Home இலங்கை குற்றத்தை மறைப்பது பாரிய குற்றம்.

குற்றத்தை மறைப்பது பாரிய குற்றம்.

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைகழக மாணவர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மறைப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் அனைவரும் உடந்தையாக செயற்பட்டு இருக்கின்றர்களா? எனும்  சந்தேகம் எழுந்துள்ளது.

அது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவ்வாறு துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மறைப்பதற்கு பொலிசார் உடந்தையாக செயற்பட்டு இருந்தால். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.ஏனெனில் ஒரு குற்றத்தை புரிந்தவரை காப்பாற்ற நினைப்பதும் , அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் பெருங்குற்றம் ஆகும். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது அவர்களை காப்பாற்ற முனைவதும் குற்றமே.குற்றத்தை தெரிந்தும் அதனை மறைக்க முனைவதும் குற்றமே.
குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்தமை , குற்றத்தை தெரிந்தும் மறைத்தமை , குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்தமை , போன்றவை  தண்டனைக்கு உரிய குற்றமாகும்.இவற்றுக்கு  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் உள்ளன. பல தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறன குற்றங்களுக்காகவே பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்றார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்மராட்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார். அந்த சம்பவத்தை மறைக்க முயன்றார்கள் என கூறி மூன்று ஆசிரியைகள் உட்பட , எட்டு ஆசிரியர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அந்த எட்டு ஆசிரியர்களும் செய்த குற்றம் , குற்றத்தை மறைக்க முயன்றமையே.
தடயங்களை  அழித்தார்கள்  ?
 
img_3214பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட தாக கருதப்படும் குளப்பிட்டி சந்திப்பகுதியில் அதிகாலை 4 மணிக்கே பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்ததை கண்டதாக ஒருவர் தெரிவித்து இருந்தார்.
அதேவேளை காலை 7 மணிக்கு  கொக்குவில் சந்தைக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் பெருமளவான பொலிசார் நின்று இருந்ததையும் அவர்கள் எத்தனையோ தேடிக்கொண்டு இருந்ததை தான் அவதானித்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
தடயவியல் பொலிசாரிடம் தடயங்கள் சிக்கவில்லை. 
img_3217
 
சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிசார் நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தார்கள். சம்பவ இடத்தினை முழுமையாக புகைப்படங்கள் எடுத்தும் தடயங்களை தேடியும் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தனர்.
அவர்களிடம் துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக்கோதுகள் எவையும் அகப்படவில்லை. சம்பவ இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தடயவியல் பொலிசாரிடம் ஒரு துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக் கோதும் அகப்படவில்லை. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் , நிச்சயமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் வெற்றுக் கோதுகள் கிடந்தது இருக்க வேண்டும். அவை அங்கிருந்து அகற்றப்பட்டு உள்ளது. அவற்றை அகற்றியவர்கள் யார் ? அதிகாலை வேளை தேடுதல் நடாத்திய பொலிசாரா ?
 
பிரம்படி ஒழுங்கையிலும் தடயங்களை அழித்தார்கள். 
 
img_3259
யாழ்.கொக்குவில் பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 6ம் திகதி  கைத்துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் யாழ்ப்பாண பொலிசார் மீதே சந்தேகம் தெரிவித்து இருந்தனர்.
அந்நிலையில் அன்றைய தினம் 6ம் திகதி காலை வீட்டார் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.அதனை அடுத்து குறித்த வீட்டுக்கு  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த சில பொலிசார் வீட்டின் முன்பாக இருந்த கைத்துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக் கோதினை தம்முடன் எடுத்து சென்றுவிட்டனர்.
பின்னர் மாலை குறித்த வீட்டுக்கு வந்த தடயவியல் பிரிவு பொலிசார் வீட்டின் முன்பாக இருந்த துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக் கோதினை பொலிசார் தம்முடன் எடுத்து செல்ல அனுமதித்து இருக்க கூடாது என வீட்டின் உரிமையாளரிடம் கூறி இருந்தார்கள். எனவே அன்றைய தினமும் தடயத்தை அழிக்க வேண்டிய தேவை ஏன் பொலிசாருக்கு இருந்தது என்பது விடை தெரியாத கேள்வியே
பறக்கும் படை பறக்க ஆரம்பித்து ஆறு மணி நேரத்துக்குள் கொலை.
யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் என்பவற்றை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ் படை ஒன்று வியாழக்கிழமை மாலை களமிறக்கப்பட்டது.குறித்த படை யாழ்.நகர் வீதிகளில் மோட்டார் சைக்கிள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட வாறு யுத்த காலத்தில் இராணுவ ” பீல்ட் பைக் குரூப் ” வீதி ரோந்தில் ஈடுபட்ட போன்று வீதியில் வலம் வந்தார்கள்.
திடீர் என சந்திகளில் இறங்கி வீதியால் வரும் இளைஞர்களை மறித்து சோதனை இடுவார்கள். இவை நடந்து ஆறு மணி நேர இடைவெளிக்குள் குளப்பிட்டி சந்திக்கு அருகில் துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்று உள்ளது.
எதற்காக நூறு மீற்றர் தூரத்தை குற்ற பிரதேசமாக அடையளப்படுத்தினார்கள் ?
img_3250
ஒரு விபத்து சம்பவம் இடம்பெற்றால்   இடத்தை சுற்றி மாத்திரமே பொலிசார் அடையாளப்படுத்த்தி தடயங்களை பாதுகாப்பார்கள்.
ஆனால் இந்த சம்பவத்தின் போது , காங்கேசன்துறை வீதியில் குளப்பிட்டி சந்தியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரையில் குற்ற பிரதேசமாக வீதியின் ஒரு பகுதியை அடையாளப்படுத்தி இருந்தனர்.
அத்துடன் அப்பகுதியில் ஆயுதம் தாங்கிய நிலையில் பொலிசார் நிலை நிறுத்தப்பட்டு இருந்தனர். அவ்வாறு பொலிசார் அடையாளப்படுத்திய இடத்தில் ஆங்காங்கே இரத்தங்கள் காணப்பட்டன. எனவே மாணவர்கள் மீது துப்பாக்கி சூட்டு காயத்துடன் சென்றே மதிலுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.எனவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் குளப்பிட்டி சந்தியில் வைத்தே மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க வேண்டும்.
 
ஊடகவியலாளரிடம் பதிவுகளை மேற்கொண்ட பொலிசார்.
 
சம்பவம் தொடர்பில் காலை 8 மணிக்கு செய்தி சேகரிப்பதற்காக அப்பகுதிக்கு சென்று   தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் காணொளி பதிவுகளை மேற்கொண்ட வேளை அவரிடம் பொலிசார் யார் நீ ? எதற்கு வீடியோ எடுக்கிறாய் ? என விசாரித்து உள்ளனர்.
அதற்கு தான் ஊடகவியலாளர் என கூறிய போது, ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களத்தால்  வழங்கப்படும் அடையாள அட்டையை காண்பி என கேட்டு ,  அடையாள அட்டை இலக்கத்தையும் பதிவு செய்த பின்னரே குறித்த ஊடகவியலாளரை காணொளி பதிவினை மேற்கொள்ள பொலிசார் அனுமதித்தனர்.
வெளியில் சென்று வரும் பொலிசார் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். 
 
பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் கடமைக்கு செல்லும் பொலிசார் பொலிஸ் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தாம் எத்தனை பேர் போறோம். எந்த வகையான ஆயுதம் , எத்தனை கொண்டு போறோம். என்பவை தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று கடமை முடிந்து பொலிஸ் நிலையம் வந்தவுடனும் , தாம் கொண்டு சென்ற ஆயுதம் பற்றியும் , கடமை நேரத்தில் நடந்த குறிப்பிடத்தக்க விடயம் தொடர்பிலும் குறிப்பிட வேண்டும்.
ஆகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் நிச்சயமாக பதிவேட்டில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அத்துடன் எத்தனை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன என்பதனையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்டு இருந்தால் காலையிலையே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிந்து இருக்கும். அவரும் உடனே தனது மேல் அதிகாரிக்கு தகவல் வழங்கி இருப்பார்.
ஆகவே பொலிஸ் உயர் மட்டங்களுக்கு காலையிலையே துப்பாக்கி பிரயோகம் நடந்த விடயங்கள் தெரிய வந்து இருக்கும். அவ்வாறு இருந்த நிலையில் இறுதி வரை பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பில்  வாய் திறக்கவே இல்லை.
உடல் கூற்று பரிசோதனையே துப்பாக்கி சூட்டை கண்டறிந்தது.
img_3158
உடல் கூற்று பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே பொலிசார்  திருவாய் மலர்ந்தனர்
சம்பவம் நடைபெற்ற தினத்தில் காலையில் இருந்து சம்பவம் விபத்து சம்பவமாகவே கூறப்படு வந்தது. பொலிஸ் தரப்பிலும் விபத்து என்றே கூறப்பட்டது. துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தொடர் மௌனமே பொலிஸ் தரப்பில் சாதிக்கப்பட்டது.
அன்றைய தினம் மதியம் , உயிரிழந்த மாணவனான சுலக்சனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயம் இருக்கின்றது எனும் செய்தி மாணவர்கள் மத்தியில் பரவ தொடங்கிய போதும் பொலிஸ் தரப்பில் மௌனம் சாதிக்கப்பட்டது.
பின்னர் மாலை 5 மணிக்கு பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்கள் உடலில் இருந்தமை , உடல் கூற்று பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப் பட்டதனை அடுத்து பொலிஸ் தரப்பில் மௌனம் கலையப்பட்டு திருவாய் மலர்ந்தார்கள்.யாழ்.போதனா வைத்திய சாலையில் நின்ற கிளிநொச்சி மாணவனான கஜனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரை யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் தம்முடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து பொலிசார் வெறியில் இருந்தார்களே தெரியவில்லை. தவறுதலாக நடந்து விட்டது. சுட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவோம். இறுதி நிகழ்வுக்கான செலவுகளை பொலிஸ் தரப்பில் செய்து தருகின்றோம். பிஸ்கட் சோடா எல்லாம் வாங்கி தாரோம். பந்தல் செலவு,  கதிரை செலவு ,  பெட்டி செலவு, போக்குவரத்து செலவு என அனைத்தையும் பொலிசாரே முன்னெடுப்பார்கள். தவறுதலாக நடந்த இந்த சம்பவத்தை மன்னித்து விடுங்கள் என உயிரிழந்த மாணவனான கஜனின் தாயிடம் பொலிசார் கோரியுள்ளனர்.
img_3156
இதேவளை ஊடங்களுக்கு கருத்து கூறாமல் ஒரு நாள் முழுவதும் மௌனமாக இருந்த  யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் சம்பவம் நடந்த தினத்திற்கு மறுநாள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் ,
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று தான் முதலில் கூறப்பட்டது. உடல் கூற்று பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட விடயம் தமக்கு தெரியவந்தது என தெரிவித்து உள்ளார். மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என்பதனை அறிய சட்ட வைத்திய அதிகாரியின் உடல் கூற்று அறிக்கை தேவைப்பட்டு உள்ளது.
சம்பவ தினத்தன்று காலை முதலே துப்பாக்கி சத்தம் கேட்டது என்றும் , மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்து உள்ளனர் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்த விடயம். அது தொடர்பில் உரிய கரிசனை எடுத்து விசாரணைகளை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்டு இருந்தால் . காலையிலையே அவருக்கு துப்பாக்கி பிரயோக விடயம் தெரிய வந்து இருக்கும்.  அதனை அவர் செய்யாததற்கு காரணம் யாது ?
ஒரு பொலிசார் மீது குற்றம் சுமத்தப்படலாம். 
 
இந்த சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஒரு பொலிசார் மீது மாத்திரம் குற்றம் சாட்டப்படலாம். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிசார் தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட சிந்தனையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என கூறி அவர் மீது குற்ற சாட்டு முன்வைக்கப்படலாம். ஏனையவர்களை அவருக்கு எதிரான அரசு தரப்பு சாட்சியமாக மாற்றப்படலாம்.
img_3217
அதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் தரப்பில் தற்காப்புக்காக துப்பாக்கி பிரயோகம் செய்தேன் எனவோ, அல்லது குற்றம் செய்யும் மனநிலையில் செய்யவில்லை எனவே இது கொலை இல்லா மரணம் எனவோ வாதாட படலாம்.எது எப்படியோ குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றத்திற்கு குற்றவியல் தண்டனை வழங்கப்படுவது , அவ்வாறான குற்றங்கள் மேலும் நடைபெற கூடாது என்பதற்காகவும் , ஏனையவர்களுக்கு அது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காகவுமே.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி எனவே இது தொடர்பில் உரிய விசாரணைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் , குற்றத்தை மறைக்க முயன்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவு இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More