Home கட்டுரைகள் ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன்:-

ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன்:-

by admin

 

வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை’ என்று. அந்த அரங்கு ஒரு  சமநிலையற்ற அரங்கு என்று வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன் விமர்சித்திருந்தார் அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிருப்தியாளர்களும் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவர்களுமே பங்கேற்றிருந்தபடியால் அந்த மேடை சமநிலையானது அல்ல என்று அவர் அபிப்பிராயப்பட்டிருந்தார்.
எனவே யாழ்ப்பாணத்தில் அந்த நூலை வெளியிடும் போது எல்லாத் தரப்பு அரசியல் வாதிகளையும் அழைப்பது என்று ஏற்பாட்டாளர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அந்த வெளியீட்டு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. வவுனியாவில் பங்கு கொள்ள முடியாதிருந்த விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்தார். அவரே நாளையும் குறித்துக் கொடுத்தார். அந்த நிகழ்வில் எல்லாத் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவிருக்கிறார்கள் என்பதும் அவருக்கு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிவமோகனால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியொரு கூட்டம் தமிழ்த் தேசியப் பரப்பில் மிகவும் வித்தியாசமானதாகவும் முன்னுதாரணமற்றதாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்களும் அதிகரித்து வந்தன. இப்படி எல்லாரையும் அழைக்கும் ஒரு நிகழ்வுக்கு தான் வரப்போவதில்லை என்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் அரங்கச் செயற்பாட்டாளர் கூறிவிட்டார்.
இப்படி எல்லாத் தரப்பையும் ஒரே மேடையில் அமர்த்த முடியுமா? அது சாத்தியமா? என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். தனது பேச்சைக் குழப்பவல்ல தரப்புக்கள் அக்கூட்டத்தில் பங்குபற்றக் கூடும் என்ற சந்தேகத்தை சுமந்திரன் ஏற்கனவே வெளிக்காட்டியிருந்தார். ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும், அவுஸ்ரேலியாவிலும், பிரான்ஸிலும் இடம்பெற்றிருந்த சில சம்பவங்களின் பின்னணியில் அவருடைய சந்தேகம் நியாயமானது என்பதை ஏற்பாட்டாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வாறான நிலமைகளை எதிர்பார்த்து சுமந்திரன் தனது ஆதரவாளர்கள் பலரையும் தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகளையும் அந்த அரங்கிற்கு அழைத்து வந்திருந்தார். மேடையில் மூன்று மெய்க்காவலர்கள் நின்றிருந்தார்கள். ஒரு சிரேஷ;ர பொலிஸ் அதிகாரியின் தலைமையில் கணிசமான எண்ணிக்கையிலான பொலிசாரும் மண்டபத்தைச் சூழக் காணப்பட்டார்கள்.
தமிழ் தேசிய அரசியலை அதிகபட்சம் அறிவு பூர்வமானதாக மாற்றும் நோக்கிலான ஓர் அரங்கு அதுவென்று கூறி ஏற்பாட்டாளர்கள் அரங்கைத் திறந்து வைத்தார்கள். தமிழ் அதிகாரமும் தமிழ் அறிவியலும் சந்திக்கும் ஓர் அரங்கு அது என்று அறிவிக்கப்பட்டது. தமிழ் அறிவியலின் ஆகப்பிந்திய ஆக்கமான ஒரு நூல் வெளியீட்டில் தமிழில் வௌ;வேறு காலகட்டங்களில் அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்களும், இப்பொழுது அமர்ந்திருப்பவர்களும் இனிமேல் அமரக் கூடியவர்களும் கூடியிருப்பதைச் சுட்டிக் காட்டிய ஏற்பாட்டாளர்கள் அது காரணமாகவே அவ் அரங்கை அறிவியலும் தமிழ் அதிகாரமும் சந்திக்கும் ஓர் அரங்கு என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
குறிப்பாக முன்னைய காலங்களில் அதிகாரப் பரவலாக்கல் அலகுகளில் பங்கேற்றவர்களும் இப்பொழுது யாப்புருவாக்கப் பணிகளில் பங்கெடுப்பவர்களும் அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள். அதனால், இலங்கைத் தீவின் யாப்பு வரலாற்றை அதன் புவிசார் அரசியல் பின்னணிக்குள் வைத்து ஆராயும் மு.திருநாவுக்கரசுவின் நூலை முன்வைத்து தமிழ்த்தலைவர்கள் யாப்புத் தொடர்பான தமது அபிப்பிராயங்களையும், அனுபவங்களையும் பகிர வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தார்கள். எனவே புவிசார் அரசியலின் பின்னணிக்குள் வைத்து யாப்புக் குறித்த அறிவு பூர்வமான உரையாடல்களுக்கான ஓர் அரங்காக அதைக் கட்டியெழுப்புமாறும் மாறாக கட்சிப் பூசல்களை வெளிப்படுத்தும் ஒரு குறுகிய அரங்காக அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மிகவும் தெளிவாகவும் அறுத்துறுத்தும் வேண்டுகோள் விடப்பட்டது.
அந்த அரங்கில் தான் தனது அனுபவங்களை முன்வைத்து இதற்கு முன் வெளிவராத சில விடயங்களை வெளிப்படுத்தவிருப்பதாக சுமந்திரன் ஒரு ஏற்பாட்டாளரிடம் தெரிவித்திருந்தார். எனவே சுமந்திரன் என்ன கூறக்கூடும் என்பது தொடர்பில் பரவலான ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நடந்தது என்ன?
ஈ.பி.டி.பியின் தவராசா உரையாற்றும் வரை கூட்டம் அமைதியாகத்தான் இருந்தது. அவருடைய உரையின் ஒரு கட்டத்தில் அவர் தமிழ் மக்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களைத் தவறவிட்டமை தொடர்பில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டு அது படிப்படியாக அதிகரித்து வந்து ஒரு கட்டத்தில் அவரை நோக்கிப் பார்வையாளர்களில் சிலர் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவரைத் தொடர்;ந்து பேச விடாது கத்திக் கதைத்தார்கள். அவருடைய கட்சிமீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். ஒரு கட்டத்தில் தவராசா தனது கட்சி செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டார். ஆனாலும் கூட்டத்திலிருந்த சிலர் தொடர்ந்தும் கொந்தளித்துக் கொண்டேயிருந்தார்கள். தவராசா தனது உரையை இடையில் நிறுத்திக்கொண்டார்.
அதன்பின் சுமந்திரன் பேசினார். அவர் அரசியலைப்புருவாக்கம் வெளிப்படுத்தப்படாத சில விடயங்களைப் பேசப் போகிறார் என்ற ஓர் எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. அவர் சட்டத்துறையைச் சேர்ந்தவர். கூட்டமைப்பின் உயர் மட்டத்திலிருப்பவர். சம்பந்தரோடு சேர்ந்து முடிவுகளை எடுக்கவல்ல அதிகாரங்களோடு காணப்படுபவர். தமிழ் மக்கள் சார்பாக வெளியுலகத்தோடு அதிகம் உத்தியோகபூர்வமான சந்திப்புக்களில் ஈடுபடுபவர். புதிய யாப்பினை உருவாக்கும் வழிநடத்தற் குழுவில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பங்குபற்றுபவர். எனவே யாப்புருவாக்கம் தொடர்பில் இதுவரை வெளிவராத உள்வீட்டுத் தகவல்கள் அவருக்கே அதிகம் தெரியும். அது தொடர்பில் அவரை விடக் கூடுதலாகப் பேசக்கூடிய எவரும் இப்பொழுது தமிழ்த்தரப்பில் இல்லை.
எனவே சுமந்திரன் என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து ஒரு வித எதிர்பாப்பு இருந்தது. ஆனால் அவர் யாப்புருவாக்கச் செயற்பாடுகளைப் பற்றி எதுவும் பேசவில்லை. புவிசார் அரசியலின் பின்னணியில் புதிய யாப்புருவாக்கத்தில் தமிழ் மக்களுக்குள்ள சவால்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. அந்த மேடையை ஒரு புவிசார் அரசியல் ஆய்வரங்காகவோ அல்லது யாப்புருவாக்கம் தொடர்பான ஓர் ஆய்வரங்காகவோ அவர் பயன்படுத்தவில்லை. மாறாக தனது அரசியல் எதிரிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சிக்கும் விதத்திலேயே அவருடைய பேச்சு அமைந்திருந்தது.
இது மறுபடியும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. தவராசாவைப் பேச விடாது தடுத்தது போலவே அவரையும் பேச விடாது தடுக்கலானார்கள். இவ்வாறு தடுத்தவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையானவர்கள் தான். பெரும்பாலான பார்வையாளர்கள் பார்வையாளர்களாகவே அமர்ந்திருந்தார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே திரும்பத் திரும்ப எழுந்து நின்று அவர் பேசுவதைக் குழப்பினார்கள். முழுக் கூட்டமும் அவரைக் குழப்பியது என்று கூறிவிட முடியாது. தான் பேசுவதைக் குழப்பியவர்களைப் பற்றிப் பொருட்படுத்தாது சுமந்திரன் தொடர்ந்தும் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்டது 15 நிமிடங்கள். ஆனால் அவர் பேசியது ஏறக்குறைய 28 நிமிடங்கள்.
மேற்படி குழப்பங்களால் கூட்டம் இடையில் நிறுத்தப்படவில்லை. பார்வையாளர்களில் பொரும்பாலானவர்கள் அப்படியே இருந்து நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதன் பின் கஜேந்திரகுமாரும் சுரேஷ; பிரேமச்சந்திரனும் உரையாற்றினார்கள். சுமந்திரனுக்குரிய பதில் அவர்களுடைய உரைகளிலிருந்தது. அவர்கள் பேசும் போது யாரும் அதைக் குழப்பவில்லை. அரங்கில் அமந்திருந்த சுமந்திரனின் ஆதரவாளர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சுமந்திரனைக் குறிப்பிட்டுக் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டபோது கூட்டத்தின் ஒரு பகுதி உற்சாகமாகக் கைதட்டி ஆர்ப்பரித்தது. ஆனால் யாரும் மேற்படி இருவருடையதும் உரைகளைக் குழப்பவில்லை. எழுந்து நின்று அவர்களைக் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் பேசுவதைத் தடுக்க முற்படவில்லை. அவர்கள் இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரங்களுக்குள் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டே அமர்ந்தார்கள்.
அவர்களுக்குப் பின் ஆனந்தசங்கரி பேசினார். அவருடைய உரையும் குழப்பப்பட்டது. ஆனால் அதைச் செய்தவர் ஒரே ஒரு நபர்தான். ஏனைய பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் சலிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பகுதியினர் அதைச் சுவாரசியமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனந்த சங்கரியும் விடாமல் தொடர்ந்து பேசினார். அதுவரை கூட்டம் அப்படியே கலையாமலிருந்தது.

ஆனால், அதன்பின் இறுதியாக விக்னேஸ்வரனின் உரையை பேராசிரியர் சிற்றம்பலம் வாசிக்க தொடங்கினார். அச் சந்தர்ப்பத்தில் சுமந்திரன் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினார். தனக்கு பிற்பகல் ஒரு மணிக்கு ஏதோ ஒரு கூட்டம் இருப்பதாக அவர் ஏற்பாட்டாளர்களுக்குக் கூறியிருக்கிறார்.

சுமந்திரன், வெளியேறிய போது அவருடைய ஆதரவாளர்களும் வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு கூட்டம் சுமந்திரனின் பின் வேகமாகச் சென்றது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஊடகவியலாளர்களும் வேகமாகப் பின் தொடர்ந்தார்கள். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினரும் புதினம் பார்ப்பதற்காக எழுந்தோடினார்கள். அப்பொழுது தான் கூட்டம் ஓரளவுக்குக் கலையத் தொடங்கியது. ஆனால் சிற்றம்பலம் முதலமைச்சரின் உரையை வாசித்து கொண்டேயிருந்தார். அந்த உரையை குறைந்தளவு தொகையினரே அமர்ந்திருந்து கேட்டார்கள். ஏனையவர்கள் சுமந்திரனின் பின்னே சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதில் ஆர்வமாயிருந்தார்கள். சுமந்திரன் போய் விட்டார். ஆனால் கூட்டத்தின் இறுக்கம் தளர்ந்துவிட்டது. அதன் பின் இறுதி நிகழ்வாக புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதுதான் அன்றைக்கு நடந்தது. முதலமைச்சரின் உரை வாசிக்கப்படுவதற்கு முன்பு வரை கூட்டம் பெருமளவுக்குக் கலையவில்லை. இடையிடை கொந்தளிப்புக்கள் இருந்த போதிலும் சுமாராக மூன்று மணித்தியாலங்களிற்கு மேலாகக் கூட்டம் நடந்தது. அது ஒரு வித்தியாசமான கூட்டம். தமிழ்த் தேசியப் பரப்பில் அப்படியொரு கூட்டம் அதற்கு முன் நடந்ததில்லை. 2009 மேக்குப் பின் அப்படி ஒரு கூட்டம் அதுதான் முதற்தடவை. ஏற்கனவே யூரேவில் மாநாட்டு மண்டபத்தில் ஒரு விவாதம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. அதன்பின் அண்மையில் மன்னாரில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதிலும் எல்லாக்கட்சிக்காரர்களும் பங்குபற்றவில்லை. மட்டுமல்ல அதற்கு வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இக் கூட்டத்தில் நிலமை முற்றிலும் வேறானது. இது முற்றிலும் புதியது. அழைக்கப்பட்டிருந்தவர்களில் சில தலைவர்கள் வந்திருக்கவில்லை என்றாலும் கூட இது இதற்கு முன்பு வேறுயாரும் பெரியளவில் பரிசோதித்திருக்காத ஒரு முயற்சி.
அப்படிப்பார்த்தால் இதில் ஏற்பட்ட தடங்கல்கள் குழப்பங்கள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவைதான். இப்படியொரு கூட்டம் இப்படித்தான் நடந்திருக்க முடியும். 2009 மேக்குப் பின்னரான தமிழ் ஜனநாயகச் சூழலின் பலம் பலவீனங்களைக் கண்டுபிடிக்க உதவிய ஒரு பரிசோதனையே இக் கூட்டம். அந்த அடிப்படையில் இக் கூட்டம் தொடர்பில் பின்வரும் முடிவுகளுக்கு வரலாம்.
முடிவு ஒன்று – தமிழ்த் தலைவர்களுள் மிகச் சிலரே புவிசார் அரசியல் தொடர்பில் சரியான தரிசனங்களோடு இருக்கிறார்கள். அல்லது புவிசார் அரசியலைக் குறித்து ஒரு பொது மேடையில் உரையாற்றக் கூடிய ஆழத்தோடு இருக்கிறார்கள்.
முடிவு இரண்டு –  ஈ.பி,டி,பியின் உறுப்பினர் ஒருவர் ஒரு பொது மேடையில் வைத்து பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்பு இவ்வாறு தனது கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டிருப்பதை குறிப்பாகக் கவனிக்க வேண்டும். ஏற்கனவே சுரேஷ; பிரேமச்சந்திரன் 2001 இல் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். தவராசாவின் மன்னிப்பு அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என்பது தெரியவில்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பொது மேடைகளில் மன்னிப்புக் கேட்பது என்பது ஒரு முக்கியமான ஜனநாயகப் பண்பே.
முடிவு மூன்று – இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்து பகிரங்கமாகக் கூறவும் விவாதிக்கவும் தமிழரசுக்கட்சியிடம் எதுவும் இல்லை. அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறவோ விவாதிக்கவோ அவர்கள் தயாரில்லை. இந்த இரண்டிலும் எது சரி? தீர்வு அவர்களிடம் இல்லை என்றாலும் நிலமை பயங்கரம்தான். தீர்வை ஒரு மறைபொருளாக மூடுமந்திரமாக வைத்திருக்க விரும்பினால் அதுவும் ஆபத்துத்தான். ஏனெனில் இலங்கைத் தீவின் துயரங்கள் அனைத்துக்கும் ஊற்று மூலமாகக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது மூடப்பட்ட அறைகளுக்குள் ரகசியமாக கண்டு பிடிக்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. அது சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களுடனும் பகிரங்கமாக உரையாடிக் கண்டுபிடிக்கப்படும் ஒன்றாகவே அமைய வேண்டும். உலகத்தின் வெற்றி பெற்ற எல்லாச் சமாதான முயற்சிகளும், நல்லெண்ண முற்சிகளும் அதிக பட்சம் வெளிப்படையானவைதான். ரகசியங்களிலிருந்தும் தந்திரங்களிலிருந்தும் சமாதானத்தைக் கட்டியெழுப்பலாமா? அது மட்டுமல்ல அது ஒரு ஜனநாயக நடைமுறை ஆகுமா?
முடிவு நான்கு:- தமிழ் ஜனநாயகச் சூழல் மேலும் போதியளவுக்கு வளர வேண்டியிருக்கிறது. எதிர்க்கருத்துக்களை முதலில் செவிமடுத்தபின் அவற்றுக்கு தர்க்கபூர்வமாக எதிர் வினையாற்றுவது என்பது ஒரு பண்பாடு. எங்களுக்கு விருப்பமானவற்றையே மற்றவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது பல் வகைமைகளுக்கு எதிரானது. எதிர்க்கருத்துக்களை அறிவு பூர்வமாக நிராகரிப்பது அல்லது வெற்றி கொள்வது என்பது அடிப்படையில் ஒரு பண்பாடுதான்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நவிப்பிள்ளை அம்மையார் கனடாவிற்கு வந்திருந்தார். அங்கு ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது ‘தமிழர்கள் தமது அரசியலை அறிவியல் மயப்படுத்தத் தவறிவிட்டார்கள்’ என்று அவர் கூறியுள்ளார். இதே கருத்தை அவர் சில ஆண்டுகளுக்கு முன்னரும் கூறியிருப்பதை மேற்படி கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெண் நினைவுபடுத்தியுள்ளார். மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு நிகழ்வானது தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.    அந்நிகழ்வு ஈழத்தமிழ் ஜனநாயகச் சூழல் எவ்வாறுள்ளது என்பதன் ஒரு குறிகாட்டிதான். கூட்டத்தில் இருந்த ஒரு பார்வையாளர் சொன்னார் ‘கூட்டம் முடிவில் வடமாகாண சபை போலத் தோன்றியது என்று’ மற்றொரு நண்பர் – அவரொரு தமிழ் கனேடியர் – சொன்னார். ‘தலைவர்களும் மேடை நாகரிகத்தை மதிக்கவில்லை. தொண்டர்களும், ஆதரவாளர்களும், உணர்வாளர்களும் சபை நாகரிகத்தை மதிக்கவில்லை’ என்று.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More