Home இலக்கியம் ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு

ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு

by admin

ஈழம் தமிழ் நாடக மரபுக்கு நீண்டதோர் செழுமையான பாரம்பரியம் உண்டு, பல்லாயிரக்கணக்கான நாடகர்களின்  பங்களிப்பினாலேயே இம்மரபு  உருவானது.வரலாறு சிலரைப் பதிவு செய்து வைத்துள்ளது.சிலரைப் பதிவு செய்யவில்லை.அப்படிப் பதிவு செய்யக் கூடியவர்களுள் முக்கியமான ஒருவர் நண்பர் பாலதாஸ். 70 வயது தாண்டியுள்ள அவர் செயற்பாடுகள் பற்றிவரும் இம்மலர் இக்குறையைப்போக்கும் விதத்தில் அமையும் என எதிர் பார்க்கிறேன்
ஈழத்துத் தமிழ் நாடக மரபு  மரபுவழி நாடகம்,நவீன நாடகம் என இருகிளைப்பட்டு வளர்ந்து வந்துள்ளது.
இவ்விரு மரபுகளைலும்  நடிகராக,எழுத்தாளராக,இசை அமைப்பாளராக,நெறியாளராக பலர் அறியப்பட்டுள்ளனர்
பாலதாஸ் இதில் எங்கு வருகிறார்?
1950,60 களில்யாழ்ப்பாணக் கூத்துகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுபாடி நடித்த ஓர் இளைஞன் அனைவரையும் கவர்கிறான்.அவனது உச்சஸ்தாயிக் குரலும்,மிடுக்கான நடிப்பும்,கம்பீரமான உடல் அசைவுகளும் பார்த்தோரைக் கவர்கின்றன.
.
மரபுவழிக் கூத்துகளில் பாடி நடித்த பாலதாஸ் கூத்தை எல்லோரையும் போல அப்படியே ஆற்றுகை செய்யாமல் காலப் புதுமைக்கு ஏற்ப மாற்றி அளித்தல் மூலம் மேலும் அதற்கொரு ஜனரஞ்சகக் கவர்ச்சியை அளிக்கலாம் என எண்ணிணான்.
1960 களின் நடுப்பகுதியில்யாழ்ப்பாணத்தில்  பாஸையூரில்  அண்ணாவியார் இராஜேந்திரத்தைத்  தலைவராகவும்,  அன்டர்ஸனை   செயலாளரகவும் பாலதாசை   உபதலைவராகவும்  கொண்ட பாஸையூர்  வளர்பிறைக் கலா மன்றம்  நிறுவப்படுகிறதுபடுகிறது.

மன்றம் நிறுவி மரபுவழிக்கூத்துக்களைப் புதிய திசைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற இவ்வெண்ணம் அவருக்கு எவ்வண்ணம் உண்டானது?
இதற்கான விடை அக்கால நாடக வரலாற்றுக்குள்ளும் பாலதாஸின் வர்லாற்றுக்குள்ளும்  மறைந்து கிடக்கிறது.அது பற்றி இதுவரை யாரும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.
1992 அம் ஆண்டில் நான் எழுதிய பழையதும் புதியதும் எனும் நூலிலும்(பக்கம் 120) 1993 இல் நான் எழுதிய ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(பக்கம் 157) எனும் நூலிலும் வளர்பிறை கலாமன்றம் பற்றியும்,பாலதாஸ் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
பாஸையூர் கூத்துக்கு பெயர் போன ஊர்.விடிய விடிய ஆடப்படும் கிறிஸ்தவக் கூத்துப் பாரம்பரியம் ஒன்று யழ்ப்பாணதில் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்த கரையோரப் பகுதிகளில் நிலவியது.
ஈழத்து நாடக மரபில் இக் கிறிஸ்தவக் கூத்துகளுக்குப் பிரதான இடம் உண்டு யாழ்ப்பானத்திலே  பாஸையூர்,கரையூர், பறங்கித்தெரு  ,சுண்டிக்குளி, அராலி, மாதகல் ஆகிய இடங்களில் 1810ந்தொடக்கம் 1915 வரை ஆடப்பட்ட 74 கத்தோலிக்கக் கூத்துக்கள் பற்றி மு.வீ ஆசீர்வாதம் தாம் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். தேவசகாயம் பிள்ளை நாடகம், எஸ்தாக்கியார் நாடகம், கத்தறினாள் நாடகம்,யூதகுமாரன் நாடகம் என்பன பழமையும் பிரபல்யமும் வாய்ந்தவை.இந் நாடகங்களுக்குள் கூறப்பட்ட உள்ளடக்கம் ஈழத்துக்கு கூத்து மரபுக்குப் புதிது.அத்தோடு ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபுக்கு  இது ஒரு புதிய சுவையையும் வழங்கியது.
முன்னர் ஈழத்துக்கூத்து மரபு புராண இதிகாசக் கதைகளிலிருந்து தம்க்குரிய கருக்களைப் பெற்றமைபோல இப்புதிய கூத்துக்கள் விவிலிய நூலிலிருந்து தம் கருக்களைப் பெற்றன.
இதனால் ஈழத்தமிழ்க்கூத்துமரபு மேலும் செழுமை பெற வாய்ப்புண்டாயிற்று.
கத்தோலிக்க மதத்தில் வரும் பிரதானமான தலைமைப் பாத்திரம் பிற மதத்தவராலும்,தம் மதம் சார்ந்த கொடியோரலும் துன்புறுத்தப்பட்டுக் கஸ்டங்கள் படுவதாகவும்,மரணத்தை அணைப்பதாகவும் பெரும்பாலன கத்தோலிக்கக் கூத்துகளில் சித்தரிக்கப் படும்.
மனித குல மீட்சிக்காக இறைகுமாரனான  யேசு உலகில் துன்புறுதல் கிறிஸ்தவ மதத்தின் ஆதார சுருதியாகும்.இதன் காரணமாக கத்தோலிக்க நாடகங்களிலெல்லாம்ம் எல்லாச் சுவைகளையும் விட அவலச் சுவையே மேலோங்கி நிற்கும்.
இக்கிறிஸ்தவக் கூத்துகள் தமிழ்க்கூத்து மரபில் பின் வரும் மாற்றங்களைக் கொணர்ந்தன

1.    புதிய உள்ளடக்கம்
2.    புதிய சுவை
3.    ஆட்டத்தைவிடப் பாடலுக்கு முக்கியம்
4.    .புலசந்தோர் எனும் பாத்திரம்
5.    .வட்டக்களரி மூன்று பக்கப் பார்வையாளரைக் கொண்ட மேடையாக மாறியமை
6.    இம்மரபே பின்னர் சிங்கள் நாடகம மரபாக வளர்ந்தது

இவ்வண்ண்ணம் செழுமை பெற்ற நாடகங்களைத் தனது சிறுபராயத்தில் இருந்து பார்த்து வளர்ந்தவர் பாலதாஸ்.மிகச் சிறந்த அண்ணாவிமார்களை,,மிகச்சிறந்த நடிகர்களைக் கண்டு வளர்ந்த பாலதாசின் உடலில் கூத்து இடம் கொண்டது
கூத்தில் அவரது கம்பீரக் குரலில்  உச்ச  ஸ்தாயியில் ஏற்ற இறக்கங்களுடன்  அவர் பாடும் பாடல் அழகும்,மேடையில் கம்பீரமான அவரது அசைவுகளும் பாலதாஸின் முன்னோர் அவருக்கீந்த கொடையாகும்

இத்தோடு தன்னை சூழலில் ஆடப்பட்ட இசை நாடகங்களும்  அதற்கு இசைவாக வாசிக்கப்பட்ட ஹார்மோனியமும் பாலதாஸின் மனதைக் கவர்ந்திருக்க வேண்டும்

பாலதாஸ் வளர்ந்த வாழ்ந்தகாலம் ஈழத்து மரபுவழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த காலம் ஆகும்

1960 களில் பேராசிரியர் சரத்சந்திரா சிங்கள நாடகம மரபை அடியொற்றி மனமே சிங்கபாகு என இரண்டு பெரும் நாடகங்களை அளித்த காலப்பகுதி இது

சிஙகள் நாடக உலகு தனக்குரிய நாடக வடிவங்களைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் நின்ற காலங்கள் அவை

இவரால் கவர்ப்பட்ட பேராசிரியர் வித்தியானந்தன் தமிழ்க்கூத்துகளை அடிநாதமாக வைத்து சில நாடகங்களைத் தயாரித்தார்.

கூத்தின் முதல் மீளுருவாக்கம் இது

விடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்களை[ச் சுருக்கி அழ்காக்கி பலரும் பார்க்கும் வண்ணம் ஈழமெங்கும் மேடையிட்டார் அவர்
அவர் தயாரித்த கர்ணன் போர்,நொண்டி நாடகம்,இராவணேசன் எனும் கூத்துரு நாடகங்கள் சுருக்கப்பட்டு இறுக்கமாக்கி அழகியலுடன் தமிழர்வாழும் பிரதேசங்கள் எங்கணும் இலங்கையில் மேடையிடப்பட்டன

அரசாங்கம் உருவாக்கிய கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் தலைவராகவும் பேராசிரியர் சிவத்தம்பி செயலளராகவும் பதவி  பூண்டு தமிழ் நாடகக் கலையை மேல் நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருந்த காலங்கள் அது

1957 இலிருந்து அடுத்த ஒரு தசாப்த காலம் வரை ஈழத்து நாடக உலகிலே பாரம்பரியக் கூத்துகளைப் பேணுகிற அவற்றை நவீனப் படுத்துகிற தன்மைகளே பிரதான போக்குகளாக அமைந்தன

கிராமப் புறங்களிலே அருகிக் கொண்டிருந்ததௌம்,வழக்கொழிந்து கொண்டிருந்ததுமான இசை நாடகங்கள்,, அண்ணவிமரபு நாடகங்கள் என,அறிமுகப்படுத்தப்பட்டு கலைக்கழகத்தால் நகரப் புறங்களில் மேடையிடப்பட்டன.

கலையரசு சொர்ணலிங்கம் மரபில் வந்த  ஐரோப்பிய நாடக மரபைக் கண்டு களித்த நகர மாந்தருக்கு இது ஓர் புது அனுபவமாயிற்று

இதன் மூலம் பிரபல்லியமான மன்றங்கள் பல

காங்கேசந்துறை வசந்தகான சபா,பாஸையூர் வளர்பிறை மன்றம்,மன்னர் முருங்கன் முத்தமிழ் நாடக மன்றம் என்பன குறிப்பிடத்தக்கன

ஏற்கெனவே கூத்துபற்றிய பயிற்சியும்,அறிவும் தினும் பெற்றிருந்த பாலதாஸ் தன் திறன்களுடன் இந்தப் பொது ஓட்டத்தில் இணைந்து கொள்கிறார்

அவரிடம் இயல்பாக அமைந்திருந்த திறன் காலம் அவருக்குக் கற்பித்த வை அனைத்து இணைய பாலதாஸ் தன் திறன்களுடன் அன்றைய நாடகப் பொது ஓட்டத்துடன் இணந்து கொண்டார்

அவரது இக்காலக் கூத்துப் பங்களிப்பினை ஐந்துமுக்கிய பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்

முதலாவது பிரிவு அவர் அன்றைய பிரதான போக்குக்கு இயைய தான்ஆற்றுகை செய்த விடிய விடிய பாடப்பட்ட நாடகங்களை ஒரு மணி நேரம் அல்லது இரு மணி நேரத்துக்குச் சுருக்கி ஆற்றுகை செய்தமையாகும்.இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும்,பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது

இரண்டாவது பிரிவு அவர் இக்கூத்துகளுக்கு ஹர்மோனியம் பாவித்தமை ஆகும்.கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழமை.ஹார்மோனியம் இசை நாடகஙகளுக்கே பாவிக்கப்பட்டன ஆனாலிசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டிருந்ததுடன் நல்ல இசையாளனாகவும் இருந்த பாலதாஸ் நாடகத்தில் இசைக்கு,அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார்.இஅரது நாடகங்களில் ஹார்மோனிய பேசியது

மூன்றாவது பிரிவு அவரே ஒரு சிறந்த ஹார்மோனிய வித்துவானாகவும் இருந்தார்.இதனை அவர் அன்று பிரபல்யமாயிருந்தவரும் கூத்துக்கு முதன் முதல் ஹார்மோனியம் வாசித்தவருமான சுருதி மரியானிடமிருந்து  கற்றுக்கொண்டார்  என அறிகிறோம்.ஆற்றலும் கூர் உணர்வும் கொண்ட பாலதாஸ் இதனை மென்மேலும் வளர்த்து ஆற்றல் மிக்க ஒரு ஹார்மோனிய வித்துவானும் ஆகினார்
பாலதாஸின் ஹார்மோனியத் திறமை பற்றி ஒருவர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்

“முன்பெல்லாம் நாட்டுக்கூத்திற்கு ஆர்மோனியம் வாசிக்கும் மரபு இருக்கவில்லை. அதனை அறிமுகப்படுத்திய பெருமை சுருதி மரியான் என்று செல்லமாக அழைக்கப்படும் மாசிலாமணி மரியாம்பிள்ளை அவர்களுடையதாகும்.

முதல் முதலாக ஆர்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டி அரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலதாஸ் அவர்களுக்கு ஆர்மோனிய வாத்தியம் வாசிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதனால் சுருதி மரியான் அவர்களையே குருவாகக்கொண்டு அக்கலையை முறையாக கற்று குருவையும் மிஞ்சும் அளவிற்கு நாட்டுக்கூத்திற்கும் இசை நாடகத்திற்கும் இன்று வரை சிறப்புற வாசித்து வருவதை யாவரும் அறிவர்.

