குளோபல் தமிழ் செய்தியாளர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ‘உலகின் மிக வேகமான காசாளர்’ என்ற பெயரில் இந்திய பெண் வங்கி ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவியது. அதில் மிகவும் மெதுவாக பணியாற்றியதை நையாண்டி செய்தனர். சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். அந்த வங்கி பெண் ஊழியர், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப் பட்ட நிலையில், சோர்ந்துவிடாமல் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்பது தெரியவந்த நிலையில் அந்தப் பெண் வங்கி ஊழியருக்கு ஆதரவு பெருகுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில், ‘பாங்க் ஒப் மகாராஷ்டிரா’ என்ற வங்கியில் பணிபுரியும் மூத்த ஊழியர் பிரேமலதா ஷிண்டே. இவர் வங்கியில் மெதுவாக பணி புரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ, கடந்த சில நாட்களின் முன்னர் முகநூலில் வெளியானது.
அந்த வீடியோவுக்கு, ‘உலகின் மிக வேக மான காசாளர்’ என்று கேலியாக தலைப்பு கொடுக்கப்பட்டது. அந்த வீடியோவை பாலராஜு சோமிசெட்டி என்பவர் முகநூலில் வெளியிட்டிருந்தார். தற்போது குந்தன் ஸ்ரீவத்சவா என்ற சமூக ஆர்வலர், அந்த வங்கி ஊழியரின் உண்மை நிலையை வெளியிட்டுள்ளார்.
மூத்த காசாளர் பிரேமலதா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்று இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர் என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெற போகிறார் என்றும் அதுவரை சம்பளத்துடன் விடுப்பு எடுத்துவிட்டு அவரால் இருந்திருக்க முடியும் என்றும் பாலராஜு என்பவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஓய்வு நாள் வரை கௌவரமாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த வாரம் தான் பணிக்குத் திரும்பி உள்ளார். அவரால் முடிந்த அளவுக்கு பணியாற்ற வங்கியில் கூடுதல் பரிவர்த்தனைப் பிரிவு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
பிரேமலதாவின் கணவர் இறந்துவிட்டார். மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். சிகிச்சைக்கு தானே மருத்துவ மனைக்குச் சென்று வருகிறார். நமது வாழ்க்கையையும், நமது நாட்டையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரேமலதா போன்று கடுமையாக உழைக்கும் எல்லா பெண்களுக்கும் தலை வணங்க வேண்டும் என்றும் பாலராஜு தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வங்கி ஊழியரை நையாண்டி செய்த தமிழக எழுத்தாளர் ஒருவர் தமிழ் வாசகர்கள் மற்றும் எழுத்துலகத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். அப் பெண் மணியை தகாத வார்த்தைகளால் திட்டி எழுதிய தன்னுடைய பதிவை தன் இணைய தளத்திலிருந்தும் அந்த எழுத்தாளர் நீக்கியிருந்தார்.
சமூக வலைத்தளம் என்ற நவீன ஊடகக் கருவியை வைத்து சிலர் தவறாக பயன்படுத்துவதன் மூலம் சமூகத்திற்கு எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டு.
Related
Add Comment