இந்தியா பிரதான செய்திகள்

1,260 கார்கள் தீபாவளி போனசாக வழங்கிய தொழிலதிபரின் பின்னணி!

car-bonus

சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா. சுமார் ரூ.6 ஆயிரம் கோடி டர்ன் ஓவர் கொண்ட நிறுவனம் இது. இந்த நிறுவனம் 71 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தொழிலதிபர்களில் சவ்பாஜி தோலாக்கியா சற்று வித்தியாசமானவர்.

ஒரு முறை அமெரிக்காவில் எம்பிஏ படித்த மகனுக்கு வெறும் ரூ. 7 ஆயிரம் கொடுத்து அவசியமானதைத் தவிர வேறு எதற்காகவும் செலவழிக்கக் கூடாது. கேரளாவுக்கு சென்று பிழைத்துக் கொள் என கூறி விட்டார்.

கேரளா சென்ற  மகனுக்கு ஒரு சில கண்டிசன்களையும் சவ்ஜிபாய் போட்டிருந்தார். ‘மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது எனது மகன் என்று யாருக்கும் தெரியக் கூடாது’ எனவும் கட்டளையிட்டிருந்தார். தந்தையின் கட்டளையை ஏற்று மகன் த்ரேவியா தோலாக்கியா கேரளாவில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்தார். மக்கள் வேலையில் சேர்வதற்காக கஷ்டப்படுவதையும் ஏழைகளின் கஷ்டத்தையும் மகன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சவ்ஜிபாய் மகனுக்கு இத்தகையை சோதனை நடத்தினார். இந்த செய்தி வெளியானபோது, பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

தனது மகனை மட்டுமல்ல தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரையும் பிள்ளைகளாக கருதுவதும் சவ்ஜிபாயின் வழக்கம். அதனால், ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை சவ்ஜிபாய் நோக்கமாக வைத்துள்ளார். இவரது நிறுவனத்தில் 5,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தீபாவளி போனசாக கார்கள் மற்றும் பிளாட்டுகளை வழங்கப்படும் என சவ்ஜிபாய் அறிவித்தார்.

சொன்னபடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனசாக கார்கள், பிளாட்டுகளை வழங்கி வருகிறார். நிறுவனத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணிபுரிபவர்களை தேர்வு செய்து தீபாவளி பண்டிகை போனசாக கார்கள், பிளாட்டுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு 1,260 கார்கள், 400 பிளாட்டுகளை தனது ஊழியர்களுக்கு போனசாக வழங்கி அசத்தியுள்ளார் தோலாக்கியா. இது தவிர வைர நகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்டுள்ள பிளாட்டுகள் பல லட்சம் மதிப்புக் கொண்டவை. ஆனால், அந்த பிளாட்டுகளை ரூ.15 லட்சத்துக்கு தோலக்கியா வழங்கியுள்ளார். ஒவ்வொரு பிளாட்டும் 1,100 சதுர அடி கொண்டவை. அந்த நிறுவனத்தின் வீடு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த பிளாட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் 11 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல் கார் லோனுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனம் 5 ஆயிரம் வழங்கும்.

இதுகுறித்து சவ்ஜிபாய் தோலாக்கியா கூறுகையில், ”திறமையின் அடிப்படையில் இந்த ஆண்டு 1,716 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வீடு வைத்திருப்பவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 491 கார்களும் 200 பிளாட்டுகளும் வழங்கப்பட்டன. இதற்காக நிறுவனம் ரூ. 50 கோடி செலவிட்டுள்ளது. இந்த திட்டம் ஊழியர்களிடம் நேர்மையான போட்டியை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது. எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சொந்த வீடும் காரும் இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அடுத்த 5 ஆண்டுகளில் எனது ஊழியர்கள் அனைவருமே சொந்த வீட்டுக்கும் காருக்கும் உரிமையாளர்களாக இருப்பார்கள். ஊழியர்கள் தங்கள் உழைப்பைக் கொட்டிக் கொடுக்கின்றர். அவர்களது உழைப்புக்கு நிறுவனம் கைமாறு செய்கிறது’ என்கிறார்.

சவுராஸ்ட்ரா பகுதியில் அம்ரேலி மாவட்டத்தில் துகாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சவ்ஜிபாய். தனது மாமாவிடம் கொஞ்சம் பணம் கடனாக வாங்கி இந்த வைர ஏற்றுமதி தொழிலைத் தொடங்கினார். இவரது நிறுவன ஊழியர்கள் சவ்ஜிபாயை  மாமா என்றே அழைக்கின்றனர்.

நன்றி விகடன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers