இலங்கை பிரதான செய்திகள்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

தூக்குத் தண்டனை தீர்ப்புக்களில், தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஜனாதிபதிக்குத் தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்க வேண்டும், என்ற நடைமுறையின்படி, இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை, ஆயுட்கால சிறைத் தண்டனையாகக் குறைக்குமாறும் குற்ற நடவடி கோவை ஏற்பாடுகளின் கீழ் யாழ் மேல் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான நாடுகடத்தல் உடன்படிக்கையின் மூலம் அல்லது இருநாடுகளுக்கிடையில், பரஸ்பரம் குற்றவாளிகளைப் பரிமாற்றிற்கொள்ளும் நடைமுறையின் மூலம் இந்த நாடு கடத்தல் ஏற்பாட்டைச் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்றம் நீதிபதி இளஞ்செழியன் தனது பரிந்துரையில் குறப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவரும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த போது, பிணையில் சென்றதன் பின்னர், வழக்கு நடவடிக்கைக்கு நீதிமன்றத்திற்கு வருகை தராமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனால், இவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்கள் இல்லாமலேயே, வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இருவருக்கும் இரட்டை தூக்குத் தண்டனையும், 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ள இங்கிலாந்தில் மரண தண்டனை இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பதனால், அவர்களை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயட்காலச் சிறைத் தண்டனையாகக் குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் ஏற்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றிய நீதிமன்றத்திற்கான அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் ஊடாக எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோன்று, வெளிநாட்டு அமைச்சர், நீதியமைச்சர், சட்டமா அதிபருக்கும் இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தல் சம்பந்தமான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாhழ் மேல் நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்றுறை நாரந்தனையில் தேர்தல் பரப்புரைக்காகச் சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மது நடத்தப்பட்ட தாக்குதலில் கூட்டமைப்பின் ஆதராளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான மாவைசேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் அல்லது ரமேஷ்,  மதனராஜா அல்லது மதன், அன்ரன் ஜீவராஜா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரட்டை மரண தண்டனையும் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து, யாழ் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது,

இந்த மூவரில் தலைமறைவாகியுள்ள இருவரையும் நாடு கடத்துவதற்குரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனை விதித்துள்ள தீர்ப்பின் பிரதியும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.