Home அரசியல் நல்லாட்சி விடியலோடு சதீஸ்குமார் எதிர்பார்க்கின்ற விடியலும் ஏற்படும் – சுமந்திரன்

நல்லாட்சி விடியலோடு சதீஸ்குமார் எதிர்பார்க்கின்ற விடியலும் ஏற்படும் – சுமந்திரன்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
சட்டத்தை விமர்சிக்க கூடாது என்று இங்கு பேசப்பட்டது அப்படியல்ல நன்றாக விமர்சிக்கலாம் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது என்று நாங்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்புக்களையும் விமர்சிக்கலாம் நீதிமன்ற தீர்ப்பு தவறானது என்பதை எவரும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்படுவதற்கு முன்னர் வழக்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது  அந்த வழக்கை பற்றி விமர்சிக்க கூடாது அது தண்டணைக்குரிய குற்றம்.
நாங்கள் வழக்கறிஞர்களாக பயிற்றப்படுகின்ற போது எங்களுடைய சிரேஸ்ட சட்டத்தரணிகள் சொல்வார்கள் நீதிபதிகளுக்கு இதுதான் சரி என்று நீங்கள் சொல்லி அவர்களை நம்ப வைப்பதற்கு முன்னர்  அதுதான் சரி என்று நீங்கள் முதலில் நம்ப வேண்டும். உனக்கு அதில் நம்பிக்கை இல்லாது விட்டால் நீ எப்படி மற்றவர்களை நம்ப வைப்பாய். எனவே நம்பிக்கையை பற்றி பேசுகின்ற போது இன்னொரு விடயத்தை பற்றி சொல்லவேண்டும் அதாவது சென்ற வருட தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பகிரங்கமாக சொன்னார் 2016 வருட இறுதிக்குள்ளே தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று வரும் என்று. எங்களுடைய தேர்தல் அறிக்கையை முன்வைக்கின்ற போது இதுதான் தமிழ் மக்கள் மத்தியில் நடத்துகின்ற சர்வஜன வாக்கெடுப்பு, தீர்வுத் திட்டம், இதற்கு நீங்கள் வாக்களித்தால் இதற்காக நாங்கள் கதைப்போம், இந்த அடிப்படையில் அடுத்த வருடத்திற்குள்ளே(2016) ஒரு தீர்வை நாங்கள் எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கிளிநொச்சியில்   நடைபெற்ற அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தொிவித்தாா்.
இந்த வருட ஆரம்பத்தில் எங்களுடைய பாராளுமன்றக் குழு கூட்டத்திலே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜயாவிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள் ஜயா 2016 வந்திட்டுது 2016 இற்குள்ளே தீர்வு வரும் என்று நீங்கள் உறுதிமொழி கொடுத்துள்ளீர்கள் எனவே இந்த வருடத்திற்குள் தீர்வு வரவில்லை என்றால் நாங்கள் எல்லோரும் இராஜினாமா செய்கிறதா? என்று கேட்டார்கள்.
அவர் சொன்ன பதில் இப்பொழுது சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இப்பொழுது ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம். கொடுங்கோல் ஆட்சியை அகற்றி இந்த நாட்டில் எப்பொழுதுமே எதிரும் புதிருமாக இருந்த இரண்டு கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆட்சியை ஏற்படுத்தியிருக்கின்றோம். இதனை எவரும் அதனை மறுக்க முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்து எமது மக்களுக்கு ஒரு தீர்வு வரவேண்டுமானால் இந்த வருடம் வரவேண்டும். இந்த வருடத்திலேயே தீர்வு வராது விட்டால் இந்த சந்தர்ப்பத்திலேயே வருகின்ற தீர்வு வராது. அதற்கு பிறகு நாங்கள் எத்தனை தசாப்பதங்கள் இருக்க வேண்டுமோ என்பது எங்களுக்குத் தெரியாது. ஆகவே இந்த வருடத்திற்குள்ளேயே ஒரு தீர்வை கொண்டுவரவேண்டியது எங்களுடைய மக்களின் சார்பிலே அத்தியாவசியமானது. அது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும் என்று சொன்னால் அது நடக்கும்!! என்ற நம்பிக்கையோடு நாம் செயற்பட்டால்தான் அதனை நடப்பிக்க முடியும் என்றாா்சம்மந்தன் ஜயா . இதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்.
அரசியல் அமைப்பு பேரவையிலேயே அமர்ந்திருந்து, வழிகாட்டல் குழுவிலே அமர்ந்திருந்து மற்றத் தலைவர்களை எப்படியாக எங்களுடைய நியாயத்தை அவர்கள் ஏற்க செய்வதற்கு முன்னதாக அது நடக்கும் என்ற வாதத்தில் எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. அந்த நம்பிக்கையை நாங்கள் வெளிக்காட்டி நிற்கின்றோம். நான் இதனைச் சொல்வதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது இன்றைய தினம் வெளிவந்த பத்திரிகை ஒன்றில் ஒரு பத்திரிகையாளர் எழுதியிருகின்றார் தொலைக்காட்சி ஒன்றில் யாரோ ஒருவர் சொன்னதாக 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் . ஜனாதிபதியையும் சேர்த்தால் 226 பேர் . இந்த 226 பேரிலேயே தீர்வு வரும் புதிய அரசியலமைப்பு உருவாகும் எனச் சொல்கின்ற ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்தான் என்று. அப்படியான நம்பிக்கை எனும் மிகப்பெரும் மகுடம் ஒன்றை சூட்டியதற்காக நன்றி கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். நம்பிக்கையோடு நாங்கள் வேலை செய்வோம், நம்பிக்கை இல்லை என்று சொன்னால் நாங்கள் அதில் ஈடுப்பட முடியாது.
எங்களை தெரிவு செய்த மக்கள் எங்களுக்கு கட்டளையிட்டு ஆணையிட்டு  அங்கே அனுப்பியிருக்கின்றார்கள் அதனை செய்யுமாறு வேறு எதற்காகவும் அல்ல. இது நடக்காது இது நடக்கப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்காக மக்கள் எங்களை அங்கே அனுப்பவில்லை.அதை நடத்திக்காட்டுவதற்காக அனுப்பியிருக்கின்றார்கள். அதைச் செய்கிற போது காலச் சூழ்நிலைகள் அத்தியாவசியம், எப்போது எதை பேசுவது, எதைச் செய்வது, எப்படி அரசாங்காத்தோடு இணங்கி நடப்பது, எப்போது அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது என்பதெல்லாம் அத்தியாவசிய பணிகள்.
சில நாட்களுக்கு முன்னதாக மட்டகளப்பிலேயே மங்களராம விகாரையின் விகாரபதி கெட்ட வார்த்தைகளாலேயே தமிழ் அரச உத்தியோகத்தரை திட்டித் தீர்த்து, ஒரு பெண் பொலீஸ் உத்தியோகத்தரை துரத்தி அடித்து செயற்பட்டுள்ளார் என்பதை நாங்கள் காணொளிகள் மூலம் கண்டிருக்கின்றோம். இது பகிரங்கமான கண்டிக்கப்பட வேண்டியது. கண்டிக்கின்றோம், அவருக்கெதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இன ஒற்றுமை நல்லிணக்கம் என்பதிலேயே அரசாங்கம் உண்மையாக தொடர்ச்சியாக செயற்பட வேண்டும் என்றால் இப்படியான சம்பவங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டுவர வேண்டும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் அதனை அரசாங்கம் செய்தாக வேண்டும்  என்பதனை பகிரங்கமாக இந்த வேளையில் நான் கேட்கிறேன்.
அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழுவிலேயே அமர்ந்திருக்கின்ற போது பௌத்ததிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று யாரவது பேசினால்  இந்தக் காணொளியை நான் காட்டுவேன். இதற்கா முதலிடம் கொடுக்க வேணடும் என்று  நான் கேட்பேன். எனவே நாங்கள் பேச வேண்டிய இடங்களில்  சரியானதை பேசுவோம். ஒத்துழைக்க வேண்டிய இடங்களிலேயே சேர்ந்து ஒத்துழைப்போம்.
அமெரிக்க ஜனாதிபதி ரொனாலட் ட்ரம்ப்  வந்தவுடன்  பலருக்கு நடுக்கம் இனி அமெரிக்க ஆதரவு எமக்கு கிடைக்காதே என்று. சென்ற வருடம் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்கி அந்த தீர்மானத்தை தாங்களே முன்மொழியசெய்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி. ட்ரம்ப் போன்றவர்கள் ஜனாதிபதியாக வந்துவிடுவார்கள் என்று நாங்கள் அதனை செய்யவில்லை. நாங்கள் செய்ததன் காரணம் அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையிலே ஒரு வருட காலத்திற்கு அவர்களுடைய உறுப்புாிமை இல்லாது போகிறது. உலகத்திலேயே வெவ்வேறு பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது எனவே எங்களுடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் ஆகவே அது குறைவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்தை நாங்கள் இந்தப் பிடிக்குள்ளே இறுக்க வேண்டும், அவர்கள் இணங்கி ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி சில விடயங்களில் விட்டுக்கொடுத்துதான் அவர்களை இணங்கச் செய்தோம். ஆனால் இப்பொழுது அது எவ்வளவு பெரிய முக்கியத்துமான விடயம் என்று எங்களுக்குத் தெரியும்.
அமெரிக்காவின் அழுத்தம் முழுமையாக இல்லாது விட்டாலும் 47 நாடுகள் உறுப்புறுமை கொண்டிருக்கின்ற ஒரு சர்வதேச அரங்கிலே தாங்கள் இதனை செய்கின்றோம் என்று இலங்கை அரசாங்கம் தானாகவே கொடுத்திருக்கின்ற வாக்குறுதி செய்யாமல் தப்ப முடியாது. ஆகவே சென்ற வருடம் அவர்களையும் இணங்கச் செய்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது சரியாக கணிப்பெடுத்து செய்த நடவடிக்கை என்பதனை நாங்கள் இந்த வேளையில் சொல்லக் கொள்ள விரும்புகிறோம்.
இந்தச் சூழல் மாறும் இன்றைக்கு இருக்கின்ற சூழலிலே நாங்கள் அரசாங்காத்தோடு பேச்சுவாhத்தை நடத்துகிறோம்.ஆனால் அழுதத்தையும் பிரயோகிக்கின்றோம். நாங்கள் இறங்காமல் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பிலே தீர்வு வந்தது என்று எவரும் சொல்ல முடியாது. நாங்கள் எங்களுடைய மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணைப்படிதான் நடப்போமே தவிர வேறு எந்த அடிப்படையிலும் நாங்கள் நடக்க முடியாது.
ஆகவே இன்றைக்கு இருக்கின்ற சந்தர்ப்பம் 2016 இல் தீர்வு என்று ஜயா சொன்னது சில மாதங்களுக்கு முன்னர் சிலர் சில நடவடிக்கைகளை எடுத்த போது கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொன்னோம் . இரண்டு மாதங்களில் ஒரு இடைக்கால அறிக்கை வருகிறது அதுவரை பொறுத்திருங்கள் என்றும் சொன்னோம். இடைக்கால அறிக்கை வருகின்ற 19 ஆம் திகதி காலை ஒன்பது முப்பது மணிக்கு அரசியலமைப்பு பேரவையிலே சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது முதலாவது இடைக்கால அறிக்கை. இரண்டாவது இடைக்கால அறிக்கை முழுமையாக இடைக்கால அறிக்கை அதிகார பகிர்வு சம்மந்தமாக நாட்டின் ஆட்சிமுறை சம்மந்தமாக என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இரண்டாவது இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் பத்தாம் திகதி முன்தாக அரசியலமைப்பு பேரவையிலே சமர்பிக்கப்படும்.
அது சமர்ப்பிக்கபடுகின்றபோது எப்படியான தீர்வு முன்வைக்கப்படுகிறது என்று அனைவருக்கும் பகிரங்கமாக முன்வைக்கப்படும். எனவே 2016 இற்குள்ளே அந்த தீர்வுத் திட்டம் எப்படியானது என்பது பகிரங்கமாகவே அனைவருக்கும் தெரியவரும்.
ஆகையினாலே இதுவரை பொறுமைகாத்த எங்களுடை மக்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சில சில விடயங்களை பேச்சு வார்த்தை நடக்கின்ற போது வெளிப்படுத்த முடியாது. என்னென்றால் பேச்சுவார்த்தை மேசையில் அசௌகரியம் ஏற்பட்டு விடும் பிறகு இணக்கப்பாடு என்பது கடினம். இதனை மக்களிடம் சொல்லியிருந்தோம் மக்கள் அதனை சரியாக செவிமடுத்திருந்தார்கள். எனவே திகதிகள் குறிக்கப்பட்டிருக்கிறத அதன்போது தீர்வு பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்படும் அப்போது அது தொடர்பில் பகிரங்க விவதாங்கள்,விமர்சனங்கள் எல்லாத் தரப்புக்கள் மத்தியிலும் ஏற்படும்.
மிகவும் முக்கியமாக தென்பகுதியில் நாட்டை பிரிப்பதற்கான புதிய அரசியலமைப்பை  உருவாக்கிவிட்டார்கள் என்று பாரிய  எதிர்ப்புகள் ஏற்படும். எங்களுடைய பக்கத்தில் இருந்தும் எதிர்ப்பு ஏற்படும். இது தனிநாடு இல்லை இதில் அது இல்லை,  இது  இல்லை என்று. 
ஒட்டுமொத்தமாக எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற, தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை மற்ற மக்களுடன் சேர்ந்து இந்த தீவிலேயே நாங்கள் சுமூகமாக வாழுகின்றதான, அனைவருக்கும் மதிப்பளித்து வாழ்கின்றதான ஒரு ஏற்பாடு அந்த புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டிலே இருக்குமாக இருந்தால் அது எங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு அத்திவாரமாக இருக்கும்.
எப்படியான ஆட்சி முறையாக இருந்தாலும் இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லா இன மக்களுடனும் நாங்கள்  ஒற்றுமையாக வாழவேண்டும்.அது ஒரு நாடாக இருந்தால் என்ன ஆட்சி முறையிலேயே நாங்கள் ஒற்றுமையாக  சேர்ந்து சகோதரத்துவமாக வாழ பழகவேண்டும். சண்டை பிடிக்காமல் எங்களுடை விபரங்களை நாங்கள் பேசி தீர்க்கபழக வேண்டும். பேசி தீர்க்க பழகுவது சிலவேளைகளில் கடினமான செயல் . ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை. திரும்பவும் நாங்கள் அதளபாதளத்திற்குள் செல்லாமல் மீண்டெழுந்து எங்களுடைய நிலத்தில் உரித்தோடு ஆனால் இந்த தீவும் ஏனைய மக்களோடு பகிர்ந்துகொண்டிருக்க நாடு என்ற அடிப்படையிலே வாழாவிட்டால் நாங்கள் அழிவதை தவிர வேறு வழியிருக்காது. ஆகவே நிதானமாக சிந்தித்து வாக்களிக்கிற மக்கள் நிதானமாக சிந்தித்து ஆணைகொடுக்கிற மக்கள் இப்படியான தீர்வுகள் வருகின்றபோது அதனை சரியாக பகுத்தாராய்ந்து எங்களுக்கு சரியான சமிஞ்கைகளை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம் எனவே அந்த விடியலோடு சதீஸ்குமார் எதிர்பார்க்கின்ற விடியலும் ஏற்படும் எனத் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More