இந்தியா

சட்டப்பேரவை குழுக்களை அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் – மு.க. ஸ்டாலின்

stalin11_3039484f

சட்டப்பேரவை குழுக்களை அமைக்க சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை சென்றார். அவருடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான தீர்மானத்தை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கொடுக்கவே ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்றதாக தகவல் வெளியாகின.  ஆனால்  ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவில்லை.

தலைமைச் செயலகத்திலிருந்து சென்றபோது செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “மதிப்பீட்டுக் குழு, பேரவைக்குழு, சட்டவிதிகள் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் இதுவரை அமைக்கப்பட வேண்டும். ஆனால் ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை இந்தக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே நானும், துணைத் தலைவர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் பேசியிருக்கிறோம். அப்போது அவர் சட்டப்பேரவை குழுக்களை அமைப்பதாக கூறினார். பேரவைக் குறிப்பிலும் அவர் அளித்த உறுதிமொழி பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை குழுக்கள் இதுவரை அமைக்கப்படாததால் அது தொடர்பான கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் கொடுக்கவே பேரவைக்கு வந்தோம். ஆனால், அலுவலகத்தில் அவர் இல்லை. எனவே, பேரவைச் செயலாளரிடம் கடிதத்தை கொடுத்தோம்.  சட்டப்பேரவை குழுக்களை அமைப்பது தொடர்பாக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவோம். தேவைப்பட்டால், தமிழக பொறுப்பு ஆளுநரையும் சந்தித்து பேசுவோம்.

கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வரின் பொறுப்புக்களை கூடுதலாக கவனித்து வரும் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்க முற்பட்டோம். ஆனால், அவரும் அலுவலகத்தில் இல்லை. எனவே, தீர்மான நகலை தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம்” என்றார் ஸ்டாலின்

Add Comment

Click here to post a comment

Leave a Reply