பாலதாஸ் அவர்களின் ஆர்மோனிய வாசிப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் பாடகரின் குரல் வளம் அறிந்து அவரது பாடும் திறமைக்கு இசைவாக வாத்தியத்தை போட்டுக்கொடுப்பதிலம் மற்ற நடிகன் மேடையில் தாள ராகத்தை விட்டுப் போய்க்கொண்டிருந்தால் அதனை பார்வையாளர்கள் செவிகொள்ளாதவாறு தனது ஸ்பெசல் வாசிப்பின் மூலம் ஊடறுத்து சீரமைத்து மீண்டும் அந்த நடிகன் உரிய தாள ராகத்திற்கு இசைவாகவும் அதன் தன் ஆற்றலில் எல்லைக்குள்ளும் வந்து பாடுவதற்குமான புறச்சூழலை அற்புதமாக ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கைதேர்ந்தவர். அந்தக் கலையில் அவனுக்கு இணை அவனே தான். சாஸ்திரிய முறையில் ஆர்மோனியம் கற்ற பலர் நாட்டுக்கூத்திற்கு வாசித்த பல சந்தர்ப்பங்களில் இத்தகைய நிலை ஏற்படும் போது மேடையில் நடிகனை அம்போ என்று விட்டுவிடுவதையும் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் பாலதாஸ் மேடையில் நிற்கும் கலைஞனை ஒருபோதும் கைவிடுவதில்லை’

நான்காவது பிரிவு கூத்திற்கு அவர் அளித்த அவரது குரல் வளமும்  நடிப்புமாகும்..பாலதாசின் நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு 1960 களிலிருந்து கிடைத்துள்ளது.1960 களின் நடுப்பகுதியில் கலைக்கழக நாடக உறுப்பினர் குழுவில் நான் பணிபுரிந்த காலங்களில் பாலதாஸின் கண்டியரசன் நாடகத்தைப் பார்க்கும் வாய்ய்பு எனக்கு மட்டக்களப்பில் கிடைத்தது.அன்று அவரது குரல் வளமும் நடிப்பும் பலரையும் கவர்ந்தது.மேடை முழுவதையு ஆக்கிரமித்து அவர் நடந்த நடைகளும் பாடிய பாடல்களும் இப்போதும் கண்முன் மலர்கின்றன

ஐந்தாவது பிரிவு அவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தில் ஆட்டங்களையும் உட்புகுத்திய  பாங்காகும் 1974 இல் யாழ்ப்பாணத்தில் கலைகழ்கம் யாழ்ப்பாணக் கூத்துகளுக்கிடையே ஒரு போட்டி நடத்தியது யாழ்ப்பாணத்தின்  பல கிராமங்களிலிருந்தும் பல கூத்துக்கள் அன்று போட்டிக்கு வந்தன.யாழ்ப்பாண வடமோடி, தென்மோடி, இசைநாடகம்,காத்தவரயன் கூத்து ஆகிய கூத்துகள் அனைத்தையும் ஒருங்கு சேரப் பார்க்கும் சந்தர்ப்பம் அதிஸ்டவசமாக அன்று எனக்குக் கிட்டியது அதில் பாஸையூர் வளர்பிறை நாடக மன்றத்தின் கண்டி அரசன் நாடகமும் இடம் பெற்றது.பாலதாஸ் அதில் கண்டி அரசனாகத்தோன்றினார்

அதில் அவர் ஆடி நடித்ததைக் கண்டேன்.அவர் ஆடல் அழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது.லயம் மிகுந்த உடல் அவர் உடல்.ஒரு சிறந்த ந்டிகனுக்கு லயம் மிகுந்த உடல் ஒரு கொடை.இயற்கை அக்கொடையினை அவருக்கு வழங்கியிருந்தது

நாடகத்தில் கண்டி அரசன் நாடகமே முதல் இடம் பெற்றது; முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் அவரைப் பாராட்டிய நான் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துக்களில் ஆட்டஙகள்  இல்லையே எனக் கூறியபோது கூத்தென்றால் ஆட்டம் இருக்கவேண்டும் என்றார்

உண்மைதான் கூத்து என்பதற்கு அகராதி தரும் கருத்தும் இதுவே;தன் அனுபவ ஞானத்தால் இதனை உணர்ந்து யாழ்ப்பாணத் தென்மோடி மரபில் கண்டி அரசனில் ஆட்டத்திப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பாகும்

ஈழத்தில் மரபுவழிக் கூத்தரங்கின் வளர்ச்சிப்போக்கில் தனது  ஆடல்,பாடல்,ஹார்மோனிய வாசிப்புத் திறமைமைகளோடு கலந்து பங்களிப்புச் செய்த பாலதாசின் நாடகச் செய்ற்பாடுகளின் விபரங்கள் பதிவு செய்யப்படவேண்டும் அவை நுனித்து ஆரயப்படவேண்டும்

அவரைக் கௌரவிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கான அத்திவாரமும் இடப்பட வேண்டும்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More