இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஈ பீ டி பீ எம் பி அற்புதனின் நந்திக் கதையும் “பண்டாரநாயக்க” தமிழ்ப் பலகையும்:-

நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்…

banda

 

1998 ஆம் ஆண்டு .

பாராளுமனறத்தில் ஒருநாள்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள் -உடனான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று ஊடக அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

இது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நான் ஐ ரி என் சார்பில் அதன் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி என்ற வகையில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சித்தார்த்தன்,   டக்ளஸ் தேவானந்தா , ரமேஷ் அற்புதராஜா , ரமேஷின் கொலையை அடுத்து . நாட்டைவிட்டு வெளிநாடு சென்ற அசோக் ஆகியோர் ஒழுங்காகக் கலந்து கொள்வது வழக்கம். கூட்டணியின் உறுப்பினர்களாக செல்வராஜாவும் ஜோசெப் பரராஜசிங்கமும் தங்கத்துரை கலந்து கொள்வர். தங்கத் துரை மட்டும் ஒழுங்காகக் கலந்து கொள்வார்.

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுஹையிர் “தொப்பி” மெளலானா ஆகியோர் ஒழுங்காக கூட்டத்திற்கு வருவார்கள்.

ரமேஷ் அற்புதராஜா பல கேள்விகளை ஒவ்வொரு முறையும் அதிகாரிகளிடம் தொடுப்பார். வானொலி தொலைக்காட்சியில் தமிழ் உத்தியோகத்தர் நியமனம் , அலைவரிசைகளில் தமிழுக்கு ஒதுக்கீடு, இலங்கை வானொலிக்கு ஆசிய சேவை மூலமான வருமானம் அதன் மூலம் தான் அதன் சீவன் இயங்குதல் போன்ற பல விடயங்களை ரமேஷ் கேட்பதுண்டு. ரமேஷின் கேள்விகளுக்கு கூட்டுத்தாபனத் தலைவர்கள் பதில் சொல்வதில் திக்குமுக்காடுவார்கள். இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவருக்கு யாரோ உள்ளிருந்து கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரி ஒருவர் சொன்னதையும் இங்கு குறிப்பிட்ட வேண்டும்.

கூட்டணி எம்பிக்கள் கேள்விகள் கேட்பது குறைவு.

இங்கு ஒரு விடயத்தையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.

இந்தக் கூட்டத் தொடர் தொடங்கு முன்னர் அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டக்ளஸ் தேவானந்தா , மகேஸ்வரி வேலாயுதம் , தவராசா ஆகியோர் இக் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து அங்குள்ள பிரச்சினைகள் பற்றி விலாவாரியாக அறிந்து கொண்டனர். அதனால் அவர்களும் நல்ல ஆயத்தத்துடன் வினாக்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு சென்றிருந்தனர். முஸ்லீம் எம்பிக்களும் சில முஸ்லீம் தயாரிப்பாளர்களுடன் சந்திப்பை நடத்திவிட்டே வந்தனர்.

கூட்டணி இப்படி எந்தக் கூட்டமும் நடத்தவில்லை .

இலங்கை வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் பிரேம்ஜி ஞானசுந்தரம் என்பவர் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்தார்.அவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் முன்னோடி உறுப்பினருமாவார். சந்திரிகா அரசாங்கத்தில் ஊடகங்களில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

ஈ பி டி பி சார்பில் ரமேஷ் அற்புதராஜா கேள்விகளைக் கேட்டார். ரூபவாஹினி ஐ ரி என் இலங்கை வானொலி தலைவர்கள் பதில் சொல்ல முன்னரே – பிரேம்ஜி பதில் சொல்வார். தலைவர்களுக்கும் தமிழ் அதிகாரிகளுக்கும் அங்கு வேலை இருக்கவில்லை. கூட்டம் முடிந்து எல்லோரும் வெளியே வந்தனர். ரமேஷ் பிரேம்ஜியை நெருங்கினார் . “இங்க பாரும் ! நான் கேள்வி கேட்டால் நீர் ஏன் பதில் சொல்கிறீர்?” (உள்ளே கூட்டத்தில் வாருங்கள் நீங்கள் போங்கள் என்று பிரேம்ஜியை அழைத்த ரமேஷ் வெளியில் அவரை அழைத்த விதம் வேறு)

” அது தம்பி …”

” இஞ்ச பாரும்

!! நான் தம்பி இல்லை ! நான் எம் பி ! கெளரவ எம் பி என்று கூப்பிடும்! இது பார்லிமென்ட் !

“யெஸ் !”

” யெஸ் இல்லை ஓம் ! தமிழில கதைப்பம் !”

“சரி சொல்லுங்கள்..”

“நான் அவங்களைக் கேட்க முந்தி நீர் ஏன் …?”

பிரேம்ஜி விளக்க முயல்கிறார்..

ரமேஷ் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்…

ரமேஷ்:-

“உங்களை மாதிரி ஆட்கள் நந்தி மாதிரி இருக்கிற படியால் தான் எங்கட பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருக்கு.அவங்கள்ள பிழை இல்லை. நாங்களும் அரசாங்கத்தோடு தான் இருக்கிறம் .உங்களை மாதிரி ஆட்களாலதான் நாங்கள் அவங்களுக்கு இன்னும் சிரைக்க வேண்டியிருக்கு !..” அருகில் வந்த டக்ளஸ் ..ரமேஷிடம் “சரி சரி வாரும்..!”

ரமேஷ்:- அல்லாட்டால் எங்கட பிரச்சினைகள் எப்பவோ தீர்ந்திருக்கும். நான் எம் பி தான்.. ஆனால் “…………”

கடுமையாகச் சொல்கிறார் .

டக்ளஸ் தேவானந்தா வந்து ரமேஷை இழுத்துச் செல்கிறார் ..டக்ளஸ்:- ” வாரும் வாரும்..போதும்..ஐயா நீங்கள் நாங்கள் கேட்கேக்க பேசாமல் இருங்கோ …அவர்கள் சொல்லட்டும்…நீங்களே பதிலைச் சொன்னால்…நாங்களும் ஒன்றும் கேட்கேலாது ..அவர்களும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்…” பிரேம்ஜியை மற்றவர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

பண்டாரநாயக்கவின் பெயர் தவறாக வந்த பதிவில் வந்த சில குறிப்புக்களை பார்க்கும்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தினமுரசு ஆசிரியருமான ரமேஷ் சொன்ன நந்திக் கதையே எனக்கு நினைவுக்கு வந்தது. பண்டாரநாயக்காவின் பெயர் பற்றிய பலகையை நான் இன்னொருவரின் பதிவிலிருந்து இட்டு சில கற்பனைக் கதைகளை செய்தியாக குறித்த பின்னர் சில நண்பர்கள் அது கணினி வேலை, அப்படி ,இப்படி என்று தகவல்கள் அனுப்புகிறார்கள்.

“ஊடகப் புலனாய்வு ” ஆக அவர்கள் அதனைக் கருதலாம்.

இலங்கையின் தமிழ்ப் பலகை பற்றிய விவகாரம் பற்றி இலங்கையில் உள்ள எவருக்கும் தெரியவில்லை . கனடாவில் உள்ளவர்களுக்கு அது தெரிந்துவிடுகின்றமை ஆச்சரியம் அளிக்கிறது. இந்தப் பலகை குறித்து- அரச கட் சிகளைச் சேர்ந்த தமிழர்களே அது கணினி மந்திரம் என்று இதுவரை சொல்லவில்லை. அங்கஜன் ராமநாதன் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. பொறுப்பு வாய்ந்த அமைச்சர் மனோ கணேசன் கூட கெளரவமாக “அது எங்கே இருந்தது என்பதையும் குறிப்பிடுங்கள் ” என்று நாசூக்காக பதில் சொல்லியிருக்கிறார். அது அவருக்கேயுரிய அவரது ஆளுமை.

அவருக்கு இந்தப் பலகைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டுமென்பதில் ஆர்வம் இருப்பதையே அவரது அந்தப் பதில் காட்டி நிற்கிறது என்பதை இந்த விடயத்தில் அவரோடு நிற்பவர்களே உணர்வார்கள். இதுதான் கணிணிப் பிரச்சினை என்றால் ஏற்கனவே நாட்டில் தமிழ்ப் பிழைகளுடன் நிமிர்ந்து நிற்கும் பலகைகள் யாவும் கணிணிப் பிழைகளா ?

இப்படியான சமூக வலைத்தளங்களின் பதிவுகளை அமைச்சர் மனோ கணேசன் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படின் – “இல்லை அது கணினி விளையாட்டு!” என்று நம்மவரே பிரேம்ஜி பாணியில் சொல்லும் பதில்களும் அங்கு காணப்படும். இலங்கையின் “மொழிப பிரச்சினையின்” கர்த்தாவே அமரர் பண்டாரநாயக்க.

பண்டாரநாயக்கவுடன் தமிழ் மொழிப் பிழைகளுக்கு ஒரு முடிவு ஏற்படுமென்று நம்புவோம் !

நந்திகளாக இல்லாமல்!!

 

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.