இலங்கை பிரதான செய்திகள்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. கண்கண்ட சாட்சியமாக சிறுவன்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது, சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது ,
இளம் குடும்பம். 
நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தினரான இவர்கள் கணவர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றி வருவதனால் , ஊர்காவற்துறை பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் பிள்ளையும் உண்டு.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று மனைவி , பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு கடமைக்கு சென்று உள்ளார்.
தொலைபேசிக்கு பதில் இல்லை.
மனைவி கர்ப்பிணியாக இருப்பதனால் , மதிய வேளைகளில் மனைவியுடன் தொலைபேசியில் உரையாடுவதனை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். அவ்வாறு இன்றைய தினமும் , மனைவிக்கு தொலைபேசி  அழைப்பினை ஏற்படுத்திய வேளை தொலைபேசிக்கு பதில் இல்லாததால் அயலவர்களுடன் தொடர்பு கொண்டு மனைவி பற்றி விசாரித்து உள்ளார்.
அதனை அடுத்து அயலவர் வீட்டுக்கு சென்று பார்த்த வேளை அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ணுற்ற அயலவர்கள் உடனடியாக கணவருக்கு அறிவித்ததுடன் பொலிசாருக்கும் தகவல்கள் தெரிவித்தனர்.
அடித்தும் , வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். 
குறித்த பெண்ணை படுகொலை செய்த கொலையாளிகள் , பெண்ணின் தலையின் பின்புறத்தில் கட்டையால் பலமாக அடித்துள்ளனர். அத்துடன் கழுத்து பகுதியில் வெட்டியும் உள்ளனர்.
தடயங்களை அழிக்க முயற்சி.
பெண்ணை படுகொலை செய்யத பின்னர், தடயங்களை அழிக்கும் நோக்குடன் கொலையாளிகள் செயற்பட்டு உள்ளனர். இரத்தகறைகளை கழுவியும் உள்ளனர்.  பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இரும்பு சேகரிக்க வந்தவர்கள் மீதே சந்தேகம். 
கொலையாளிகள் என சந்தேகிக்கபப்டும் நபர்கள் அப்பகுதியில் இரும்பு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அதனை அடுத்து காவல்துறையினர் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மண்டைதீவு சந்தியில் கொலை சந்தேக நபர்கள் கைது. 
ஊர்காவற்துறை – யாழ்ப்பாண வீதியில் மண்டைதீவு சந்தியில் உள்ள காவல்துறை காவலரணில் வைத்து ஊர்காவற்துறையில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியினை வழிமறித்து சோதனை நடத்திய போது முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவரினது ஆடையில் இரத்த கறை காணப்பட்டது. அத்துடன் அவரது கழுத்து பகுதியிலும் காயம் காணப்பட்டது. அதனை அடுத்து இருவரையும் கைது செய்து ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
கொலை சந்தேகநபர்களை தாக்க முற்பட்ட ஊரவர்கள்.
அதன் போது ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஊரவர்கள் கொலை சந்தேகநபர்களை தாக்க முற்பட்டனர். அதனை அடுத்து சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி , சந்தேகநபர்களை யாழ்.காவல் நிலையத்திற்கு மாற்றுவதற்கு ஊர்காவற்துறை காவல்துறையினர் முயற்சிகளை எடுத்த வேளை அதற்கு ஊரவர்கள் சம்மதிக்காததால் பதட்டம் ஏற்பட்டது.
சந்தேகநபர்கள் யாழ் காவல் நிலையத்திற்கு மாற்றம். 
அதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊரவர்களுடன் சமரசம் பேசி சந்தேகநபர்களை யாழ்.காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். யாழ்.காவல் நிலையத்தில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை.
சந்தேக நபர்களை புதன் கிழமை காலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாய் பேசமுடியாத சிறுவன் கண்கண்ட சாட்சி. 
அதேவேளை இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் பன்னிரண்டு வயது வாய் பேச முடியாத சிறுவன் ஒருவன்  ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளாா்.
குறித்த சிறுவனின் தகவலின் பிரகாரமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
படுகொலையுடன் வேறு நபர்களுக்கும் தொடர்பா ? 
குறித்த படுகொலை சம்பவத்துடன் இருவர் மாத்திரம் தான் தொடர்பா அல்லது வேறு நபர்களின் தொடர்பும் இருக்கின்றதா ? எனும் கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , தொடர்பு இருப்பின் அவர்களை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
கொலை சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர்கள். 
அத்துடன் கைது செய்யபப்ட்ட இரு சந்தேக நபர்களும் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.