இந்தியா பிரதான செய்திகள்

கேரளாவில் உரிமைக்காகப் போராடும் தமிழ் சிறுபான்மையினர்

tamils_3065629f

இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த நிலையில், கேரளாவில் உள்ள மொழிச் சிறுபான்மை தமிழ் மக்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியுள்ளனர்.  ஒன்றுபட்ட சென்னை மாகாணம், 1956-ம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி மொழிகளின் அடிப்படையில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.
சீரமைக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு கேரளாவுடன் இணைந்தது. அங்கு தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். இதேபோல, கர்நாடகாவை ஒட்டிய கேரளாவின் மங்களூரு, காசர்கோடு பகுதியில் கன்னட மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே, இந்த மொழிச் சிறுபான்மை மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும் கேரள அரசு வடிவமைத்தது. ஆனால், தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலம் உருவாகி 60-வது ஆண்டை எட்டியுள்ள இந்த நேரத்திலாவது, மொழிச் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை கேரள அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக எல்லையோரம் உள்ள கேரள மாநிலத்தில் பாலக்காடு, சித்தூர், நெம்மாரா என 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொழிச் சிறுபான்மை தமிழ் மக்கள் அதிகம் உள்ளனர்.
இதுகுறித்து கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மா.பேச்சிமுத்து  இந்திய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில்,

மாநில சீரமைப்பின்போதே எங்களுக்கான பல சலுகைகளை கேரள அரசு அறிவித்தது. எங்கள் நலனுக்காக பல அரசாணைகள் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை. மாறாக சலுகைகளை பறிக்கும் வேலைதான் நடக்கிறது. மொழிச் சிறுபான்மை மக்கள் 3 மொழிகளில் படித்தால் போதும் என்று இருந்த நிலையை மாற்றி, 2015-ல் மலையாளத்தைக் கட்டாயப்படுத்தினர். மலையாள மாணவர்கள் 3 மொழிகளில் படித்தால் போதும். ஆனால் தமிழ் வழியில் படிப்பவர்கள், மலையாளத்தையும் கற்க வேண்டும். 5 சதவீத கல்வி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நீண்ட காலமாக கேட்கிறோம்.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முக்கியத்துவம் அளிக்கின்ற னர். ஆனால், தமிழில் எளிதான ஒரு தேர்வை எழுதிவிட்டு, அந்த பணியையும் கேரளத்தவர்களே தக்க வைத்துக் கொள்கின்றனர். முழுவதும் தமிழிலேயே படிப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, மொழிச் சிறுபான்மை மக்களுக்கு வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு தேவை.

தமிழக தண்ணீரும் இல்லை

தமிழகம் – கேரளா இடையே செயல்படுத்தப்படும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் ஆழியாற்றில் இருந்து ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி நீரை கேரளாவுக்குத் தமிழகம் கொடுக்கிறது. கேரள எல்லையில் உள்ள மூலத்துறை அணை 3 முறை உடைந்ததால், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் செல்லும் வாய்க்காலில் இன்றுவரை நீர் திறக்கப்படுவதில்லை. மலையாள மக்கள் வசிக்கும் இடதுகரை வாய்க்காலில்தான் மொத்த நீரும் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து பெறும் தண்ணீரில் சிறிதளவு கூட, இங்கு உள்ள தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப்பேரவை முன்பாக நேற்று கேரள மாநில மொழிச் சிறுபான்மையினரான தமிழ், கன்னட மக்கள் போராட்டம் மற்றும் கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மொழிச் சிறுபான்மை மக்கள் என்பதற்காக மறுக்கப்படும் அடிப்படை உரிமை களை மீட்பதற்காகவே, மாநிலம் உருவான தினத்தன்று கேரளாவில் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.