Home இலங்கை சிவாஜிலிங்கம் போன்றோரிடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மனோ கணேசன்:-

சிவாஜிலிங்கம் போன்றோரிடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மனோ கணேசன்:-

by admin

நிலைத்தன்மையற்ற கோமாளி அரசியலை எப்போதும் செய்யும் வடமாகாணசபை உறுப்பினர் திரு. எம். கே.  சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. என்றாலும் இவரது போக்கிரித்தனமான கருத்துகள் ஒரு சிலரைகூட தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால், இந்த பதிலை தர விரும்புகிறேன்.

உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என நான் ஒருபோதும் கூறவில்லை. உண்மையில் தம் பிள்ளைகளை இழந்து வாழும் தமிழ் தாய், தந்தையர்களினதும், கணவர்மார்களை இழந்து நிற்கும் தமிழ் சகோதரிகளினதும், மூத்தோரை இழந்து நிற்கும் தமிழ் இளையோரினதும், உணர்வுகளையும், இழந்துபோன உறவுகளை நினைந்து அவர்கள் தம் சோகங்களை பகிர்ந்து கொள்வதையும், சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ள முயல வேண்டும் என நான் சொன்னேன். ஜேவிபி அமைப்பிற்கு, தம் 1971, 1989 ஆகிய ஆண்டுக்கால போராட்ட மாவீரர்களை கொண்டாட இருக்கின்ற அதே உரிமை, வடக்கில் கிழக்கில் தமிழர்களுக்கும் இருக்கின்றது என்பதை சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென சொன்னேன்.

இந்நிலையில் குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், ஜேவிபி அன்று தடை செய்யப்பட்டிருந்த போது அந்த உரிமை அவர்களுக்கு அன்று வழங்கப்பட்டிருக்கவில்லை. இன்று புலிகள் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. எனவே இது சட்டவிரோதம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியபோது, புலிகள் இன்று ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தால், அவர்களது பெயர்களை குறிப்பிடாமல் தமிழ் மக்கள் நினைவஞ்சலிகளை நடத்துவதில் சட்டப்பிரச்சினை இல்லை என்றும், எதிர்காலத்தில் அந்த தடை நீக்கப்படுமானால், அப்போது ஜேவிபியை போன்று, புலிகளின் பெயரிலேயே நிகழ்வுகளை தமிழ் மக்கள் நடத்தலாம் என்றும் நான் கூறினேன். இதை சிங்கள மொழியில், ஒருமுறை அல்ல, நான்கு முறைகள்,  கடந்த ஒருவார காலத்தில், நான்கு இடங்களில் சொன்னேன்.

தென்னிலங்கை ருஹுனு சிங்கள தேசத்தில், சிங்கள மொழியில், இக்கட்டான இறுக்கமான சூழலில், நான் கூறிய இந்த கருத்துகளுக்காக எம். சிவாஜிலிங்கம் போன்றோர் உண்மையில் என்னை பாராட்ட  வேண்டும். ஆனால், வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு வாய்வீரம் பேசுவதிலேயே காலத்தை கழித்தபடி, தமிழ் மக்களை மீண்டும், மீண்டும் துன்பத்தில் இழுத்துவிடும் அரசியலையே செய்துவரும்  திரு. எம். கே.  சிவாஜிலிங்கத்துக்கு செய்திகளை பகுத்தாயும் தகைமை இல்லாமல் போனதையிட்டு நான் ஆச்சரியமடையவில்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினர் எம். கே.  

சிவாஜிலிங்கம் தன்னை பெயர் குறித்து கூறியுள்ள கருத்துகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

இலங்கையின் தென்கோடியில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் சென்று நான் சிங்கள மொழியில் கூறிய கருத்துகளை அரைக்குறையாக விளங்கிக்கொண்டு, அதை திரித்து வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு பேசி, இந்நாட்டின் பேரினவாத வாய்களுக்கு நாள்தோறும் தீனி போட்டு, ஒப்பீட்டளவில் எழுந்து வரும் ஒரு நல்ல சூழலை நாவடக்கமும், புரிதலும் இல்லாமல் நாசமாக்கி வரும் திரு. எம். கே.  சிவாஜிலிங்கம் போன்ற வாய்பேச்சு வீரர்களிடமிருந்து தமிழ் மக்கள், குறிப்பாக சொல்லொணா துன்பங்களை கண்டுவிட்ட வடகிழக்கு தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திரு. எம். கே. சிவாஜிலிங்கம், தனது கட்சியான ரெலோ இயக்கத்தின் கட்டுப்பாட்டையும், தனது கட்சி இடம் பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டையும் தன்னிச்சையாக எப்போதும் மீறி வருபவர். தனது கட்சி தலைமைமைக்கும்,  கூட்டு தலைமைக்கும் ஒருபோதும் உரிய மரியாதையை தராதவர். இவரை தமிழீழ விடுதலை புலிகளும் ஒரு பொருட்டாகவே கருதி இருக்க வில்லை என்பதை நான் நன்கறிவேன்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, “தன்னை தேடி தமிழ் தேசியவாதிகள் குருநாகலுக்கும் வந்துவிட்டார்கள்” என்று மேடையில் கூறும் ஒரு சந்தர்ப்பத்தை மகிந்த ராஜபக்சவுக்கு இவர் ஏற்படுத்தி கொடுத்தார். இதனால் எம். கே. சிவாஜிலிங்கம் கண்ட பலன் என்ன?  அதேபோல் கடந்த 2015ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழர்கள் தம் வாக்குகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தன்னிச்சையாக அறிவித்திருந்தார். இது எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரானது. அதேபோல் 2010 வருட ஜனாதிபதி தேர்தலில், கட்சி கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக, இவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இவை கோமாளி அரசியல் நடவடிக்கைகள் என்று தோன்றினாலும்,  தமிழர் வாக்குகளை பிரித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுகின்ற  சூழ்நிலையை ஏற்படுத்திய திட்டமிட்ட தீய முயற்சிகள் இல்லையா? இவற்றின் பின்னணி என்ன? இதற்காக திரு. எம். கே. சிவாஜிலிங்கத்துக்கு என்ன கிடைத்தது?  இவர் தனது கட்சி கட்டுப்பாட்டை மீறி ஏன் இவ்விதம் நடந்துக்கொண்டார்? என ஆராயும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். என்னைப்பற்றி கேள்வி எழுப்புவதை நிறுத்தி விட்டு திரு. எம். கே. சிவாஜிலிங்கம், தன்னைப்பற்றிய இந்த தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும், வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும், உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். கடந்த காலங்களை போலல்லாமல் இன்று அரசாங்கம், இந்த நிகழ்வுகள் தொடர்பில் ஒரு மெதுமையான போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இந்த நிலைப்பாடுகளுக்காக தென்னிலங்கை அடைப்படைவாதிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை ஒரு அரசாங்கம் என்ற முறையில் நாம் எதிர்கொள்கின்றோம். இந்த அரசின் அமைச்சர்கள் என்ற முறையில், இந்த எதிர்ப்பலைகளை நாம் தர்க்கரீதியாக, எடுத்து பேசி, ஒவ்வொருநாளும் எதிர்கொள்கிறோம். இந்த உண்மைகள் மனசாட்சியும், அறிவும் உள்ள எவருக்கும் விளங்க வேண்டும்.

இன்னமும் ஆங்காங்கே பல்வேறு தடைகள் இருந்தாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்த அஞ்சலி நிகழ்வுகள் பரவலாக சுமூகமாக நடந்துள்ளன. ஒருகாலத்தில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா, உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக  அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பகிரங்கமாக நன்றி செலுத்தும் அளவுக்கு இன்று நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது இன்று இந்த நாட்டிலே அரசாங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற தமிழ் மக்களின் அதிகாரப்பூர்வ அரசியல் தலைமைகள் முன்னேடுத்துவரும் அரசியல் முதிர்ச்சியுடன் கூடிய அறிவார்ந்த காய் நகர்தல்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன என்பதை வாய்வீரம் பேசுவதிலேயே காலத்தை கழிக்கும் திரு. எம். கே. சிவாஜிலிங்கம் என்ற வடமாகாணசபை உறுப்பினர் புரிந்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆட்சி தொடர்ந்து இருக்குமானால், இந்த ஒப்பீட்டளவிலான சுமூக நிலைமை உருவாகி இருக்குமா? இன்றைய ஒப்பீட்டளவிலான சுமூக நிலைமை, வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் முன்னெடுத்து வரும் சாணக்கியமான அரசியல் முதிர்சியுடன் கூடிய நிலைப்பாடுகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. எனவே நமது இன்றைய அரசாங்கத்தின் உருவாக்கத்தை தடுத்து நிறுத்த முயன்று தோல்வியடைந்த திரு. எம். கே. சிவாஜிலிங்கத்துக்கு, ஆயிரக்கணக்கான மக்களும், கூட்டமைப்பு எம்பீக்களும், நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்கள் என பெருமையுடன் கூற என்ன யோக்கியதை இருக்கின்றது? என கேட்க விரும்புகிறேன்.

இந்த நிலைமையை உருவாக்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்லாண்டுகளாக போராடிய முன்னணியாளன் நான் என்பதை திரு. எம். கே. சிவாஜிலிங்கம் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் நேர்கோட்டில் இருந்தபடி அவ்வந்த காலக்கட்டங்களில் மக்கள் படும் துன்பங்களை தீர்க்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்துவரும் எனக்கு, எப்போதும் நிலையற்ற அரசியல் செய்யும் திரு. எம். கே. சிவாஜிலிங்கத்திடமிருந்து தமிழ் தேசிய போராட்டம் பற்றிய எந்த ஒரு அறிவுரையும் தேவையில்லை என்பதை கூறி முடிக்கிறேன்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More