Home இலங்கை சர்வதேச இராஜதந்திர அரசியல் எதிர்பார்ப்பில் இலங்கையின் பொறுப்பு கூறல் கரையக் கூடுமோ? செல்வரட்னம் சிறிதரன்

சர்வதேச இராஜதந்திர அரசியல் எதிர்பார்ப்பில் இலங்கையின் பொறுப்பு கூறல் கரையக் கூடுமோ? செல்வரட்னம் சிறிதரன்

by admin
நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், இனங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நல்லிணக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளைப் பெயரளவில் மட்டுமே முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும், நிலைமாறு காலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஆயினும் அந்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் காணவில்லை. இருந்த போதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் முன்னேற்றத்திற்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாடுகள் மட்டுமல்லாமல், நாட்டில்; புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில் அவர் உட்பட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய முக்கிய சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சர்வாதிகாரத்தை நோக்கியதாகவும், யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை மேலும் மேலும் கஸ்டத்திற்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக்கும் வகையிலேயே முன்னைய ஆட்சியாளர்கள் செயற்பட்டிருந்தார்கள். முன்னைய ஆட்சிக்காலத்து நிலைமைகளுடன் நோக்குகையில் ஒப்பீட்டளவில் இப்போது நிலைமைகளில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.
ஆயினும் மனித உரிமை நிலைமைகள், நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் என்பவற்றில் திருப்தியற்ற நிலைமையே காணப்படுகின்றது என ஐநாவின் சித்திரவதைக்கு எதிரான குழு கூறியிருக்கின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னேற்றகரமான நடவடிக்கைளுக்குக் குந்தமாக இருப்பதாகவும் அந்தக் குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
முன்னைய நிலைமைகள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளையும் அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்பட்டிருந்த பாதிப்புகள், உளவியல் ரீதியாக அவர்களை வதைத்துக் கொண்டிருந்த   பாதிப்புக்களை, யுத்தத்தில் வெற்றியீட்டிய அரசாங்கம் உரிய முறையில் கவனத்திற் கொள்ளவில்லை.
உரிய முறையில் கவனத்திற் கொள்ளவில்லை என்பதிலும் பார்க்க, பாதிக்கப்பட்ட மக்களின் அந்த நிலைமைகளை உதாசீனம் செய்திருந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் யுதத்தத்திற்குப் பின்னரான அந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அந்த வகையிலேயே அமைந்திருந்தன.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை அவர்களுடைய இயல்புக்கு ஏற்ற வகையில் சுதந்திரமாகவும், இயல்பாகவும் வாழ்க்கையை மீளமைத்துக் கொள்வதற்கு அந்த அராசங்கத்தின் நடவடிக்கைகள் அனுமதிக்கவே இல்லை.
இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு, அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட பின்னரும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை தொடர்;ச்சியாக இராணுவ கண்காணிப்பிலேயே வைத்திருந்தது.
யுத்த நெருக்கடிகளினாலும் யுத்த மோதல்களில் சிக்கி தெய்வாதீனமாக உயிர் தப்பிய பின்னர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது யுத்த அகதிகள் என்ற நிலையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி முகாமாகிய மனிக் பாம் இடைத்தங்கல் முகாமுக்குள் முடக்கப்பட்டிருந்தார்கள்.
ஊழிக்கால பேரவலத்தில் சிக்கி, சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியிருந்த அந்த மூன்று லட்சம் மக்களுக்கு ஆசவாசமும், அரவணைப்புடன் கூடிய ஆறுதலே தேவைப்பட்டிருந்தது. அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த ஆறுதல் அங்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.தங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி யுத்தம் புரிந்தவர்களை யுத்த வியூகத்தைப் பயன்படுத்தி வளைத்துப் பிடித்து, கொண்டு வரப்பட்டவர்களைப் போலவே அரசாங்கம் அவர்களை நோக்கியது.
மனிக்பாம் அகதி முகாமுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் யுத்தத்தில் வெற்றி பெற்ற தங்களிடம் சரணடைந்த எதிரிகளைப் போலவே இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்தவர்களை நடத்தினர்.
