Home இலங்கை தடம் மாறுகிறதா, நல்லாட்சி அரசாங்கம்? செல்வரட்னம் சிறிதரன்

தடம் மாறுகிறதா, நல்லாட்சி அரசாங்கம்? செல்வரட்னம் சிறிதரன்

by admin

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் கிள்ளுக்கீரையாகவே கருதப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பான்மை இன மக்களின் தயவில் வாழ வேண்டிய நிலையில், இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, படிப்படியாக, இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தச் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதையே இப்போதும் காணக் கூடியதாக இருக்கின்றது.
பல இனங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். பல மதங்களை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். இந்த நாட்டின் 75 வீதம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அவர்களில் பெருமளவானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை இனத்தவர்களாக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் அடுத்தடுத்த நிலைகளிலும், அதற்கு அடுத்த நிலைகளில் மலேயர், பறங்கியர் போன்ற வேறு இன மக்களும் இங்கு வாழ்கின்றார்கள்.
ஆயினும் ஏனைய ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றியுள்ள நாடுகளைப் போன்று பல்லின மக்கள், பல மொழிகளையும் மதங்களையும் பின்பற்றுகின்ற மக்கள் வசிக்கும் நிலையில் இலங்கையில் அரசியல் நிலைமை காணப்படவில்லை. இங்கு சிறுபான்மை மக்களின் உரிமைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும், அவற்றை, பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதே பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலைமைகளில் முக்கியமானவற்றை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐநாவின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்
.
சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் கல்வியிலும், அரச தொழில்துறைகளிலும், வர்த்தகத்திலும் சிறந்து விளங்கியதை நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் பெரும்பான்னை இனத்தவராகிய சிங்கள மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்றோ, அவர்களுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்றோ அவர்கள் எண்ணவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.
மாறாக, தமிழ் மக்களின் திறமை அவர்கள் சமூகத்திலும், அரசியலிலும், தொழில் துறைகளிலும் அடைந்திருந்த உயர்ச்சியைப் பொறாமை கண்கொண்டு நோக்கியதோடு, அவர்களை அந்த நிலையில் இருந்து சரித்து வீழ்த்தி அவர்கள் வகித்த இடத்தைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிங்கள மக்களின் தலைவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.
அரசியல், மதம், வர்த்தகம், கல்வி, அரசாங்க மற்றும் துறைசார்ந்த தொழில்துறைகள் என பல வழிகளிலும், தமிழ் மக்களை எந்த வகையில் வீழ்த்தலாம், அவர்களை எவ்வாறு முந்திச் செல்லலாம் என்ற நோக்கத்திலேயே அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
அது மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாக அவர்களை எவ்வாறு பின்னடையச் செய்யலாம் என்ற நோக்கத்திலும் அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்ததைப் பல சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
தமிழ் மக்கள் இயல்பாகக் கொண்டிருந்த திறமையுடன் போட்டியிட்டு தமது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, சிங்கள மக்கள் தாங்கள் பெரும்பான்மை இன மக்கள் என்ற ரீதியில் எந்தத் துறையாயினும், அதில் தங்களுக்கு விகிதாசார அடிப்படையில் உரிமைகளை உரித்தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குறுக்கு வழியைப் பின்பற்றி அரசியல் தலைவர்கள் செயற்பட்டார்கள். அதற்கு உறுதுணையாக சிங்கள பௌத்த மதத் தலைவர்களும் பல்வேறு துறைகளில் அதிகார ரீதியாக அதிகாரத்தைக் கொண்டிருந்தவர்களும் செயற்பட்டிருந்தார்கள்.
இதன் காரணமாகவே, கல்வி, அரச தொழில்வாய்ப்பு, தொழில்துறை முயற்சிகளுக்கான அனுமதி போன்ற இன்னோரன்ன விடயங்களில் விகிதாசார நடைமுறையை சிங்கள் ஆட்சியாளர்கள் புகுத்தினார்கள்.
விகிதாசாரத்தைப் பின்பற்றுவதற்காக கல்வியில் தரப்படுத்தல் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் திறமைசாலிகளான தமிழ் இளைஞர் யுவதிகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும், தடைகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது. பலர் உயர் கல்வி வாய்ப்பை இழந்து தமது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாகினார்கள்.
கல்வியில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தலே, தமிழ் இளைஞர் யுவதிகள் அரசியலில் ஈடுபடவும், ஆயுதப் போராட்ட வழிமுறையில் திசை திரும்பிச் செயற்படுவதற்குமான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பெரும்பான்மை இனத்தவரின் பிடிவாதம் நிறைந்த பேரின, இனவாத சிந்தனையும் செயற்பாடுகளுமே, சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளையும் மத உரிமைகளையும் மறுப்பதற்கும், ஒறுப்பதற்குமான முக்கிய காரணங்களாகின.
அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டன. மத ரீதியான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் குறிப்பாக இந்துக்களின் பிரசித்தமான வணக்கத்தலங்களும்கூட சிங்கள பௌத்தர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே யுத்தம் முடிவடைந்த பின்னரும், குறிப்பாக வடக்கில் பல இடங்களில் இந்து ஆலய வளவுகளிலும் இந்து கோவில்களுக்கு அருகிலும் புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அத்துடன் அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் முருங்கன், திருக்கேதீஸ்வரம், வவுனியா கனகராயன்குளம், கிளிநொச்சியில் கனகாம்பிகைக் குளம், முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பிரதேசத்திலும், யாழ் குடாநாட்டில், யாழ்ப்பாணம் நயினாதீவு போன்ற பல இடங்களிலும் இவ்வாறாக மத ரீதியான அத்துமீறல் நடவடிக்கைகள் – ஒடுக்குமுறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
மத ரீதியான இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை இனவாதிகளாகச் சுட்டிக்காட்டி, நாட்டில் இனவாதத்தைக் கிளப்பி அமைதியைக் குலைக்கின்றார்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் தூபம் போடுகின்றார்கள் என்று தென்னிலங்கையில் உள்ள இனவாத கடும்போக்காளர்களும் கடும்போக்குடைய பொதுபல சேனா உள்ளிட்ட பௌத்த மதத் தீவிரவாதிகளும் தமிழர் தப்பின் மீது குற்றங்களைச் சுமத்தி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அவர்களே அவர்களுடைய செயற்பாட்டினால் பாதிக்கப்படுகின்ற சிறுபான்மையின மக்களை நோக்கி ‘நீங்களே இனவாதிகள், இனவாதத்தைத் தூண்டுகின்றீர்கள்’ என்று குற்றம் சாட்டுகின்ற விநோதமான அரசியல் போக்கை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
மொத்தத்தில் சிறுபான்மையினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத பிரசாரத்தையே, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பேரின சிங்கள அரசியல்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் உரிய உத்தியாக, அரசியல் செயற்பாடாக முன்னெடுத்து வந்துள்ளார்கள்.
இனவாதத்தின் அடிப்படையில் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதனால் வெடித்த யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், இந்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் உத்தியை அவர்கள் இன்னும் கைவிட்டபாடில்லை.
சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் பகிர்ந்தளி;க்கப்படக் கூடாது என்பதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இந்த நாட்டில் விகிதாரசார தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். அந்த முறைமையன் கீழ் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசியல் பலத்தைப் பெற முடியாததொரு நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் என்ற இப்போதைய அரசாங்கம் அந்தத் தேர்தல் முறையை மாற்றி, ஒரு கலப்பு தேர்தல் முறையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது.
விகிதாசார தேர்தல் முறையும் தொகுதிவாரியான தேர்தல் முறையையும் கொண்ட – ஒரு கலப்பு தேர்தல் முறையானது சிறுபான்மை இன மக்களினதும், சிறிய அரசியல் கட்சிகளினதும் அரசியல் பலத்தை குறைப்பதற்கு அல்லது இல்லாமற் செய்வதற்கே வழிவகுக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக அச்சம் நிலவுகின்றது.
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்குப் பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை இல்லாமற் செய்வது, புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
இந்த நடவடிக்கையும்கூட உண்மையிலேயே சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை உறுத்திப்படுத்தி, அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வவதற்குரிய நேர்மையான முயற்சிதானா, என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது.
முதன் முறையாக, நாட்டின் பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி, புதிய அரிசயலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னர் அரசயலமைப்புக்களை உருவாக்கியபோது, சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் தலைவர்களுடைய கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. அதேபோன்று ஏனைய அரசியல் கட்சிகளினது அரசியல் கருத்துக்களும் கேட்கப்படவில்லை.
ஆனால் இப்போது, சகல அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மட்டுமல்லாமல், பெதுமக்களின் கருத்துக்களும் திரட்டப்பட்டிருக்கின்றன.
எனவே, புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு இந்த நாட்டுக்கும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் அல்லது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு என்ற ரீதியில் அதற்கு எதிராகக் குறை கூறவோ அல்லது குற்றம் சுமத்தவோ முடியாத ஒரு நிலைமை ஏற்படப் போகின்றது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கு புதிதாக உருவாக்கப்பட்டபோது இருந்ததிலும் பார்க்க, படிப்படியாக தடம் மாறிச் செல்வதாகவே பலரும் உணர்கின்றார்கள். நிலைமைகளும் அவ்வாறே காணப்படுகின்றன.
முன்னைய ஆட்சியிலும்பார்க்க புதிய ஆட்சி சிறுபான்மை இன மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உளப்பூர்வமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆயினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்கள் செல்லச் செல்ல புதிய ஆட்சி தனது பொறுப்புக்களை குறிப்பாக சிறுபான்மை இன மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் காலத்தை இழுத்தடிக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள்.
விசேடமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை இந்த அரசாங்கமாவது துரிதப்படுத்தும், இராணுவத்தினர் கைப்பற்றி நிலைகொண்டுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை மீளக் கையளித்து, கால் நூற்றாண்டுக்கு மேலாக இடம்பெயர்ந்துள்ள அவர்களின் அவல நிலைக்கு முடிவேற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது,
ஆனால் இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
வலிகாமம் வடக்கில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருந்த கொட்டில்கள் ஓட்டைகள் நிறைந்த கிடுகு கூரைகளைக் கொண்ட குடிசைகளை நேரில் பார்வையிட்டு, அங்கிருந்த ஒரு திண்ணையில் அமர்ந்து அந்த மக்களின் அவல நிலைமை குறித்து கேட்டறிந்ததன் பின்னர் ஆறு மாதங்களில் அவர்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
அதேபோன்று கடந்த வருட இறுதிப்பகுதியில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிரக்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், அப்போது சிறைச்சாலை ஆணையாளராக இருந்த இப்போதைய வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஷ்பகுமார ஆகியோரின் ஊடாக வழங்கிய உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.
இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இராணுவத்தினரிடம் சரணடைந்து இருக்குமிடம் தெரியாமல் போயுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலும் புதிய அரசாங்கம் பொறுப்பான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இலங்கை தொடர்பான ஐநாவின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி உறுதியளித்த இந்த அரசு அது தொடர்பில் ஆமை வேகத்தில் காலம் கடத்துகின்ற போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது,
காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பரணகம ஜனாதிபதி ஆணைக்குழு, நம்பிக்கையற்ற விதத்திலான விசாரணைகளையே முன்னெடுத்திருந்தது. ஆயினும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கின்ற ஒரு தோற்றப்பாட்டில், ஐநா பிரேரணையில் பொறுப்பு கூறுவதற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் காணாமல் போனோர் தொடர்பிலான செயலகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் சரியான முறையில் உள்வாங்கப்படவில்லை. அவர்களின் பங்களிப்பை உள்ளடக்கும் வகையில் அவர்களுடைய பிரதிநிதித்துவமும் உள்ளடக்கப்படவில்லை என்று பொறுப்பு கூறும் நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் தோளோடு தோள்கொடுத்துச் செயற்பட்டு வந்துள்ள பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இது போன்ற நிலைமைகள் காரணமாக, புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிறுபான்மையினராகிய மக்கள் மத்தியில் கரைந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
முன்னைய அரசாங்கம் இந்த விடயத்தில் பெயரளவிலேயே காரியங்களை நகர்த்தியது.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களுடைய பிரதேசங்களில் மீள்குடியேற்றிய போதிலும், மீள்குடியேற்றப் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தி அந்த மக்களை மேலும் மேலும நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது. ஆனால் புதிய அரசாங்கம் இந்த நிலைமைகளில் சிறிய அளவிலேயே மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இருப்பினும் இராணுவ அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்யும் வகையில் அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கோ அல்லது இராணுவ முகாம்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையோ புதிய அரசாங்கம் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கவில்லை.
இதனால், இந்த அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் விளைவுகளை ஏற்படுத்தத் தவறியிருக்கின்றது. புதிய அரசாங்கத்தின் மீது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அதேவேளை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையற்ற நிலைமை நீடித்திருப்பதாக ஐநாவின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவர் ஏனைய ஏனைய இராஜதந்திரிகளைப் போல அல்லது ஏனைய ஐநா அதிகாரிகளைப் போலல்லாமல் நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றிப் பார்த்து உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார் என கூறத் தக்க வகையில் பல்வேறு தரப்பினரையும் பல இடங்களுக்கும் சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியதன் பின்பே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
எனவே, காலம் காலமாக நீடித்து வந்த சிறுபான்மை இன மக்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடவடிக்கைகளின் பின்னணியில் ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மறைமுகமான முறையில் மிகவும் தந்திரோபாய ரீதியில் சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பினருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளோ இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்;வு காண்பதற்காக சமஸ்டி முறையை தமிழ் மக்கள் பொருத்தமான தீர்வாக விரும்பியிருக்கின்ற போதிலும், அதுபற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மறுதலையாக – முரண்பட்ட நிலைமையாகவே காணப்படுகின்றது,
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையைக் கொண்ட வடக்குகிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் கூறி வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் ஒற்றையாட்சி நிலைப்பாடும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் காணப்படுகின்ற இறுக்கமான போக்கும் சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்திருக்கின்றது.
இதுவே சிறுபான்மை இன மக்களை இந்த அரசாங்கமும் கிள்ளுக்கீரையாகக் கருதுகின்றதோ என்ற கேள்வியை எழச் செய்திருக்கின்றது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran October 23, 2016 - 12:06 am

தமிழ் மக்களும் மற்றும் தமிழ்த் தலைவர்களும் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More