இலங்கை பிரதான செய்திகள்

நீதித்துறை சுதந்திரத்தினை பாதிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

img_7609குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

பதிவு செய்யப்படாத ஒரு இணையத்தளத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும்  கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆகியோர் தொடர்பில் உண்மைக்குப் புறம்பாகவும் நாகரிகமற்ற முறையிலும் அவதூறான கருத்துக்களை வெளியிடப்பட்டுள்ளமை நீதித்துறையின் சுதந்திரத்தினை பாதிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது என கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஒன்றில்  நீதிபதிகள் தொடர்பில் வெளிவந்த செய்தியினை கண்டித்து இன்று 20-10-2016 பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஒரு நீதிபதியினால் யாரேனும் தனிநபர் அவரது தனிப்பட்ட செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பின் முறைப்பாடு செய்வதற்கு உரிய நடைமுறைகளும் இடங்களும் எமது நாட்டில் உள்ளது. அவ்வாறான எவ்வித நடவடிக்கையினையும் தவிர்த்து மேற்படி இணையத்தளத்தில் வெளிவந்த செய்திகளானவை உண்மைக்குப் புறம்பானவையும் வேண்டுமென்றே உரிய இணையத்தளத்தினால் புனையப்பட்ட கதையாகவும் உள்ளது.

மேலும் இவ்விணையத்தளத்தில் பாவிக்கப்பட்டுள்ள சொற்பதங்களானவை மிகக் கேவலமானதாகவும் அருவருக்கத்தக்கதுமான சொற்பதங்களே ஆகும். குறித்த சொற்பதங்களின் தன்மையே குறித்த இணையத்தளத்தின் கேவலமான தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இச்செயற்பாடானது எமது நீதிவானையும் அவரது சேவையையும் அவரது அர்ப்பணிப்பான செயற்பாடுகளையும் நிறுத்தி அவரை இவ்விடத்திலிருந்து மாற்றுவதற்காக முயலும் நாசகாரசக்திகளின் செயற்பாடாகவும் விளம்பரம் தேடும் ஒரு கேவலமான இணையத்தளத்தின் செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

மேற்படி இணையத்தளத்தின் செயற்பாடானது ஒரு நீதிபதியின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நீதியான செயற்பாட்டை தடுக்கும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தினை பாதிக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடு தொடரும் பட்சத்தில் எந்தவொரு நீதிபதியும் தமது நீதித்துறை செயற்பாடுகளில் சுதந்திரமாக செயற்படுவது இயலாத காரியமாகி விடும். மேலும் இவ்விணையத்தளத்தின் செயற்பாடானது முழு நீதித்துறை செயற்பாட்டையும் பாதிப்பதாக அமைந்துள்ளதுடன் நியாயமாக செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களையும் பாதிப்பதாக அமைந்துள்ளது.

எனவே இது தொடர்பில் ஊடகத்துறை அமைப்பும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுடன் குறித்த இணையத்தளத்தை தடை செய்யவும் கேட்டுக்கொள்கின்றோம்.      மேலும் எமது மண்ணில் கடந்த 30 வருடகால யுத்தத்தின் பின் மனமுவந்து சேவையாற்ற முன்வந்துள்ள நீதிபதிகளின் கௌரவத்தைப் பாதுகாக்கவும் உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் எமது பணிப்பகிஸ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட நீதிமன்ற வழக்கிற்குரிய மக்களிடம் இன்று சட்டத்தரணிகள் தோன்றாததினால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.