இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம் – வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்-

வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான மூன்று நாள் ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை(28.01.2017) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆய்வரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தண்ணீர் இயல்பாகவே தீயை அணைக்கக் கூடியதே அல்லாமல் தீயை மூட்டிவிடக் கூடியது அல்ல. ஆனால், தண்ணீர் இனிமேல் சமூகங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பகைமையை மூட்டிவிடும் எரிஎண்ணையாக இருக்கப்போகிறது. அடுத்த உலகப் போருக்கான காரணியாக அமையப்போகிறது என்ற அச்சம் சர்வதேச அளவில் தொற்றிக் கொண்டுள்ளது. அந்த அளவுக்கு உலகில் நீருக்கான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சனத்தொகை அதிகரிப்பால் நீருக்கான தேவை அதிகரித்து வருவதோடு, கிடைக்கின்ற நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்து வருகிறது.

உலகம் எதிர்நோக்கும் நீர் தொடர்பான நெருக்கடிகளுக்கு எமது வடக்கு மாகாணமும் விலக்காகவில்லை. சனத்தொகை அதிகரிப்பு, விவசாயத் தேவைகள், போருக்குப் பின்னான காலத்தில் அதிகரித்துள்ள கட்டுமானச் செயற்பாடுகள், கைத்தொழில் வளர்ச்சி, போரினால் எமது நீர்தேக்கங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், மயோசின் சுண்ணாம்புப்பாறையில் உள்ள பலவீனங்கள், கடல்நீரின் ஊடுருவல், அன்றாடம் குவிந்துவரும் மாசுகள், பூகோள வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் என்று எமது நீர்வளமும் பல்வேறு வகையான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

எமது நீர்வளம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு சரியான தீர்வுகளைத் கண்டடையாமற் போனால் நாமும் எமது சூழலும் பாரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரும்.இதனைக் கருத்திற் கொண்டே வடக்கு மாகாணத்தின் நீர் வளங்களை நிலைத்து நிற்கும் வகையில் மீட்டெடுப்பதற்கான, பாதுகாப்பதற்கான, பங்கிடுவதற்கான, முகாமை செய்வதற்கான ஒரு நீரியல் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் இன்று இங்கு இணைந்திருக்கிறோம்என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இத்தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், மத்திய நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் எந்திரி டி அல்விஸ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் எந்திரி கோ.வாசுதேவன், பிரதிப் பிரதம செயலாளர் எந்திரி சோ.சண்முகானந்தன், இலங்கை விஞ்ஞான மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் எந்திரி வி.ரகுநாதன், யாழ் பல்கலைக்கழகபொறியியற்பீடத்தின் குடிசார் இயந்திரவியல் துறைத்தலைவர் எந்திரி சு.சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap