இலக்கியம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

தமிழர் பிரச்சினையை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்த, நடராஜா ரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்! -குளோபல் தமிழ் செய்தியாளர்

தமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006)  படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
யாழ்ப்பாணம் தென்மராட்ravirajசி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார்.

ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

இவர் தென்மராட்சி பகுதியில் தேர்தலில் வெற்றி ஈட்டியதன் காரணமாக, அப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வீதி புனரமைப்பு மற்றும் மின்சார புனரமைப்பு போன்றவை இவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசினால் மேல்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தென்மராட்சியின் பல சிறிய கிராமங்கள் வளர்ச்சி அடைய காரணமாயிருந்தன.
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அனைத்து மக்களின் மனித உரிமைக்காகவும் நடராஜா ரவிராஜ் குரல் கொடுத்தார். தமிழ் மக்களின் பிரச்சினையை, தமிழ் மக்களின் போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எடுத்துரைப்பதும் புரிய வைப்பதும் அவருடைய பெரும் பணியாக இருந்தது. இதன் காரணமாகவே ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார். ஒரு டி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. இலங்கை படைத்துறையின் காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்னாலே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவருக்கு வழங்கப்பட்டது. நடராஜா ரவிராஜ் கொலை குறித்த வழக்கு விசாரணை ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தக் கொலை தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.இந்த ஆறு பேரில் மூன்று பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று சந்தேக நபர்களும் ஜூரிகள் சபையின் முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டுமென விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஏழு பேரைக் கொண்ட விசேட ஜூரிகள் சபையின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழர் பிரச்சினையை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து, தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்த ரவிராஜின் படுகொலைக்கு இவ் ஆண்டாவது நீதி கிடைக்குமா?
 
குளோபல் தமிழ் செய்தியாளர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link