யுத்தத்தில் தோல்வியடைந்ததன் பின்னர், அடிபட்ட வேங்கைகளாக பழி தீர்க்க முற்பட்டிருப்பவர்களைப் போன்று இடமபெயர்ந்த மக்களை இறுக்கமான இராணுவ கண்காணி;பபிற்குள் வைத்திருந்தனர்.அவர்களை தீராத சந்தேகக் கண்கொண்டு தொடர்ச்சியாக கண்காணித்து வந்தார்கள். திடீர் திடீர் என அவர்களை சோதனைக்கு உள்ளாக்கினார்கள்.
குடும்ப விபரங்களைத் திரட்டுகின்றோம் என்ற போர்வையில் இராணுவ புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கி அவர்களை துவளச் செய்திருந்தார்கள். இத்தகைய அடக்குமுறை சார்ந்த நிலைமை மனிக்பாம் முகாமுடன் முடிந்துவிடவில்லை. அங்கிருந்து சொந்த ஊர்களில் அவர்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர், அங்கேயும் இராணுவ கெடுபிடிகளும், புலனாய்வு கண்காணிப்பும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதனால் அந்த மக்கள் திறந்தவெளி சிறைக்குள் தள்ளப்பட்;டவர்களைப் போன்று துன்பங்களை அனுபவிக்க நேர்ந்திருந்தது.
நல்லிணக்கமல்ல நலிவடைவதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன
அரசாங்கம் கூறிக்கொண்டிருந்த நல்லிணக்கச் செயற்பாடுகள் உளப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை.நல்லிணக்கத்திற்குப் பதிலாக போர்க்கோலம் கொண்ட மனநிலையில் இருந்தவர்களுக்குச் செய்யப்படுகின்ற மூளைச் சலவைச் செயற்பாடுகளே அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த மூளைச் சலவையின் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை, தமது அரசியல் உரிமைகள் தொடர்பில் தீர்க்கமாக சிந்திக்க முடியாதவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நீண்டகால ஆயுத மோதல் நிலைமையில் சிக்கியிருந்த இருசாராரும் சம நிலையில் இருந்து ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாகப் புரிந்து கொண்டு இணைந்து செயற்படவும், இணைந்து வாழவும் அடியெடுத்து வைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையே நல்லிணக்கச் செயற்பாடாகும்.
அடக்குமுறை ரீதியிலான செயற்பாடுகள்
ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சமமாக மதிப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும், இராணுவ புலனாய்வாளர்களும் அப்போது தயராக இருக்கவில்லை.  மாறாக இரண்டாந்தரப் பிரஜைகளாக, தாங்கள் சொல்வதை அப்படியே எந்தவிதமான கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கமும் இராணுவமும் அப்போது எதிர்பார்த்திருந்தது.
மீள்குடியேற்றச் செயற்பாடுகளின் போதும், மீள்குடியேறி, சிதைந்து போன தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளின்போதும், தாங்கள் வழங்குகின்ற சலுகைகளை வாய்மூடி மௌனிகளாகப் பெற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அரச தரப்பினரிடம் இருந்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டிருந்த இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகளினால் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்து, நாங்கள்தானே உங்களைப் பாதுகாத்து இப்போது மறுவாழ்வளித்திருக்கின்றோம்.
அதற்கு நன்றிக்கடன் உடையவர்களாக எங்களுடைய சொற்கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலேயே மீள்குடியேற்றப் பிரதேசங்களில் இருந்த மக்கள நடத்தப்பட்டார்கள். மொத்தத்தில் இறுக்கமானதோர் இராணுவ ஆட்சியின் கீழ் அந்த மக்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இத்தகைய ஒரு நிலையில் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட முயற்சிக்கின்றார்கள் என காரணம் கற்பித்து பல இளைஞர்கள் யுத்த மோதல்கள் இட்ம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றதைப் போன்று கைது செய்யப்பட்டார்கள்.
கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் மோசமான முறையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் மட்டுமல்ல. இறுதி யுத்தத்தின்போதும், யுத்தம் முடிவுக்கு வந்த உடனேயும் பலர் காணாமல் போனார்கள். பலர் பிடித்துச் செல்லப்பட்டார்கள். பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அழைப்பு – வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பளிக்கப்படும், பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற உத்தரவதத்தை நம்பி இராணுவத்திடனம் சரணடைந்தார்கள். அவர்களில் கணிசமானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாதுள்ளது.
காணாமல் போனவர்களைத் தவிர, நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர், – தாங்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாகத் தடுப்புக்காவலில் இருந்து வெளியில் வந்தபின்னர், தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமக்கு நேர்ந்தவற்றை ஐநாவின் சித்திரவதைக்கு எதிரான குழுவினரிடமும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளராகிய யஸ்மின் சூக்கா உள்ளிட்டவர்களிடமும் விபரித்திருந்தார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஐநாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் அமர்வின்போது இலங்கை பிரதிநிதிகளிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
யதேச்சதிகார ஆட்சிக்கு முடிவுகட்டி, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி நடக்கின்ற காலப்பகுதியிலும் சித்திரவதைகளும், ஆட்கடத்தல்களும் இடம்பெறுவதுடன், இரகசிய சித்திரவதை முகாம்களும்ந நடத்தப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கை பிரதிநிதிகளைத் திக்குமுக்காடச் செய்திருந்தார்கள்.
ஐநாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் துணைத்தலைவர் பெலிஸ் காயர் எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கைத் தூதுக்குழுவினரால் சரியான பதிலளிக்க முடியாமற் போயிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சித்திரவதைக்கு எதிரான குழுவின் குற்றச்சாட்டுக்கள்
முன்னைய ஆட்சியில் இடம்பெற்றிருந்த மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பு கூறுவதற்கு அந்த அரசாங்கம் ஒருபோதும் முன்வரவில்லை.
பொறுப்பு கூறும் விடயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேச்சளவில் உறுதியளிக்கப்பட்டிருந்ததே தவிர, நடைமுறையில் அத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக சர்வதேச நியமங்களுக்கு முரணான வகையிலேயே மனித உரிமை நிலைமைகளை அந்த அரசு வைத்திருந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த பொறுப்பு கூறுவதற்கான பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்திடம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
அந்த விடயத்தில் முன்னைய அரசாங்கத்திலும் பார்க்க, நல்லாட்சி அரசு முன்னேற்றகரமான நிலைமைகளை நோக்கிப் பயணிப்பதாகத்; தோன்றினாலும்கூட, பாதிக்கப்பட்ட மக்களினதும், ஐநா மற்றும் சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
பொறுப்பு கூறும் விடயத்தில் கலப்பு விசாரணை பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்து ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரiணை வழங்கியிருந்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையொன்றை அமைப்பதிலேயே குறியாக இருக்கின்றது. அரசாங்கம் தனது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் வரையிலான காலப்பகுதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 100 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சித்திரவதைக்கு எதிரான குழு அரசாங்க தூதுக்குழுவினரிடம் நேரடியாகத் தெரிவித்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மற்றும் சிஐடி – புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல தடுப்பு முகாம்களில் முன்னர் கடமையாற்றிய அதிகாரிகளுடைய செயற்பாடுகள் தொடர்பில் நடத்தப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகளை தங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சி;த்திரவதைக்கு எதிரான குழு கோரியிருக்கின்றது.
பொலிஸ் தலைமையகத்தின் நாலாம் மாடி, வவுனியாவில் முன்னர் இயங்கி வந்த ஜொசப் முகாம் எனப்படும் தடுப்பு முகாம், பூஸா தடுப்பு முகாம், வவுனியா மனிக்பாம் முகாம், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்த தடுப்பு முகாம், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் தந்திரிமலை ஆகிய இடங்களில் செயற்பட்டு வந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் என்பவற்றில் கடமையாற்றிய அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளே இவ்வாறு கோரப்பட்டிருக்கின்றன.
இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சி;த்திரவதைகளும் மனிதாபிமானத்திற்கு எதிரான வகையிலான இம்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்த விபரம் கோரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மீதான பல்வேறு சித்திரவதைச் செயற்பாடுகள், மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் அவர்கள் நடத்தப்பட்டமை குறித்த விபரங்களும் இலங்கைத் தூதுக்குழுவினரிடம் ஐநா சித்திரவதைக்கு எதிரான குழுவினரால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் போன்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் பாலியல் ரீதியான இம்சைகள் துன்புறுத்தல்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.
சட்டத்திற்கு விரோதமான முறையில் ஆட்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தாமை, வெள்ளைவான் கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் உயிரிழந்தமை, வசதிகளற்ற சிறிய இடங்களில் அளவுக்கு அதிகமானவர்களைத் தடுத்து வைத்திருப்பது, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்குரிய மனிதாபிமான ரீதியிலான வசதிகள் வழங்கப்படாமை, அவர்களின் சுகாதார நலன்கள் பேணப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் சித்திரவதைக்கு எதிரான குழுவினரால் இலங்கை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி, விளக்கம் கோரப்பட்டிருந்தது.
சித்திரவதைக்கு எதிரான குழுவின் எச்சரிக்கை…..?
கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், இரகசிய தடுப்பு முகாம்களில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு, புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொடூரமான சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் போக்கைச் சாதகமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
இது மட்டுமல்லாமல் இராணுவத்தினர் மத்தியில் ஆட்களைச் சித்திரவதை செய்யும் போக்கு இரத்தத்தில் ஊறியிருப்பதாகவும் அதன் காரணமாகவே தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் மீது பல வழிகளில் சித்திரவரைகள் செய்யப்படுவதாகவும் அவர் கடுந்தொனியில் குற்றம் சுமத்தியிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஐநா மன்றத்திற்கும் சர்வதேசத்திற்கும் நாட்டில் மனித உரிமைகளை முறையாகப் பேணிப்பாதுகாப்பதாகவும், நிலை மாறுகாலத்தி;ல் நீதியை நிலைநிறுத்தவும் உறுதியளித்து இலங்கை தொடர்பான பிரேரணகை;கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றது.
எனவே தங்களுக்கு அளிக்கப்பட்டஉறுதிமொழிகளையும்  உத்தரவாதங்களையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதை ஐநாவும் சர்வதேச சமூகமும் உறுதி செய்யக் கடமைப்பட்டிருக்கின்றன என்று யஸ்மின் சூக்கா நினைவூட்டியிருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற உரிமை மீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பதனால் இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் அவர்  சுட்டிக்காட்டியிருக்கி;ன்றார்.
எனவே இலங்கையின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இராஜதந்திர அணுகுமுறைகளில் மனித உரிமை மீறல்களையும், உரிமை மீறல்களையும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களையும் மூடி மறைத்துவிடக் கூடாது என்றும் எச்சரிக்கை தொனியில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற ஏதேச்சதிகார நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருநதவர்களையும் பார்க்க அதிகமான தேவை இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இராணுவ அரசியல் வர்த்தக ரீதியாக ஏற்பட்டிருந்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நடைபெற்று வருகின்றது.
மாற்றமடைந்துள்ள இந்தச் சூழலிலும் மனித உரிமை மீறல்களும் உரிமை மீறல்களும் அனுமதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஐநாவின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் நிலைப்பாடாகத் தெரிகின்றது.
அத்துடன் இந்தக் குழு வெளிப்படுத்தியுள்ள எச்சரிக்கை தொனியானது, சர்வதேசத்தின் அரசியல் இராணுவ வர்த்தக தேவைகள் நிறைவேறும் பட்சத்தில் இலங்கையின் பொறுப்பு கூறல் செயற்பாடுகளும், மனித உரிமைகளைப் பேணி பாதுகாக்கும் செயற்பாடுகளும் கைவிட்டுப் போகக் கூடுமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.
அத்தகைய சந்தேகத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எழுந்துள்ள இராஜதந்திர அணுகுமுறை போக்கில், உள்நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறல் கரைந்து போக நேரிடுமோ என்று சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More