குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்து செல்வதாகவும், இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் பாதக விளைவுகள் ஏற்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வாள் மற்றும் கத்திகளைக் கொண்டு ஹாவா என்ற பாதாள உலகக்குழு, யாழ்ப்பாணம் முழுவதிலும் பீதியை பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காரணத்திற்காக சுன்னாகத்தில் ஹாவா குழுவினர் காவல்துறை புலனாய்வாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உரிமை கோரி ஹாவா குழு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்யவில்லை எனவும் வேறு தரப்பினரே இவ்வாறு பிரச்சாரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Add Comment