Home இலங்கை நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:-

நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:-

by admin

யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன.

இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீள் குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் 100 வீடுகளைக் கொண்ட இந்த திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது’ என்று முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது.பின்னர் பயங்கரவாதம் என்ற சொல் நீக்கப்பட்டு விட்டது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய மாவை சேனாதிராசா தெரிவித்த கருத்துக்கள் கவனிப்புக்குரியவை. தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைக்க வேண்டாம் என்று மாவை கேட்டுள்ளார். அதோடு தமிழ் மக்களைத் தோல்வியுற்ற தரப்பாகக் காட்ட வேண்டாம் என்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியுள்ளார்.

மாவை பொதுவாக சுவாரஸ்யமாகப் பேசுவதில்லை என்ற ஒரு அவதானிப்பு உண்டு. அது தவிர நீண்ட நேரம் பேசுவார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால் நல்லிணக்கபுரத்தைக் கையளிக்கும் நிகழ்வில்;; ஆற்றிய உரையில் அவர் படைத்தரப்பை எமது ராணுவம் என்று விழித்த போதிலும், மேற் கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சொல்லிக் கொண்டு நல்லிணக்கத்தைப் பற்றி எப்படிப் பேச முடியும்? பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதற்காக படையினரைப் போற்றிக் கொண்டு நல்லிணக்கத்தை எப்படி உருவாக்க முடியும்? அதாவது மகிந்த அரசாங்கத்தைப் போலவே மைத்திரி-ரணில் அரசாங்கமும் யுத்த வெற்றிவாதத்தைப் பாதுகாக்க முற்படுகிறதா?

தமிழ் மக்களைத் தோல்வியுற்ற தரப்பாகப் பார்ப்பது என்பது மறுவளமாக படைத்தரப்பை வெற்றி பெற்ற தரப்பாகக் கொண்டாடுவதுதான். இவ்வாறு வென்றவர்களாகவும், தோற்றவர்களாகவும் பிளவுண்டிருக்கும் ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை எப்படிக் கட்டியெழுப்ப முடியும்? நல்லிணக்கம் எனப்படுவது இரண்டு சுதந்திரமான சகஜீவிகளுக்கிடையில் ஏற்படுவது. அதில் சம்பந்தப்பட்ட இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக உணர வேண்டும், நம்ப வேண்டும்.தமது மாண்பினை பேணத்தக்கதாக இருக்க வேண்டும்.ஆனால் இலங்கைத் தீவில் நிலமை அவ்வாறாக உள்ளதா?

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு இந்தியாவிலிருந்து வந்த ஒரு ஆவணத்திரைப்பட இயக்குனர் இதைச் சுட்டிக் காட்டினார். வடக்குக் கிழக்கில் தொடர்ந்து பேணப்பட்டு வரும் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்துக்குத் தடையானவை என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். தமிழர் தாயகத்தில் இவ்வாறு நிறுவப்பட்டிருக்கும் வெற்றிச் சின்னங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் யுத்த வெற்றிக் காட்சியறைகள் போன்றன அவை அமைக்கப்பட்டிருக்கும் பகுதி மக்களின் வாழ்க்கையோடு எதுவிதத்திலும் ஒட்டாமல் புறத்தியாக நிற்கின்றன. அவற்றைப் பார்க்கும் தோறும் சராசரித் தமிழ் மனமானது அந்த வெற்றியை தனது வெற்றியாகக் கருதவில்லை. மாறாக தான் தோல்வியுற்றதாகவே அது உணர்கிறது, நம்புகிறது.

ஆம், இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் பேசுவதென்றால் முதலில் வெற்றிச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், யுத்த வெற்றிக் காட்சியறைகள், மற்றும் இறந்தவர்களை நினைவு கூர்தல் போன்றவற்றைப் பற்றியகொள்கை முடிவொன்றை எடுக்க வேண்டும். வட-கிழக்கில் படையினரின் வெற்றிச் சின்னங்கள் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அவை மிகவும் புனிதமாகவும், கவர்ச்சியாகவும் பேணப்பட்டு வருகின்றன. 2009 மேக்குப் பின்னரான வெற்றி வாதத்தின் ஆட்சியின் கீழ் அவை உல்லாசப்பயண மையங்களாக உருவாகியிருந்தன. ஆனால் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நிலமை அப்படித்தானிருக்கிறது.

அரச படைகளின் நினைவுச் சின்னங்களும், வெற்றிச் சின்னங்களும் போற்றப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன. ஆனால் புலிகள் இயக்கத்தின் நினைவுச் சின்னங்களும் பெரும்பாலான துயிலுமில்லங்களும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. தமது பிள்ளைகளின் படங்களை தமது வீட்டுச் சுவர்களில் தொங்கவிடுவதற்கு கூட பெற்றோரும் உறவினரும் அச்சப்படும் ஓர் அரசியற் சூழல் தொடர்ந்தும் நிலவுகிறது. புலிகள் இயக்கத்தின் பாடல்களைக் கேட்பது அதன் சின்னங்களைப் பேணுவது போன்றன சட்டப்படி குற்றமாகத் தீர்ப்பளிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் மற்றும் சட்டச் சூழல் இப்பொழுதுமிருக்கிறது.

ஆனால் நிலைமாறு கால நீதிப்பொறிகளின் படி, நினைவு கூர்தலுக்கான உரிமைக்கு அதிக அழுத்தம் உண்டு. நிலைமாறு கால நீதிப்பொறிமுறைக்குரிய நான்கு பெருந் தூண்களில் ஒன்று இழப்பீடு (Reparation) ) ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பௌதீக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கி அவர்களை இழப்புக்களிலிருந்து தேற்றி எடுப்பதோடு அவர்களுக்கே உரிய மாண்பினை உறுதிப்படுத்துவது பற்றி இப்பிரிவின் கீழ் அறிவுறுத்தப்படுகிறது.

இப்பிரிவில் இழப்பீட்டின் ஐந்து வகைகளுக்குள் நான்காவதாகக் கூறப்படுவது Satisfactionn- திருப்திப்படுத்துதல் ஆகும். அதாவது பாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்துவது என்று பொருள். பின்வரும் வழிகளில் பாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.அவையாவன மனித உரிமை மீறல்கள், துஷ;பிரயோகங்கள் போன்றவற்றை நிறுத்துவது, உண்மையைக் கண்டறிவது, காணாமற் போனோரைத் தேடுவது, காணாமற் போனவர் அல்லது கொல்லப்பட்டவரின் மிஞ்சியுள்ள உடற்பாகங்களை உரிய முறைப்படி அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது, நீதி மற்றும் நிர்வாக ரீதியிலான தடைகளை ஏற்படுத்துவது, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பது,இறந்தவர்களையும், காணாமற் போனவர்களையும் நினைவு கூர்வதும், இறந்தவர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான ஞாபகங்களைப் பேணுவதும்.

எனவே நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியாகக் காணப்படும் இழப்பீட்டுக்கான நீதி என்ற பிரிவின் கீழ் தமிழ் மக்கள் நினைவு கூருவதற்கும், ஞாபகங்களைப் பேணுவதற்கும் முழு உரித்துடையவர்கள் ஆகும். அது முதலாவதாக அவர்களுடைய அரசியல் கூட்டுரிமையின் பாற்பட்டதாகும். இரண்டாவதாக குறிப்பாக அது ஒரு பண்பாட்டுரிமை. மூன்றாவதாக உளவியல் நிபுணர்கள் கூறுவது போல அது ஒரு கூட்டுச் சிகிச்சையுமாகும். வெளிப்படுத்தப்படாத அடக்கப்பட்ட துக்கமானது கூட்டு மனவடுவாக மாறுகின்றது. அல்லது கூட்டுக் கோபமாக மாறுகின்றது.

கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மேற்படி கூட்டுரிமையை முழு அளவில் அனுபவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு புறம் தமிழ் மக்கள் நினைவு கூருவதற்கும், ஞாபகங்களைப் பேணுவதற்கும் முழுமையாக அனுமதிக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது. இலங்கைத் தீவின் அரசியல் யாப்பும் பயங்கரவாத தடைச் சட்டமும் அவ்வாறு தமிழ் மக்கள் முழுஅளவு நினைவு கூர்வதையும், ஞாபகங்களைப் பேணுவதையும் சட்டப்படி குற்றங்களாக்குகின்றன. இன்னொரு புறம் படைத்துறையினரின் வெற்றிச் சின்னங்களும், நினைவுச் சின்னங்களும், வெற்றிக் காட்சியறைகளும் பிரமாண்டமான அளவில் பேணப்படுகின்றன. இது நிலைமாறு கால நீதி தொடர்;பில் தமிழ் மக்களை நம்பிக்கையிழக்க வைக்கக் கூடிய ஓர் ஒப்பீடு ஆகும்.

எனினும்,ஆட்சி மாற்றத்தின் பின் அதிகரித்து வரும் சிவில் மற்றும் ஜனநாயக வெளிக்குள் தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அனுமதிக்கப்படும் நிலமைகள் ஓரளவிற்கு அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது. திலீபன் நினைவு நாளும் நினைவு கூரப்பட்டது. வன்னியில் இரண்டு துயிலுமில்லங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. எனவே கடந்த 22 மாதகால வளர்ச்சிகளின் பின்னணியில் வைத்து யோசிக்கும் போது இம்மாதம் மைத்திரி – ரணில் அரசாங்கம் எடுக்கப்போகும் முடிவு அதிகம் கவனிப்புக்குரியதாகவிருக்கும். நல்லிணக்கத்துக்கான முன் நிபந்தனைகள் மற்றும் நிலைமாறு கால கட்ட நீதிப் பொறிமுறைகளைப் பலப்படுத்துவது என்பவற்றின் அடிப்படையில் அரசாங்கம் மாவீரர் நாளை குறித்து எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்?

இம்மாதம் தமிழ் மக்களுக்குரிய நினைவு கூர்தல் மாதங்களில் ஒன்றாகும். நிலைமாறு கால கட்ட நிதிப் பொறிமுறைகளின் படி தமிழ் மக்கள் தமது கூட்டுத்துக்கத்தை அழுது தீர்ப்பதற்கும் அதைக் குறியீடாக்கி நினைவுச் சின்னங்களை கட்டியெழுப்பிப் பேணுவதற்கும் உரித்துடையவர்களே. அரசாங்கம் தனது வெற்றிச் சின்னங்களையும், நினைவுச் சின்னங்களையும் பேணுவது போல கொண்டாடுவது போல,தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத்தரப்புக்களும் தமக்குரிய நினைவுச் சின்னங்களையும், நினைவு நாட்களையும் பேணிக் கொண்டாடுவதன் மூலம் தமது மாண்பினைப் பேணும் உரித்துடையவர்களே.

ஆனால் குளப்பிட்டிச் சம்பவம் நிலைமாறுகால கட்ட நீதியின் பெருந்தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில்; நிலைமாறு கால நீதிச் செய்முறைகளுக்குரிய மற்றொரு பெருந்தூணாகிய இழப்பீட்டின் கீழ் வரும் நினைவு கூர்தலுக்கும் ஞாபகங்களைப் பேணுவதற்குமான உரிமைகள் குறித்து அரசாங்கம் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும்?

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் கீழ் உலகு பூராகவும் நினைவுச் சின்னங்களும், மியூசியங்களும், காட்சியறைகளும், பாடத்திட்டங்களும்,வரலாற்றுப்பிரதிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கூட்டுத் துக்கத்தை ஆற்றுப்படுத்துவதற்கும், கூட்டுக் காயங்களை சுகப்படுத்துவதற்கும் இப்படிப்பட்ட நினைவுச் சின்னங்களும் இறந்த காலத்தை நினைவுபடுத்தும் செயற்பாடுகளும் அவசியமானவை என்று நிலைமாறு கால நீதி தொடர்பிலான ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.இவ்வாண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தமது வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது போல நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளில் காணப்படும் தாமதங்களையும், முரண்பாடுகளையும் நீக்க வேண்டிய பொறுப்பு மைத்திரி-ரணில் அரசாங்கத்துக்கு உண்டு.

இதனிடையே, ஓய்வு பெற்ற படைப் பிரதானிகள் தமது போர் அனுபவங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். இவ் அனுபவங்களை நாட்டின் பாடத்திட்டங்களுக்குள் உள்ளடக்க வேண்டும் என்று முன்னாள் அரசுத் தலைவர் ராஜபக்ஷ கேட்டிருக்கிறார். ஆனால் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளின் படி கடந்த காலத்தை காய்தல், உவத்தல் இன்றி வெட்டித் திறக்க வேண்டும் என்பது கட்டாய முன்நிபந்தனை ஆகும். உண்மை பக்கச்சார்பின்றி பகிரங்கமாகப் பேசப்படும் பொழுது நீதி பிறக்கின்றது என்பதை நிலைமாறு கால நீதி தொடர்பான எல்லா ஆராய்ச்சி முடிவுகளும் நிரூபித்திருக்கின்றன.

யுகோஸ்லாவியாவுக்கும் ருவண்டாவுக்குமான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் பிரதான வழக்குத் தொடுனரான றிச்சர்ட் கோல்ட் ஸ்டோன் ‘உண்மையை பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் அம்பலப்படுத்துவதே நீதியின் ஒரு வடிவம்தான்’என்று வாதிடுகிறார்.இறந்த காலத்தை ஈவிரக்கமின்றி வெட்டித் திறக்கும் விதத்தில் நாட்டின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்றும் அது பாடசாலைகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் நிலைமாறுகால கட்ட நீதியானது பள்ளிக்கூடங்களிலும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் மேற் சொன்ன நிபுணர்கள் கூறுகின்றார்கள. இதற்கு தென்னாபிரிக்க மற்றும் லத்;தீன் அமெரிக்க முன்னுதாரனங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால் ராஜபக்ஷ கூறுகிறார் வரலாற்றை வெற்றிவாதத்தின் நோக்கு நிலையிலிருந்து எழுத வேண்டும் என்று. இது நிலைமாறு காலகட்ட நீதி தொடர்பான பொது நடைமுறைக்கு முழு அளவு எதிரானது ஆகும். ஆயின் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப எழுதப்படுவது போல இலங்கைத் தீவின் கடந்த 7 ஆண்டுகளையும் அதன் மெய்யான பொருளின் நிலைமாறு காலகட்டம் என்று எப்படி அழைப்பது?

ராஜபக்ஷக்கள் மட்டுமல்ல மைத்திரியும், ரணிலும் கூட என்ன சொல்கிறார்கள்? தமது வெற்றி நாயகர்களை அவர்களும் பாதுகாக்க விளைகிறார்கள். வெற்றி நாயகர்களைப் பாதுகாப்பது என்பதும் வெற்றி வாதத்தின் ஒரு பகுதிதான். ஒற்றையாட்சியைப் பாதுகாப்பது என்பதும்;;. சிங்கள, பௌத்தத்திற்கு முதன்மை கொடுப்பது என்பதும் வெற்றி வாததத்தின் அடித்தளந்தான். இவ்வாறு வெற்றி வாதத்தைப் பாதுகாத்துக் கொண்டு நல்லிணக்க புரங்களை கட்டியெழுப்புவது என்பது படைத்தரப்பை பாவ நீக்கம் செய்யும்; ஒரு செயற்பாடே.

யுத்தத்தை வெற்றி கொண்ட படையினரின் நல்லிணக்க முயற்சியாக அந்த வீட்டுத்திட்டம் காட்டப்படுகிறது. யுத்த வெற்றியைத் தமிழ் மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதினால் பிறகெதற்கு நல்லிணக்கம்? அதைத் தமிழ் மக்கள் ஏன் தமது தோல்வியாகப் பார்க்கிறார்கள் என்பது குறித்து சிந்திப்பதிலிருந்தே நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் சிந்திக்கலாம்.இல்லையென்றால் வளன்புரம், சொய்சாபுரம், ஸ்கந்தபுரம் போல நல்லிணக்கமும்வெறுமனே ஒரு ஊர்ப் பெயராகச் சுருங்கிவிடுமா?.இப்படியொரு வைபவத்தில் பங்குபற்றியதன்மூலம் தமிழரசுக்கட்சி தனது வாக்காளர்களுக்கு உணர்த்த விரும்பும் செய்தி என்ன?;

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More