அரசியல் இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு விட்டு கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்.

குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்
suresh
தமிழ்மக்கள் எவற்றினை எதிர்பார்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அவைகள் இல்லாமல் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொள்ளத்தொடங்கியிருக்கின்றது.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில்,

தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றை முன்னிறுத்தி மேற்கண்டவற்றின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எட்டுவதற்கு வாக்களியுங்கள் இவற்றிற்கு மேலாக தமிழரின் சுயாட்சியை வலியுறுத்துவோம் என்றே மேடை மேடையாக பிரச்சாரம் செய்து தேர்தல்களில் மக்கள ஆணை பெற்று வெற்றிபெற்றிருக்கிறது.

ஆனால் தற்போது வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை இறைமையும் சுய நிர்ண உரிமையும் நாம் கோரவில்லை என பகிரங்கமாகவே இவர்கள் கூறுவது எந்த அடிப்படையில் என்பது பற்றி தெளிவுபடுத்தவேண்டும்.

அண்மைக்காலம்வரை கூட்டங்களில் பேசிவந்த சம்பந்தன் தமிழ்மக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ளாத தீர்வு ஒன்றினை தாம் ஏற்கப்போவதில்லை என உரையாற்றிவந்தார். ஆனால் தற்போது அவரது உரைகள் மாறத் தொடங்கிவிட்டது. வடக்கு கிழக்கு இணைவது சாத்தியமில்லை என சம்பந்தனும் சுமந்திரனும் பேசி வருகின்றனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடகிழக்கு இணைப்பு மற்றும் தமிழரின் சுயநிர்ணய உரிமை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும். சமஷ்டி அரசியல் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும். இவை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அடிப்படையான அம்சங்களாகும்.

இவைக்கு எதிராக யாரும் பாரிய கருத்துப் பரிமாற்றங்களை செய்யவில்லை. இவற்றினை மேற்கோள் காட்டி தமிழ் மக்கள் பேரவையும் ஒரு தீர்வினை வெளியிட்ட போதிலும், பல மேடைகளில் தமிழ் தேசிய, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை தாம் முன்வைத்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வினையே முன்வைக்கப்போவதாகவும் கூறிவந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கூட 1995 ஆம் ஆண்டு முன்வைத்த தனது தீர்வுப்பொதியில் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என ஜனாதிபதியும் பல அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ள அதேநேரம், இறைமையை கேட்கவில்லை என சுமந்திரன் கூறியதாக பல செய்திகளும் வெளிவந்துள்ளன.

என்னென்ன விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வு வர வேண்டுமென தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டதோ, அந்த தீர்வு இவ்வருடம் வருமென உறுதியளிக்கப்பட்டதோ, அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மக்களுக்குதெளிவுபடுத்தக் கூடிய சூழ்நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பும், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த யாப்பினையும் தமிழரசு கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் அரசியல் சாசன உருவாக்கத்தில் கலந்துகொள்ளவில்லை.

புதிய அரசியல்அமைப்பினை உருவாக்க வேண்டும் எனவே, ஒட்டுமொத்த மக்களும் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கோரியிருந்தார். அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆணையை கொடுத்துள்ளார்கள்.

ஆனால், தற்போது வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது என கூறப்படுவதுமட்டுமன்றி சமஷ்டி இல்லை. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு, அடிப்படை விடயங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற சூழ்நிலை உருவாகி வருகின்றது.

என்ன அடிப்படையில் சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழு அரசியல் சாசன விடயத்தில் செயற்பட போகின்றது என்பதனை தெளிவாக தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.

வடகிழக்கில் தமது உரிமைகளுக்கு போராடிய மக்களுக்குத்தான் வலிகள் இருக்கின்றன என்பதுடன், எத்தனை லட்சம் உயிர்களை இழந்திருக்கின்றோம் என்பதும் புரியும்.
போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள், வலிகளை உணர்ந்துகொள்ளாதவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலமை நீடித்தால், இம்மக்களை எங்கு கொண்டு சென்று விடப்போகின்றது என்ற பாரிய கேள்வியும் எழுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் கூடிய பேச்சுவார்த்தையினை அரசாங்கத்துடன் நடாத்தி, அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சரியான தீர்வுகள் எட்டப்படுமாக இருந்தால், அந்த அரசியல் சாசன தீர்வுகள் தமிழ் மக்களுக்குஉகந்ததாக இருக்க முடியும்.

தாம் கூறிய அடிப்படைகளும் இல்லாமல், அரசாங்கத்துடன் முழுமையான பேச்சுவார்த்தையும் நடாத்தாமல் என்ன அடிப்படையில் சம்பந்தன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகின்றார் என்பதனை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்மக்கள் எவற்றினை எதிர்பார்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அவைகள் இல்லாமல் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொள்ளத்தொடங்கியிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என அனைத்தையும் அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு சம்பந்தனுக்கோ, சுமந்திரனுக்கோ எந்தவொரு ஆணையையும் வழங்கவில்லை.

தமிழ் தேசியகூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆணை மிகத்தெளிவானது. வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி என்ற விடயங்களையே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகளும் ஏற்றுக்கொண்டன.

வெளிப்படைத்தன்மை இல்லாமல் பல விடயங்கள் நடந்துகொண்டு செல்கின்றன. எனவே, உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்றதென்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.