இலங்கை

ஐநா சிறுபான்மை அறிக்கையாளர் ரீட்டா ஐசக்கிடம், மலையக தமிழர் உரிமை தேவைகள் முன்வைக்கப்படும் – மனோ கணேசன்

mano

சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அறிக்கையாளர் ரீட்டா ஐசக் குழுவினரை தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு அடுத்த வாரம் சந்திக்கும். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு வருகை தர உள்ள ஐநா சிறுபான்மை இன அறிக்கையாளர் ரீட்டா குழுவினரிடம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் எழுத்து மூலமான அறிக்கையாக முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும். இந்த பேச்சுவார்த்தையின் போது நாடு முழுக்க சிதறி வாழும் இனக்குழு என்ற முறையில் புதிய தேர்தல் சீர்திருத்த முனைப்பில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும், தேர்தல் பிரதிநிதித்துவத்தில் எமக்கு ஒதுக்கப்பட வேண்டிய விசேட ஒதுக்கீடுகள் பற்றியும், மலையக தமிழ் இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவான தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும், பின் தங்கிய பிரிவினர் என்ற முறையில் அவர்களை கைதூக்கிவிட வேண்டிய விசேட ஒதுக்கீடுகளை வழங்க சர்வதேச சமூகத்தை ஐநா சபை வலியுறுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்து கூறப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.     

ஜனநாயக இளைஞர் இணைய வாராந்தர கருத்தரங்கில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையில் இதுபற்றி மேலும் கூறியதாவது,    

இந்நாட்டில் நல்லாட்சியை உருவாக்கிவிட்டோம் என்ற நாம் ஆனந்த கூத்தாட முடியாது. நாம் அமைதியாக இருந்தால், எம்மை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடியவர்கள் இந்த நல்லாட்சியிலேயே இருக்கிறார்கள். ஆகவே எப்போதும் நாம் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதாவது “அலர்ட்டாக” இருக்க வேண்டும். இது இந்த நாட்டில் நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பொருந்தும்.

எதிர்வரும் வரவு செலவு திட்டம் தொடர்பான முன்னறிக்கையில் எனது அமைச்சுக்கு போதிய நிதியை ஒதுக்குவதில் ஒரு குறைபாடு ஏற்பட்டது. அதேபோல் எனது அமைச்சின் பணிகளில் முன்னறிவித்தல் இன்றி ஒரு முன்னாள் அரசியல்வாதி தலையிடும் நிலைமையும் ஏற்பட்டது. நான்தான் தூங்குவதில்லையே. அதனால் எழுந்து நின்று சப்தம் செய்ததால் அந்த பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வந்துள்ளன.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலும் நாம் உரிய அழுத்தங்களை கொடுத்து வருகிறோம். அவை பற்றி தெரியாத விடயங்கள் விரைவில் தெரிய வரும். இன்று நாம் பேச்சுகளை நடத்தி, கையெழுத்து போட இடம் கொடுத்து ஒத்துழைக்கின்றோம். இப்போது மூடிய அறைக்குள் இரகசிய பேச்சுவார்த்தைகள் இல்லை. அரசாங்கத்தை இந்த விடயத்தில் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இழுத்து விட்டுள்ளோம். இது எமது அழுத்தம் காரணமாகவே நடக்கின்றது. ஒப்பந்தம் ஷரத்துகள் ஒவ்வொன்றும் உழைக்கும் மக்களுக்கு தெரிகிறது. எமது இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவினரின் வாழ்வாதார விவகாரத்தில் அரசியல் செய்ய நாம் விரும்பாததால், இப்போது அமைதி காக்கிறோம். எந்த பேயுடனாவது ஒத்துழைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எமது பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் தயாராக இருக்கிறது.  இதை இந்த கையெழுத்து குழுக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.  

எனினும் நாம் சும்மா இருக்க போவதில்லை. மலைநாட்டு தோட்ட தொழிலாளர்கள் இந்த அளவுக்கு இழுத்தடிக்கப்படுவதன் காரணம் அவர்கள் தமிழர்கள் என்பதால்தான் என்ற உண்மையை புரிந்துக்கொள்ள நாம் விண்வெளி விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. அதை எந்த ஒரு சின்ன குழந்தையாலும் புரிந்துக்கொள்ள முடியும். எனவேதான் இந்த பிரச்சினையும் சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அறிக்கையாளர் ரீட்டா ஐசக்கின் கவனத்துக்கு கொண்டு செல்ல நாம் தீர்மானித்துள்ளோம். மலையக தமிழ் இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவான தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும், பின் தங்கிய பிரிவினர் என்ற முறையில் அவர்களை கைதூக்கிவிட வேண்டிய விசேட ஒதுக்கீடுகளை வழங்க ஐநா சபை சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசையும் வலியுறுத்த வேண்டியதன் அவசியம் பற்றி பேசுவோம். அரசுக்குள் இருந்து நாமும் வலியுறுத்தும் போது, வெளியில் இருந்து ஐநாவும் வலியுருத்தும் போதுதான் இங்கே காரியம் நடக்கும் என்பது எவரையும் விட எனக்கு நன்றாக தெரியும்.

அதேபோல் உத்தேச தேர்தல் முறையில், இந்நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மையினர் என்ற முறையில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் அனர்த்தம். அவற்றை பற்றியும் நாம் எடுத்து கூறுவோம். எனது அமைச்சுக்கு எம்மை தேடிவரும், சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அறிக்கையாளர் ரீட்டா ஐசக் குழுவினருக்கு,  புதிய உள்ளூராட்சி கட்டமைப்புகள், காணி உரிமை, வீடமைப்பு, மொழியுரிமை உட்பட மலையக சிறுபான்மை மக்களின் உரிமை தேவைகள் பற்றி எடுத்துக்கூற தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கிறது.      

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers