடம் கருத்து தெரிவித்த போது இன்றைக்கு கிட்டத்தட்ட முப்பது முப்பதைந்து வருடங்களாக இரனைமடு குளத்தினை நம்பியே எங்களுடைய வாழக்;கையை கொண்டு நடத்தி வருகின்றோம். எங்களுடைய ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு ஜந்து அங்கத்தவர்கள் உள்ளனர். இவர்கள் எங்களை நம்பியே வாழ்கின்றனர் நாங்கள் குளத்தை நம்பியே இருக்கின்றோம்.தற்போது இரனைமடுகுளத்தில் தொழில் செய்யும் அளவுக்கு  நீர் இல்லை. ஒரு காலத்திலும் வள்ளம் இன்றி வர முடியாத இந்த இடத்தில்  தரையில் நின்று உங்களோடு பேசுகின்றோம், தரையில் நின்றப்படி எதிர்காலத்தை எண்ணி தவிக்கின்றோம். வருகின்ற இன்னும் சில மாதங்களில் இருக்கின்ற நீரும் வெளியேற்றப்பட்டுவிடும், வருகின்ற பருவ மழைக்கும் குளத்தில் நீர்  தேக்கி வைக்கப்படாது எனவே அடுத்து வருகின்ற குறைந்தது மூன்று வருடங்களுக்கு நாங்கள் எப்படி வாழப் போகின்றோம் என்பதுதான் எங்களுக்கும் எங்களை நம்பியிருக்கின்றவர்களுக்கும் இருக்கின்ற மிகப்பெரும் கவலை எனத் தெரிவித்த புஸ்பதேவன்.
இரனைமடு குளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்  திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் நான்கு அடி நீர்  மட்டுமே காணப்படுகிறது. அதுவும் குளத்திற்குள் காணப்படுகின்ற வாய்க்கால் ஆழப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படவுள்ளது. இதனால் குளத்தில் நீர்  தொன்னூறு  வீதத்திற்கு மேல் வெளியேற்றப்பட்டுவிடும் அதன் பின்னர் குளத்தில் ஒரு வலையை விரித்தேனும் தொழில் செய்ய முடியாது. தற்போது கூட தொழிலில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள் தங்களுடைய வலைகளை  முழுமையாக விரித்து  மீன் பிடியில் ஈடுபட முடியாதுள்ளது. அந்தளவுக்கு நீர் காணப்படுகிறது.
இரனைமடுகுளம் அபிவிருத்திக்காக இரண்டு வருடங்களுக்கு நீர் சேமிக்கப்படாது விட்டால் நன்னீர் மீன் பிடி தொழிலாளர்களை பொறுத்தவரை அதன் பாதிப்பு மேலும் இரண்டு வருடங்களுக்கு காணப்படும். குளத்தில் நீர் தேக்கப்பட்டு மீன் குஞ்சுகள் விடப்பட்டு அவை இனவிருத்தி அடைந்து பெருக்கமடைந்து வழமைக்கு திரும்ப மேலும் இரண்டு வருடங்கள் தேவை அதுவரைக்கும் எங்களுக்கு வாழ்வாதாரதிற்கு மிக்ப்பெரும் பாதிப்பே.
இதனை தவிர குளத்திலிருந்து விவசாயத்திற்கு நீர் திறந்து விடப்படுகின்ற போதும் சரி தற்போது  குளத்தின் அபிவிருத்திக்காக திறந்து விடப்படுகின்ற போதும் சரி குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் வாய்க்கால் மூலம் குளத்திலிருந்து வெளியேறுவிடுகிறது. இது காலம் காலமாக இடம்பெற்று வருகிறது. குளத்திலிருந்து நீர் வெளியேறுகின்ற பகுதியில் மீன்குஞ்சுகள் வெளியே செல்லாத படி வலை அமைத்து தடையை ஏற்படுத்த வேண்டும் என்று நாமும் பல தடவைகள் கோரியும் அதுவும் இடம்பெறவில்லை. எனவே தற்போது மேற்கொள்ளப்படுகின்ற குளத்தின் அபிவிருத்திப் பணியோடு மீன்குஞ்சுகள் வெளியேறாதப்படி வலை அமைத்து தருமாறும் இந்தச் சந்தர்ப்பத்தில் கோரி நிற்கின்றோம். எனவும் தெரிவித்த இரனைமடு நன்னீர் மீன் பிடி சங்கத்தின் தலைவர்.
ஒரு நாளுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஜந்நூறு ரூபா வரை வருமானம் பெற்ற தொழிலாளர்கள் தற்போது நானூறு ஜந்நூறு ரூபா வரையே வருமானமாக பெற்று வருகின்றார்கள். இந்த வருமானமும்  இன்னும் சில வாரங்கள் மட்டுமே பெறமுடியும். அதன் பின்னர் அதுவும் குறைந்துவிடும். இந்த நிலையில் எங்களது குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுவது என்பது கேள்விக்குறியே.
மேலும் 35 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நன்னீர் கறுவாடு தொழிலில் ஈடுப்பட்டு வந்தனர் தற்போது அவர்களது நிலைமையும் மிக மோசமாக உள்ளது. இதனை தவிர 42 வியாபாரிகள் தொழில் ஈடுப்பட்டு வந்தனர் ஆனால் தற்போது அவர்களில் 15 வியாபாரிகள் மட்டுமே உள்ளனர். இப்படி எங்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது.
முழுக்க முழுக்க குளத்தையே நம்பி  வாழ்ந்த எங்களுக்கு  அடுத்த கட்டம் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவேதான் நாம் உரிய அனைத்து அதிகாரிகளிடமும் வினயமாக கோரிக்கை விடுகின்றோம் குளத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுப்பெற்று வழமைக்கு திரும்பும் வரைக்கும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரணங்களை பெற்றுத் தாருங்கள். இதனை  குளத்தை நம்பியிருக்கின்ற முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சார்பாக கோரிக்கையாக விடுப்பதாக இரனைமடு நன்னீர் மீன் சங்கத்தின் தலைவர் வெள்ளைச்சாமி புஸ்பதேவன் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More