இலங்கை பிரதான செய்திகள்

ஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்த என்னை மைத்திரி அரசியலில் தள்ளிவிட்டார் – மஹிந்த ராஜபக்ஸ

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஓய்வு பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்த தம்மை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் அரசியலில் தள்ளிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.போலியான ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்காலத்தில் நாட்டில் பாரியளவில் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டை அபிவிருத்தி செய்யவே தாம் கடன் பெற்றுக்கொண்டதாகவும், இந்த அபிவிருத்தித் திட்டங்களின் பலன்களை தற்போது மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாது தாம் தேர்தலில் வேண்டுமென்றே தேர்தலில் தோற்றதாக கூறுவோர் ஏன் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் அரச சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • ஓய்வு பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்த தன்னை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் அரசியலில் தள்ளிவிட்டதாக வீராவேசம் செய்யும் திரு. மகிந்த ராஜபக்ஷ, யாரை முட்டாளாக்க முயலுகின்றார்?

    ஓய்வு பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டிருந்த இவர், தனது அதிகார பலம் மற்றும் பணபலத்தைப் பிரயோகித்து 3 வது தவணைக்கும் ஜனாதிபதியாக இருக்கவல்ல வகையில் எதற்காக அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்தார்? ஓய்வு பெற விரும்புபவர், தனது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து கௌரவமாக விடைபெறுவதை விடுத்து எதற்காக 2 வருடங்கள் முன்பதாகத் தேர்தலை நடாத்தினார்? இவை எல்லாவற்றுக்கும் இந்நாள் ஜனாதிபதிதான் காரணம் என்று கூற வருகின்றாரா?

    சொல்பவன், ‘கேனையன்’, என்பதற்காகக் கேட்பவர்கள் எல்லாம், ‘கேணையர்கள்’, என்று இன்னும் திரு. மகிந்த ராஜபக்ஷ நம்புகின்றாரா? தனது பதவிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்தது போதாதென்று இன்னும் கொள்ளையடிக்கும் நோக்கில் அரசியலில் தொடர்ந்திருக்க விரும்புகின்றாரெனக் கூற முடியாது போனாலும், ஏற்கனவே சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னைப் பாதுகாக்க, இவருக்கு அதிகார பலமுடைய அரசியல் அந்தஸ்துத் தேவையாக இருக்கின்றது, என்பதை மறுக்க முடியாது! அது மட்டுமன்றி, தனக்குப் பின்னர் தனது அரசியல் வாரிசொன்றை உருவாக்கவும் அவருக்குப் பலமான பதவி ஒன்று தேவைப்படுகின்றது, என்பதை மறுப்பாரா?

    ஆக, மதவெறியுடன் கூடிய இனவெறி அரசியல் செய்வதன் மூலம், ஆட்சியைக் குறுக்கு வழிகளில் அடையக் கணக்குப் போடுகின்றார், என்பதே உண்மை!

    ரணில்- மைத்திரி தேசிய அரசாங்கத்தின் விவேகம் மற்றும் கண்ணியமற்ற அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, திரு. மகிந்த ராஜபக்ஷவின் இது போன்ற விஷப்பிரச்சாரங்கள் எதிர்காலத்தில் மக்களிடம் எடுபட்டாலும் ஆச்சரியமில்லை? தனக்கிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தித் திரு. மகிந்த ராஜபக்ஷவின் வாயை அடைக்கத் திரு. மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கைகளை எடுக்காது போனால், நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்! சிந்திப்பாரா?
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers