Home இலங்கை வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin
நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச.
உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர் செய்த நாடு இலங்கை. அதைப்போல நல்லிணக்கத்திற்காக ஆக்கிரமிப்பையும் அபகரிப்பையும் செய்யும் நாடும் இலங்கையே. வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் நல்லிணக்கம் என்ற  சொல் இன, நில ஒடுக்குமுறையின் கோரத்தின் அர்தத்தை தருகிறது. இன்று ஆட்சி மாறிய பின்னரும் மகிந்த ராஜபகச்வின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. மகிந்தவின் நல்லிணக்கம் போலவே இன்றைய அரசின் நல்லாட்சி என்பதும் தமிழர்களுக்கு பொல்லாத ஆட்சியாகவே இருக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமான வேராக, பௌத்தப் பெரு மதவாதமும் சிங்களப் பேரினவாதமும் காணப்படுகிறது. இலங்கையின் அரசியல் யாப்பு அதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளமையே இந்தத் தீவிரப் போக்கிற்கு அரணாக உள்ளது. இன்றைய அரசால் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்த்திற்கு உரிய முன்னுரிமையும் அங்கீகாரமும் வழங்கப்படவேண்டும் என்றும் அதில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் பௌத்த மதவாதிகளைப் போல கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கூறுகிறார்.
இதேவேளை மல்கம்  ரஞ்சித் ஆண்டகை ஒரு கிறீஸ்தவ போதகராக கருத்தை கூறாமல் பெரும்பான்மை இனம் சார்ந்தே சிந்தித்திருக்கிறார் என்பதை வத்திக்கானின் எதிரொலி உணர்த்துகிறது. இலங்கையின் கத்தோலிக்க மத குருக்களை கோடிட்டு மதச்சார்பற்ற நாடான இலங்கையில், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறுவது மனித உரிமை மீறலாகும் என்றும்  இது கர்தினாலின் சொந்தக்கருத்தாக இருக்க முடியும் என்றும்  புதிய அரசியலமைப்பில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை பேணும் வகையிலான ஏற்பாடுகள் அவசியம் என்றும் கத்தோலிக்க மதகுருமார் கோரியுள்ளதாகவும் வத்திக்கான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ் முஸ்லீம் தலைவர்கள் விரும்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியுள்ளார். ஆக, இந்த அரசாங்கம் பிரச்சினையின் வேர்களை களைவதற்கு மறுக்கிறது என்பதும் அவைகளை தொடர்ந்தும் நீரூற்றி பாதுகாக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. அம்பாறை இறக்காமம் பகுதியில் அண்மையில் புத்தர்சிலையை சில பிக்குகள் வைத்தபோது அரசியல் அமைப்பை காரணம் காட்டியே ஐக்கிய  தேசியக் கட்சியை சேர்ந்த தயா கமகே அதனை அகற்ற முடியாது என்று வாதிட்டார்.
இந்த நிலையில்தான், வடகிழக்கில் 100 விகாரைகளை அமைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக ஊடகங்கள் அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டுள்ளன. இதற்கு சீன பௌத்த விகாரை ஒன்று நிதி உதவி செய்கிறதாம். சீனாவின் குவாண்டூன் பௌத்த சங்கத்தின் தலைவர் மிங் செங், 20.24 மில்லியன் ரூபாவை வழ்கியுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை இலங்கை அரசின் அமைச்சரவையில் இதற்கான அனுமதிப் பத்திரம் சமர்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை தோன்ற அடிப்படையாக காரணமாக இருந்த காரணங்களில் ஒன்று சிங்கள பௌத்த மயமாக்கல். இத்தகைய செயல்கள் காரணமாகவே தமிழர்கள் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டத்தையும் நடத்தினர். எது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அடிப்படையே அதையே, அரசு ஒரு அபிவிருத்தி நடவடிக்கையாக எடுத்து நடத்துகிறது. ஏற்கனவே கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழர்களின் தாயகத்தில் தொன்மை மிக்க இடங்கள் எல்லாம் புத்தர் சிலைகளும் விகாரைகளுமாக காணப்படுகின்றன.
தமிழர்களின் நகரங்கள் முழுதும் புத்த விகாரைகள் திணிக்கப்பட்டுள்ளன. தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களுக்குள் புத்தர் சிலைகளும் விகாரைகளும் சொருகி மத முரண்பாடுகளுக்கு வழி கோலப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசு என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய அரசு தன் அமைச்சு ஊடாகவே இந்த ஆக்கிரமிப்புச் செயலை செய்ய முனைகிறது என்பது மிகவும் கொடுமையானது. கடந்த காலத்தில் தமிழர் மண்ணில் இராணுவத்தினரும் பௌத்த பேரினவாத, மதவாதிகளும் செய்ததை இன்று அரசே செய்கிறது. மகிந்த காலத்தில் அரசு பின் நின்று செய்ததை இன்றைய அரசோ, முன் நின்று செய்கிறது.
புத்தர் சிலைகள், விகாரைகள் கட்டப்பட்டுள்ள இடங்களில் தமிழர்களுக்கும் வேறு சமூகங்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. தமது பிரதேசத்தின் மதம் சாராத ஒரு அடையாளத்தை நிறுவி தமது தனித்துவத்தை பாதிக்க செய்கின்ற செயல்களுக்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பௌத்த பிக்குகளோ இது சிங்கள பௌத்த நாடு, தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றபடி தமிழர்களின் பூர்வீக பூமியில் நின்று இனவாத, மதவாதச் சண்டைக்கு இழுக்கின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களின் சிங்கள, பௌத்த பேரினவாதம் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மட்டக்களப்பில் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து விகாரை கட்டியுள்ள பிக்கு கிராம சேவையாளரை ஒருவரை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டி எச்சரிக்கிறார்.  அந்தப் பிக்குவின் முகமும் குரலும் தனி நபருடையதல்ல. அது சிங்கள, பௌத்த பேரினவாத, மதவாத்தின் முகம். இதுவே இலங்கை அரசாலும் பெரும்பான்மை சமூகத்தாலும் வளர்க்கப்படுகிறது. இலங்கை அரசு 100 விகாரைகளை வடகிழக்கில் அபிவிருத்தி செய்ய தீர்மானித்திருக்கிறது என்றால் அந்தப் பிக்கு இதைவிட வேறு எப்படிப் பேசுவார்.
அந்த கிராம சேவையாளர் பிக்குவை பார்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழர்களின் சகிப்புத் தன்மைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அநாகரீகமாகவும் பேரினவாத, பெருமதவாதப் போக்குடன் நடந்த  மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதில் பின்னணியாக இருப்பவர். அம் மாவட்டத்தில் மத முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில்  மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை மாவட்டத்தை விட்டு வெளியேற்றுமாறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரியிருக்கிறார்.
இது இப்படியிருக்க, இவ்வாறான மதவாதச் செயல்களையும் பௌத்த விகாரைகளை அமைக்கும் இலங்கை அரசின் தீர்மானங்களையும் தமிழர்கள் எதிர்த்தால்  உடனே ”இது ஸ்ரீலங்கா. இங்கு எங்கு வேண்டுமானாலும் பௌத்த விகாரை  அமைக்கலாம்” என்று அரசு சொல்லும். தமிழர்கள் தலதா மாளிகையிலும் பிரதமர் மாளிகையிலும் சைவ ஆலயம் அமைப்பதற்காக போராடவில்லை. மாறாக தமிழர்களின் மண்ணில் அவர்கள் வாழவும் அவர்களின் ஆலயங்களில் வழிபடவும்  அவைகளை அழிக்க வேண்டாம், அவைகளில் வேறு அடையாளங்களை திணிக்க வேண்டாம் என்று கோரியுமே போரடினர்.
தமிழர்களின் தாயகத்தில் பௌத்த விகாரைகளை அமைப்பது ஒரு அரசியல் நோக்கம் கொண்ட செயல். அது அவர்களின் தாயகத்திலிருந்து தமிழர்களையும் அவர்களின் மத அடையாளங்களையும் துடைத்தழிக்கும் செயல். எல்லாப் பிரதேசங்களுக்கும் எல்லா இனக்குழுமங்களுக்கும் தனித்துவமான பாரம்பரியமும் பண்பாடும் வணக்கச் செயற்பாடுகளும் இருக்கும். அவை அச் சமூகத்தின் இனத்தின் கலாசார மரபுரிமையாகும். அவற்றை அழிப்பது அல்லது அங்கு வேறு அடையாளங்களை திட்டமிட்டு திணிப்பது என்பது கலாசார மரபுரிமை மீறலாகும். அத்துடன் அது ஒரு இன அழிப்புச் செயலுமாகும்.
ஐக்கியநாடுகள் சபையின் கல்வி கலாசார பாதுகாப்பு நிதியம் இதனைக் கண்டுகொள்ளாதா? உலகில் உள்ள கலாசார மரபுரிமை மையங்களை எல்லாம் பாதுகாத்து அவற்றை உலகின் பேணும் சொத்துக்களாக கருதி தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ தமிழர்களின் நிலத்தில் மேற்கொள்ளப்படும் மத பண்பாட்டு ஆக்கிரமிப்பு திணிப்புக்களையும் அழிப்புக்களையும் கண்டுகொள்ளாதா? ஈழத் தமிழர்களின் மரபுரிமை தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதா?
உரிமைக்காக போராடியவர்களை அழித்தொழிப்பதுதான் தீர்வு என்று இலங்கை அரசுகள் தீர்மானித்துச் செயல்பட்டன. அதைப்போலவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயக நிலத்தை கோரிய போது அதனை முழுமையாக அபகரிப்பதே தீர்வென இலங்கை அரசுகள் தீர்மானித்துச் செயல்பட்டன. அதைப்போலவே தமிழர்களின் தொன்மங்களை அழிக்காதீர்கள் என்றும் அதற்குப் புறம்பான அடையாளங்களை திணிக்காதீர்கள் என்று கோரியபோது அதனையும் அழித்தொழித்து தம் அடையாளங்களை நிறுவும் தீர்வுகள் செயல்படுத்தப்பட்டன.
தமிழர்களின் வலி தெரியும் என்றும் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இன்றைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களில் கூறிக்கொண்டு வடகிழக்கு மண்ணில் 100 விகாரைகள் அபிவிருத்தி செய்ய அமைச்சரவையில்   அனுமதிப் பத்திரம் வழங்குகிறார் என்றால் இந்தத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை நினைக்க பேரதிர்ச்சியாகவே இருக்கிறது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More