இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

காணி வீட்டு உரிமை பிரச்சினை – கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னேடுக்க மலையக சமூக நடவடிக்கை குழு தீர்மானம்

காணி வீட்டு உரிமை பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்வதுடன் அது தொடர்பாக மலையக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் அரசாங்கமும், அரசாங்கம் சார்பான மலையக தலைமைகளும் செயற்பட்டு வருவதனால் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக விழிப்பூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மலையக சமூக நடவடிக்கைகுழுவின் மத்திய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. 07.01.2017ஆம் திகதி இடம் பெற்ற மத்திய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மலையக சமூக நடவடிக்கைகுழுவின் இணை அழைப்பாளர்களான சு. விஜயகுமார் மற்றும் சட்டத்தரணி நேரு. கருணாகரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மலையக மக்களின் இருப்பு தொடர்பான பிரச்சினையாக உள்ள காணி வீட்டு உரிமை பிரச்சினை மற்றும் சம்பள பிரச்சினை என்பவற்றுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமல் தொடர்கின்றன. மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்ற போதும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, 7 பேர்ச் காணி எனக் கூறி வழங்கப்படும் காணிகள் 7 பேர்ச் அளவை கொண்டதாக இருப்பதில்லை. அத்தோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிலாளர்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சட்டரீதியான உரிமைகளை ஒழித்து பெருந்தோட்டத் தொழிற்துறையை அழிக்கும் நடவடிக்கையாக உப குத்தகை முறையாக வெளியாள் உற்பத்தி முறையை அறிமுகம் செய்ய கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, மலையக மக்கள் காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதனை உறுதி செய்யவும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் பெருந்தோட்டத் தொழிற்துறையை பாதுகாப்பதற்கும் மக்களுடன் இணைந்த செயற்பாடுகளையும் புலமைசார் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பது உணரப்பட்டு அதற்கான நடவடிக்கைளை இவ்வருடம் முழுவதும் முன்னெடுப்பதற்கும், அத்தோடு மலையக மக்களையும் பொதுவில் இலங்கை மக்களை பாதிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் தலையிடுவது எனவும் என அக்கூட்டத்ததில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply