இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கை தமிழ், முஸ்லிம்களுக்கு பாதகமான வகையில் அமைந்துள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எல்லை நிர்ணய அறிக்கை தமிழ், முஸ்லிம்களுக்கு பாதகமான வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளின் சனத்தொகைப் பரம்பல் கருத்திற் கொள்ளப்படாது உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கையின் பல்வேறு குளறுபடிகளும் வழுக்களும் காணப்படுவதாகவும் பிழைகளுடன் கூடிய எல்லை நிர்ணய அறிக்கையை அவசரமாக எல்லை நிர்ணய ஆணைக்குழு எதற்காக சமர்ப்பிக்கின்றது எனவும் அரசாங்கத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியின் சனத்தொகை 58,937 எனவும், அதற்கான உறுப்பினர் எண்ணிக்கை 23 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியின் சனத்தொகை 68,591 எனவும், அதற்கான உறுப்பினர் எண்ணிக்கை 12 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் செறிந்து வாழும் தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் சனத்தொகை குறைவாக காணப்பட்டாலும் 23 உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சம்மாந்துறையில் அதனை விடவும் அதிக சனத் தொகை காணப்பட்டாலும் ஒதுக்கப்பட்டுள்ள உறுப்பினர் எண்ணிக்கை வெறும் 12 என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச சபையின் சனத் தொகை 31,200 ஆகும், பதவி சிறிபுர பிரதேச சபையின் சனத் தொகை 12,703 ஆகும், மெரவௌ பிரதேச சபையின் சனத் தொகை 9,939 ஆகும்;, கோமரன்கடவல பிரதேச சபையின் சனத் தொகை 8,348 ஆகும் எனினும் இந்த அனைத்து பிரதே சபைகளுக்கும் தலா பத்து உறுப்பினர்கள் என்ற  அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக சனத் தொகையைக் கொண்ட அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையின்  மொத்த சனத்தொகை சுமார் 2,040,00 ஆகும், இந்த பிரதேச சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேச சபையை இரண்டாக அல்லது மூன்றாக பிரித்து உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகின்றது. அம்பகமுவ பிரதேச சபையில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்களே அதிகளவில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பிலும் சர்ச்சை நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.