இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

பட்ஜட் ஏற்புடையதா? செல்வரட்னம் சிறிதரன்

budjet
நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை இலக்காகக் கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.பூகோள வசதியளிப்பு மற்றும் வர்த்தக செயற்பாடுகளின் ஒரு மையமாக இலங்கையை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் பொருளாதாரத் தந்திரோபாயம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.
இந்தத் தந்திரோபாயத்தின் மூலம், 7 சத வீதத்திற்கு மேலான ஒரு வருடாந்த வளர்ச்சி வீதத்தை அடைவதற்கான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான தயார்ப்படுத்தலாக தனது பிராந்தியத்தில் உள்ள சீனா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருவதாக நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, சமூக உள்ளீர்க்கையுடன் துரிதமான வளர்ச்சியை அடையவேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு, நாட்டில் வறுமையையும் அதனோடு இணைந்தவற்றையும் இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வம் கொண்டிருக்கின்றார்.
இதற்காக ஏற்கனவே 2017 ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக அவர் பிரகடனப்படுத்தியிருக்கின்றார்.தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை, உலக நாடுகளுக்கான ஒரு பொருளதாரா மையமாக உருவாக்கும் வகையில், சர்வதேச மட்டத்திலான பொருளாதார கொள்கையையும் அதேவேளை, உள்நாட்டில் வறுமையை ஒழித்து மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளையும் முன்னெடுப்பதற்கான முதற் படியாக 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது,
சுருக்கமான பார்வையில் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தவும், உள்நாட்டில் சர்வதேச தரத்தில் அல்லது அதற்கு ஈடான நிலைமைக்கு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், இந்த வரவு செலவுத் திட்டம், இதற்கான பொருளாதாரக் கொள்கைகளுடன் பல்வேறு விடயங்களையும், கிளைக் கொள்கைகளையும் கவனத்திற்கொண்டிருக்கின்றது.
மோசமான ஒரு யுததத்தின் பின்னர், ஒரு நல்லாட்சிக்கான பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கத்தின் சர்வதேச பொருளாதார பங்களிப்பை உள்ளீர்க்கின்ற பொருளாதார வளர்ச்சியை நோக்கிய செயற்பாடானது இலகுவானதல்ல என்பதை அரசு புரிந்து கொண்டிருக்கின்றது.
அதனை, ‘தெரிவு செய்யப்பட்ட பாதையில் நகர்வது கடினமானது’ என குறிப்பிட்டிருப்பதன் மூலம் நிதியமைச்சர் தனது வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். மூன்று தசாப்தங்களாக யுத்த மோதல்களுக்கு முகம் கொடுத்து, பொருளாதாரத்தி;ல் நலிவடைந்துள்ள நாடு இன்று பெரும் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கின்றது. இந்தக் கடன் சுமையில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டிய மிகவும் கடினமான பணியை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு நல்லாட்சி அரசாங்கம் ஆளாகியுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்காக இராணுவ பொருளாதார ரீதியில் உதவியளித்த நாடுகள், இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தி, தமது பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்த முனைந்திருக்கின்றன. இதனை சாதகமாக்கி, தனது பொருளாதாரப் பின்னடைவைப் போக்கி, வளர்ச்சியடையச் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.
சுதந்திரமான வர்த்தகம் என்பதைவிட நியாயமான வர்த்தகம் என்பதே குறி
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிலையான பொருளாதாரத்திற்கும் ஏற்றுமதி அபிவிருத்தி என்பது முக்கிய அம்சமாக நோக்கப்படுகின்றது. அந்த வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி கருதிய முதலீடுகளைத் தூண்டக் கூடிய ஒரு வசதியன சூழல் உருவாக்கப்படவுள்ளது என, அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இது, தமது பொருளாதாரத் தேவைக்காக இலங்கையை இலக்கு வைத்துள்ள நாடுகளின் நகர்வை, தனக்கு சாதகமான வகையில் பயன்படுத்தவுள்ள இலங்கையின் பொருளியல் ரீதியான இராஜதந்திர முயற்சியாகக் கருதப்படுகின்றது.
கடந்த 1990 களில் 30 வீதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தியின் ஏற்றுமதியானது படிப்படியாகக் குறைந்து இப்போது 15 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உற்பத்தித் திறன் முன்னேற்றம், வர்த்தக வசதியளிப்பு, இருபக்க பொருளாதார ஒருங்கிணைப்பு உடன்படிக்கைகள், முதலீட்டுச் சபையின் மீளமைப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றன
அது மட்டுமல்லாமல், முதலீட்டுச் சபை போன்ற – தேவைப்படுகின்ற நிறுவனங்களின் உருவாக்குதல், நாணயப் பரிமாற்றுக் கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்றவற்றை உள்ளடக்கிய வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான சீர்திருத்த முன்னெடுப்புக்கள் ஒரு முன்னேறிய சர்வதேச வர்த்தகத்தையும் முதலீட்டுக் கட்டமைப்பையும் உருவாக்குவதுடன், அதனை மெருகுபடுத்தும் என்பது இந்த அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ‘கடன் சுமையை ஏற்படுத்தாத, வெளிநாட்டு நிதியோட்டங்களை உருவாக்கக் கூடியவாறு, சுதந்திரமான வர்த்தகம் என்பதை விட, நியாயமான வர்த்தகம் என்பதன் மீது நாம் குறி வைத்துள்ளோம்’ என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கும்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் சமூக, அரசியல், இராணுவ துறை சார்ந்த அயலுறவுக் கொள்கைகள், செயற்பாடுகளுக்கு அப்பால், அதன் அயலுறவு பொருளதாரக் கொள்கையின் நிலைப்பாட்டை  நிதியமைச்சர் இதன் மூலம் வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது.
சின்னஞ்சிறிய தீவாகிய இலங்கையின் எதிர்கால பொருளாதார நிலைமையை சர்வதேசத்துடன் இணைத்து முன்னேற்றுகின்ற அரசியல் கனவு குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ள போதிலும், மோசமடைந்துள்ள நாட்டின் நிதி நிலைமையை அரசாங்கம் எவ்வாறு சீர் செய்யப் போகின்றது என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்திருப்பதைக் காண முடிகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மொத்த வருமானம் 2098 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவினம் 2723 பில்லியன் ரூபா. துண்டுவிழும் தொகை 625 பில்லியன் ரூபாவாகும். இது தேசிய உற்பத்தியில் 4.6 வீதம் என கணக்கிடப்பட்டிருக்கின்றது.
எனவே, நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் நிலைபேறுடைய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தில் வரவையும் செலவையும் சமப்படுத்துவதற்காக உள்நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான பல விடயங்களை, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனங்களும் கண்டனங்களும்
ஆயினும் நிதியமைச்சரின் மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் பற்றாக்குறைகைய நிவர்த்தி செய்யும் வகையில் நிதி திரட்டுவதற்கான வழிமுறைகள் பற்றிய அறிவித்தல்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களினதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.
வரவு செலவுத் திட்டம் என்றாலே விமர்சனங்களுக்குப் பஞ்சமிருக்காது என்று கூறுவார்கள். ஆனாலும், வழமைக்கு மாறாக இந்த வரவு செலவுத் திட்டம் கடும் கண்டனங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக, பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக்கோரி தீவிரமாகத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தார்கள். இதற்கு பல்துறை சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் அடையாள கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தார்கள்.
இருப்பினும் விசுவரூபமெடுத்துள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை, இந்த வரவு செலவுத் திட்டம் கண்டுகொள்ளவே இல்லை. அது மட்டுமல்லாமல், நிரந்தர வாழ்வுரிமை, வேலையில்லாப் பிரச்சினை, மண் உரிமையுடன் கூடிய அடையாள அங்கீகாரம் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் பல பிரச்சினைகள் குறித்தும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. மலையகத்தில் 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று ஒரேயொரு விடயம் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தங்களுடைய எதிர்பார்ப்புக்களை இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றவில்லை, ஏமாற்றியிருக்கின்றது என அந்த மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். வறுமை ஒழிக்கப்படும் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே நிலவுகின்ற சமூகப் பொருளாதார இடைவெளி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இல்லாதொழிக்கப்படும் என்றும் வரவு செலவத் திட்ட உரையில் நிதியமைச்சர் உறுதியளித்திருக்கின்றார்.
அதற்கேற்ற நடவடிக்கைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்ற வகையில் அவர் தொனி செய்துள்ளார். எனினும் வடக்கையும் கிழக்கையும் இது புறந்தள்ளிவிட்டது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருக்கின்றது.
இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளி, அரசியல் இலாபம் கருதிய நோக்கத்தில் விமர்சனம் செய்து வருகின்ற மகிந்த ராஜபக்ச அணியினராகிய பொது எதிரணியினர், இந்த வரவு செலவுத் திட்டத்தையும் விமர்சமனம் செய்யத் தவறவில்லை.
இது குழந்தைத் தனமானதொரு வரவு செலவுத் திட்டம் என அவர்கள் எள்ளி நகையாடியிருக்கின்றனர்.மக்கள் விடுதலை முன்னணியினர் இன்னும் ஒரு படி மேலே சென்று இது ஒரு பேய் பட்ஜட் என்று வர்ணித்திருக்கின்றார்கள். இவை எல்லாவற்றையும்விட, போக்குவரத்து விதிகளை மீறுகின்ற வாகன சாரதிகளின் ஆகக் குறைந்த குற்றத்திற்கு 2500 ரூபா தண்டமாகச் செலுத்த வேண்டும் என்ற புதிய தண்டனை விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பினால், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் கொதித்தெழுந்திருக்கின்றது. இவர்களுடன் முச்சக்கர வண்டிகள் சங்கத்தினரும் இணைந்து எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கின்றார்கள்.
ஏன் இந்தக் கொதிப்பு?
நாட்டில் யுத்த காலத்தைவிட யுத்தம் முடிவடைந்ததன் பி;ன்னர் வாகன விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், இந்த விபத்துக்களில் அனேகமானவற்றிற்கு தனியார் பேரூந்துகளே காரணம் என குற்றம் சுமத்தியிருக்கின்றது
.
எனவே, வாகன விபத்துக்களைக் குறைப்பதற்காகவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் இழைக்கும் குறைந்த அளவு குற்றத்திற்கு 2500 ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படுவாகக் கூறியிருக்கின்றது.
இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தனியார் பெரூந்துகளைச் செலுத்துகின்ற சாரதிகளை இலக்கு வைத்து, இது கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், வாகனம் செலுத்துகின்ற அனைவரையும் அரசாங்கத்தின் இந்தப் புதியn நடவடிக்கை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாகன விபத்துக்கள் காரணமாக இந்த வருடத்தின் பத்து மாத காலத்தில் 2200 தொடக்கம் 3000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் பலர் அவயவங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை விரும்பத்தக்கதல்ல. இந்த நிலைமைக்கு முடிவு காண வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும்.
எனவே, அது தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கை உயிர்க் கொலைகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் பொறுப்பானவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் உரிய வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் உள்ள வீதிகளின் அமைப்பு அவற்றின் வசதிகள், விபத்துக்களற்ற வீதிப் போக்குவரத்துக்குரிய சாரத்தியத்துக்கு ஏற்ற வகையிலான வீதி ஒழுங்குகள், நடைமுறைகள் என்பன சீராக இருக்கின்றனவா என்பது கேள்விக்குரியதாகும்.
அதிவேக நெடுஞ்சாலைகளைத் தவிர்ந்த ஏனைய பிரதான வீதிகள், இணைப்பு வீதிகள் என்பவற்றில், நாட்டில் அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், அந்தந்த வாகனங்கள் பாதுகாப்பாகச் செலுத்தப்படத்தக்க வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது முக்கியமாகும்.
போதிய அளவில் அகலப்படுத்தப்படாத வீதிகள், வீதிகளின் அமைவுக்கும் வசதிகளுக்கும் ஏற்ற வகையையும் மீறிய வகையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இன்னும் அந்த எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது என்பனவும் வாகன விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாகும்.
அது மட்டுமல்லாமல், பொதுப்போக்குவரத்துத் துறைக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை என்பதும் மற்றுமொரு முக்கியமான விடயமாகும்.
நாட்டின் தேசிய வருமானத்தில் 12 வீதத்தைத் தனியார் பேரூந்து சேவையே பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ள தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் கெமுனு விஜேரட்ன அதற்கேற்ற வகையில் பொதுப் போக்குவரத்து வசதிகள் அரசாங்கத்தினால் மேம்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே கடுமையான வீதிப் போக்குவரத்து விதிகளும் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவற்றை மேலும் இறுக்கமாகச் செயற்படுத்துவதில் பொலிசாரும், நீதிமன்றங்களும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.  வேண்டுமானால் அவற்றை இன்னும் இறுக்கமாக்குவதற்கும் இடமுண்டு.
அதனைத் தவிர்த்து, தண்டப் பணத்தை மாத்திரம் அதிகரிப்பதன் மூலம் வீதிப் போக்குவரத்துக்களை சீராக்கி நெறிப்படுத்த முடியும் விபத்துக்களைக் குறைக்க முடியும் என்று தோன்றவில்லை.
மது போதையில் வாகனம் செலுத்துவது போன்ற வீதிப் போக்;குவரத்து விதிகளை மீறும் குற்றங்களுக்குக் கூடிய தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சாரதிகள் விழிப்பாக செயற்பட்டு வருகின்றார்கள் என்பது என்னவோ உண்மைதான்.
ஆயினும் ஒருங்கிணைந்த வசதிகள் அற்ற நிலையில், அவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவைகள் இருக்கும் சூழலில், எடுத்த எடுப்பிலேயே 2500 ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினரை மட்டுமல்ல பொதுவாகவே, வாகன உரிமையாளர்கள் அனைவரையும் முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது.
உண்மையிலேயே வாகன விபத்துக்களைக் குறைத்து அநியாய உயிரிழப்புக்களைத் தடுக்க வேண்டுமானால், தொலை தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டுள்ள இன்றைய சூழலில் அந்த வசதிகளைப் பயன்படுத்தி சாரதிகளைக் கட்டுப்படுத்தவும், அவர்ளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய முடியும்.
அத்தகைய வழிமுறையைக் கைவிட்டு,; தண்டப்பணத்தை அதிகரிக்கின்ற செய்கையானது, வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழுகின்ற தொகையை ஈடு செய்வதற்கானதோர் உத்தியாகவே அரசாங்கத்தினால் கையாளப்பட்டிருக்கின்றது என்பதே பொதுவான குற்றச்சாட்டாகும்.
இதேபோன்று வற் வரி அதிகரிப்பு, 25 வீதத் தொலை தொடர்பு வரி அதிகரிப்பு, விமானம் ஏறல் கட்டணத்தில் அதிகரிப்பு, தண்ணீர் வரி அதிகரிப்பு, ஓய்வூதிய முறைமை மாற்றம் போன்றவைகள் அரசாங்கத்தின் வரி வருமனத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. இது மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கான நிதியொதுக்கீட்டுத் தொகைகள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவற்றுக்கான நிதிமூலம் என்ன என்பது வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்படாமை குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
நாடு தீராத கடன் சுமையில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் இந்த நலத்திட்டங்களுக்கான நிதியை அரசாங்கம் எங்கிருந்து பெறப் போகின்றது என்பது இயல்பான கேள்வியாகும். அதற்கான பதில் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் தெரியவில்லை.
மொத்தத்தில் இந்த வரவு செலவுத் திட்டம் பொதமக்களின் நலன்களை மேம்படுத்துதவற்குப் பதிலாக வரிச்சுமைகளை அதிகரித்து, அவர்களைச் சுரண்டுவதற்காகவே கொண்டு வரப்பட்டிருக்கின்றதோ என்று பலரும் எண்ணுகின்றார்கள்.
அவ்வாறு எண்ணுவதில் தவறிருப்பதாகக் கூற முடியாத வகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் அமைந்திருப்பது துரதிஸ்டவசமானது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap