இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் -இன்றைய தேவை என்ன?

செல்வரட்னம் சிறிதரன்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாகவே இழுபறி நிலையில் உள்ளதொரு பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் பல காலமாக முன்வைக்கப்பட்டு, பல்வேறுபட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கி;ன்றன.
ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது சாதாரண பிரச்சினையல்ல. அது தண்டனைக்குரிய குற்றம் என்று குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் கூறுகின்றது. ஆட்களை வலிந்து கடத்திச் செல்வது அல்லது தனது பொறுப்பில் உள்ள ஒருவரைக் காணாமல் போகச் செய்வது என்பது தண்டனைக்குரிய பாரதூரமான குற்றம் என்று, நாட்டின் பொதுவான சட்டம் குறிப்பிடுகின்றது. இது முதலாவது.
அதேநேரம், அது ஒரு அடிப்படை உரிமை மீறல் என்றும், மிக மோசமான மனித உரிமை என்றும் சர்வதேச சட்டங்களும் கூறுகின்றன. அந்த வகையில் அது கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. இது இரண்டாவது நிலைப்பாடாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் பெரும் எண்ணி;க்கையிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவது என்பது இலகுவில் புறந் தள்ளிவிடப்படக்கூடிய விடயமல்ல. அந்த வகையில் அது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகவும், ஜனநாயகத்திற்கு சாவு மணி அடித்து, சர்வாதிகாரத்தைக் கையில் எடுக்கின்ற ஒரு மோசமான நடவடிக்கையாகவும் கருதப்படுகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே இலங்கையில் – குறிப்பாக பெரும் எண்ணி;;க்கையிலான தமிழர்கள் காணாமல் ஆக்கபட்டிருக்கின்ற விடயத்தை நோக்க வேண்டியிருக்கின்றது. அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய விடயம் சர்வதேச அரங்காகிய ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் ஏற்கனவே அணுகப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்திற்குப் பொறுப்பு கூறுவதற்கு, அந்தப் பேரவையில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலைமையிலேயே புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியானதொரு பதிலைக் கோரி, வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு, அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் ஊடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டியிருக்கின்றது. இவற்றில் பல கேள்விகள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல தரப்பினராலும் எழுப்பப்பட்டிருக்கின்றன. அந்தக் கேள்விகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்தப் போராட்டங்களில் பல இந்த மோசமான பிரச்சினைக்கு ஓர் இறுதித் தீர்வு காணப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் பல போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
அதேவேளை, போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக – ஒரு சிலருடைய அரசியல் தேவைக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் கையாளப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.
காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இனியும் தாமதிக்க முடியாது. கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் தெரியாமல் இனியும் இருக்க முடியாது. அவர்களைப் பற்றிய விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும். தன்னுடைய பொறுப்பில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்கள் பற்றி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். இந்தப் பிரச்சினையில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – என்ற கோரிக்கைகளையே வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன் வைத்திருந்தது.
ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள விடயத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிலரே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். நீண்ட காலமாகவே அவர்கள் நீதி கோரி வீதிகளில் இறங்கி போராடியிருந்த போதிலும், அவர்களுடைய கோரிக்கைகள் உரிய முறையில் சம்பந்தப்பட்டவர்களினால் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளினால் வாயளவில் வழங்கப்பட்டிருந்ததே தவிர, அதிகாரம் கொண்ட பொறுப்பானவர்களிடமிருந்து அவர்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் விரக்தியடைந்தார்கள். எவர் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலைமைக்கு அவர்கள் ஆளாகினார்கள். அதன் காரணமாகவே இறுதி வடிவமான சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் குதித்திருந்தார்கள்.
ஆனால் இந்தப் போராட்டத்தின் தீவிரத் தன்மையை எவரும் முதலில் சரியாகப் புரிந்திருக்கவில்லை. வழமையானதோர் அரசியல் போராட்ட நடவடிக்கையாகவே பலரும் அதனை ஆரம்பத்தில் நோக்கினார்கள். அந்தப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை அவர்கள் உணரத் தவறியிருந்தார்கள். உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அவர்கள் ஒப்புக்காகவே ஏ9 வீதியில் எதிரெதிரே அமைந்துள்ள வவுனியா அஞ்சல் அலுவலம் மற்றும் வவுனியா பொலிஸ் தலைமை அலுவலகம் என்பவற்றுக்கிடையில் வீதியோரத்தில் அவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள் என்று பலரும் கருதியிருந்தார்கள்.
ஆனால் நிலைமை அப்படி இருக்கவில்லை. ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதற்கு அரசாங்கம் நீதி வழங்காவிட்டால் தாங்கள் உயிர் துறப்போம் என்று அவர்கள் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள் என்ற உண்மை தாமதமாகவே பலருக்கும் உறைத்திருந்தது.
அவ்வாறிருந்த போதிலும், அந்த உண்ணாவிரதம் அரசாங்கத்தின் நேரடி தலையீட்டினாலும், அந்தப் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேரடியாக அளித்த உத்தரவாதத்தையடுத்து, அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் பலரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இன்னும் ஒரு நாள் தாமதித்திருந்தால், அந்தப் போராட்டத்தை நாங்கள் பிரமாண்டமானதொரு போராட்டமாக்கியிருப்போம். அதற்குள் அவசரப்பட்டு அதனை  முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்களே என்ற ஆதங்கம் இளைஞர்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதைக் காண முடிகின்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் திட்டமிட்டு முறியடித்துவிட்டார்கள். அவ்வாறு இடம்பெற இடமளித்திருக்கக் கூடாது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து விரிவாக பார்க்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் இதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தீவிரமாகவும் அதேவேளை மிகுந்த பொறுப்போடும் சிந்தித்துச் செயற்ட வேண்டியிருக்கின்றது.
ஏனென்றால் நீதி வழங்கப்பட வேண்டும். இல்லையேல் நாங்கள் எங்களையே மாய்த்துக் கொள்வோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் இறுக்கமானதொரு தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார்கள். அவவாறு அவர்கள் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களும், கடத்திச் செல்லப்பட்டவர்களும் ஒரு பக்கம் இருக்க, பொது மன்னிப்பு அளிக்கப்படும். விசாரணைகளின் பின்னர் நாங்கள் அவர்களை விடுதலை செய்வோம் என்று அராசங்கம் அளித்த உறுதிமொழியையடுத்து, பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இராணுவத்தினரிடமும், இராணுவ புலனாய்வாளர்களிடமும் கையளித்திருந்தார்கள்.
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து மனிக்பாம் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களை அழைத்து பல கூட்டங்கள் பல்வேறு தேவைகளுக்காக நடத்தப்பட்டிருந்தன. மனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களில் மறைந்திருந்தவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களுடன் சேர்ந்து இயங்கியவர்களையும் கண்டு பிடிப்பதற்காக அந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அவ்வாறானவர்களைத் தங்களிடம் கையளிக்குமாறும், விசாரணையின் பின்னர் அவர்களை விடுதலை செய்வதாக அந்தக் கூட்டத்தில் அந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த புலனாய்வாளர்களும் உறுதியளித்திருந்தனர்.
அதேநேரம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஒருவரும் யாரும் பயப்படத் தேவையில்லை. சந்தேகப்படவும் தேவையில்லை. இராணுவம் கேட்பவர்களை ஒப்படையுங்கள் அவர்களுக்கு எதுவும் நடக்காது என கூறியிருந்தார். அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவர்கள் திரும்பி வருவார்கள். நாங்கள் இருக்கிறோம் அதனைப் பார்த்துக் கொள்வோம். அவர்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கிறோம் என்றும் அவர் அந்த இடத்தில் கூடியிருந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்;தவர்களிடம் உறுதியளித்திருந்தார்.
அந்த உறுதிமொழியை நம்பி தமது பிள்ளைகளைக் கையளித்தவர்கள் இன்று தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்களே என்று கண்ணீரும் கம்பலையுமாகத் திரிகின்றார்கள். அது மட்டுமல்ல. தங்களுடைய அந்தப் பிள்ளைகளைத் தாங்களாகவே இராணுவத்தினரிடம் கையளித்து காணாமல் போகச் செய்திருக்கின்றோமே என்ற கழிவிரக்கத்தில் மனம் வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த குற்ற உணர்வுடன் கூடிய மன வருத்தம் என்பது சாதாரணமானதல்ல. அந்த குற்ற உணர்வும்கூட தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி வழங்க வேண்டும் என்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உரம் சேர்த்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமைக்கு நீதி கோரி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற போராட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதம் என்ற  தீரமானத்தை மீறி அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும் என்று கூறுவதற்கில்லை.
ஆயினும் அடுத்த கட்ட நகர்வு என்பது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்களுடன், அருட் தந்தையர்களும் இணைந்து பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்துடன் நடத்தப்படப் போகின்ற பேச்சுவார்த்தைகைளிலேயே அரசாங்கத்தின் பதில் என்ன என்பதும், அதன் நிலைப்பாடு என்ன என்பதும் தெரியவரும்.
இந்த நிiமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோரிக்கையில் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் கொண்டு செல்லப்பட்டவர்கள் ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்கள்? அதற்கு பொறுப்பானவர்கள் யார்? கைது செய்யப்பட்டவர்களும், உறவினர்களினால் கையளிக்கப்பட்டவர்களும், கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களும் எந்தெந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்? எத்தனை பேர் அவ்வாறு வைக்கப்பட்டிருந்தார்கள்? அவர்களைப் பற்றிய விபரம் என்ன? அவர்களின்  பெயர்ப்பட்டியல் எங்கே? அவர்களில் எத்தனை பேர் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள்? உயிரோடு இல்லாதவர்கள் எத்தனை பேர்? அவர்கள் பற்றிய விபரம் – பெயர்ப்பட்டியல் எங்கே? ஒட்டுமொத்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் என்ன பதிலை வைத்திருக்கின்றது? காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் எப்போது பொறுப்பு கூறப் போகின்றது? – இது போன்ற கேள்விகளுக்கு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின்போது பதில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
நல்லாட்சி அரசாங்கமே ஆட்சி புரிகின்றது. அந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும். அதனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை முன் வைத்து தமிழர் தரப்பின் முக்கியமான அரசியல் அமைப்பாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த அராசங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்றது என்ற அரசியல் யதார்த்த நிலைமையே காணப்படுகின்றது. யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இது மிகவும் ஒரு சாதகமான நிலைமையாகவே நோக்கப்படுகின்றது.
அத்தகைய ஒரு சாதகமான அரசியல் சூழ்நிலையில், முறையானதோர் அரசியல் தலைமைத்துவமோ அல்லது, வலுவானதோர் அரசியல் வழிநடத்தலோ இல்லாத நிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் அடுத்த கட்டம் நீதி கிடைப்பதற்கு சாதகமானதாக அமையுமா என்பதை முன்கூட்டியே அனுமானிப்பது கடினமாகவே இருக்கின்றது.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சாகும் வரையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத்தினர் நடத்திய ஒரு நாள் அடையாளப் போராட்டத்தின் போது தமிழ் அரசியல் தலைமைகள் மீது கொண்டிருந்த விரக்தி நம்பிக்கையின்மை காரணமாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் உருவப்படத்திற்குத் தீ வைக்கப்பட்டிருந்தது.
போராட்டம் நடத்தியவர்களின் இந்த நடவடிக்கை பலரையும் முகம் சுழிக்கச் செய்திருந்தது. சம்பந்தனுடைய உருவப்படத்திற்குத் தீ வைக்கப்பட்டதைப் பகிரங்கமாகக் கண்டித்தவர்களுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கண்டனக் குரல் எழுப்பியிருந்தார்கள். இத்தகைய ஒரு பின்னணியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்ற கண்டிப்பான ஒரு நிலைப்பாட்டையும் போராட்டம் நடத்தியவர்கள் எடுத்திருந்தார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே அரசியல் தலைமைத்துவமோ அல்லது பகிரங்கமான அரசியல் வழிகாட்டலோ இல்லாத ஒரு நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களுக்கும் அரசாங்கத் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற இருக்கின்றன.
நீர்கூட அருந்தாமல் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின் நான்காவது நாளன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்ததன்படி,  அமைச்சர் சுவாமிநாதனே உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆயினும் வைத்திய கவனிப்பை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் இருந்தவர்களில் நான்கு பேருடைய உடல் நிலை மோசமடைந்திருந்தது. தாமதம் ஆகின்ற ஒவ்வொரு நிமிடமும், அவர்களுடைய உடல் நிலை உயிராபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலிலேயே மன்னாருக்குச் சென்றிருந்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன வவுனியாவுக்கு விரைந்து உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
உண்ணாவிரதமிருந்தவர்களின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று  கொண்டிருப்பதை அறிந்து அரசாங்கம் அப்போது உடனடியாகச் செயற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. உண்ணாவிரதத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் இருந்து ஆதரவு பெருகி வருவதாகவும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு பிரதேசங்களின் பல இடங்களிலும் இருந்து இளைஞர்களும் பொதுமக்களும் வவுனியாவுக்குப் படையெடுக்கத் தொடங்கயிருப்பதாகவும் அரசாங்கத்திற்குத் தகவல்கள் எட்டின.
இதனால், உண்ணாவிரதம் இருந்தவர்களில் எவரேனும் உயிரிழக்க நேரிட்டால் நிலைமை மோசமடையும் வன்முறைகளும் வெடிக்கக் கூடும் என்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கைத் தகவல்கள் சென்றிருந்தன. இந்த நிலையிலேயே அரசாங்கம் உடனடியாகச் செயற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அதேவேளை, தமிழர் தரப்பில் இருந்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் ஊடாக அவப் பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அரசியல் ரீதியான ஆர்வம் கொண்டுள்ள அரசியல் தரப்பினருடைய மறைமுகமான நடவடிக்கையும் இதன் பின்னணியில் தீவிரமாக இடம்பெற்றிருந்தது என்ற தகவலும் வெளியாகியிருக்கின்றது. ஆயினும் இந்தத் தகவலுக்கு எந்தத் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போயிருப்பவர்கள் குறித்து அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். நீதி வழங்க வேண்டும் எனக் கோரி வீதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பற்றியே பலரும் பேசுகின்றார்கள். விவாதிக்கின்றார்கள். அவை பற்றிய விடயங்களே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடித்து கொண்டு வந்து கண் முன் நிறுத்த வேண்டும் எனவும், ஆட்களைக் காணாமல் ஆக்கியமைக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் கோரி,  அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் சவால் விட்டு ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பவர்கள், அரசாங்கத் தரப்பினரையும், இராணுவத்தினரையும் நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் முகத்துக்கு நேராக ‘எங்களுடைய உறவுகளை நீங்களே காணாமல் ஆக்கியிருக்கின்றீர்கள். அதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். மறுபக்கத்தில் இவர்கள் செய்துள்ள குற்றத்திற்கு இவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அடித்துக் கூறி வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்தபோது இராணுவத்தினரிடம் வட்டுவாகல் முகாமில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளான விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட 14 பேர்  தொடர்பில் அவர்களுடைய உறவினர்கள் தனித்தனியே வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, கெடு பிடிகள் மிகுந்த முன்னைய ஆட்சிக்காலகத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்கள்.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த நான்கு வருடங்களாக வவுனியா மேல் நீதிமன்றத்திலும், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வழக்குகளை வயதானவர்களும் நடுத்தர வயதுடையவர்களும் இளம் வயதுடையவர்களுமான பெண்களே முதலில் தாக்கல் செய்தார்கள். அதனையடுத்து, இராணுவத்தினரும், இராணுவ புலனாய்வாளர்களும் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுத்திருந்தார்கள் உச்சகட்டமான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தவணைகளுக்குத் தவறாமல் சமூகமளித்து, காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளின் நிலையை அறிவரற்காகவும் நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இது குறித்து சமூகத்தில் போதிய தெளிவின்மை காணப்படுவது சோகமானது. நீதிக்கான இந்தப் போராட்டத்திற்கு சமூகத்தில் இருந்து போதிய ஆதரவு கிட்டவில்லை என்பதும் கவலைக்குரியது. ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்;டது என்பது தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
நீதித்துறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள நீதிக்கான இந்தப் போராட்டத்தில் போதிய அளவில் பங்கெடுப்பதற்கு, அதில் நேரடியாக ஈடுபட்டிருப்பவர்களைத் தவிர,  சட்டத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு மிக மிக குறைவாகவே இருக்கின்றது.
எனவே, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தால் என்ன, ஆட்கொணர்வு மனு முறையிலான நீதித்துறை சார்ந்த போராட்டமாக இருந்தால் என்ன இந்தப் போராட்டங்களில் அரசியல் சாயம் பூசிய கண்னோட்டத்துடன் நோக்குவதும:;, அந்தப் போராட்ட நடவடிக்கைகளில் கிடைக்கின்ற இடைவெளியில் பிரபல்யம் பெறுவதற்கும், அரசியல் இலாபம் தேடுவதற்கும் முனைபவர்களின் முயற்சிகள் வரவேற்கத்தக்கதல்ல.
இழுத்தடிப்பு, காலம் கடத்தல், நுட்பமான ஒடுக்குமுறை நடவடிக்கைகள், இராஜதந்திர ரீதியிலான உரிமை மறுப்புச் செயற்பாடுகள் என பல்வேறு வழிகளில் பேரின அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஓரங்கட்டி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இணங்கிச் சென்று ஒடுக்குமுறைக்குள் படிப்படியாகத் தமிழ் மக்கள் தமது அரசியல், மண் உரிமைக்கான போராட்டத்தைக் கரைத்துக் கொள்கின்ற போக்கில் இழுபட்டுச் செல்கின்றார்களோ என்று சந்தேகம் கொள்ளத்தக்கதோர் அரசியல் சூழலில் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுபவர்களும், அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குபவர்களும், அந்தப் போராட்டத்தை கையகப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்களும் சரியானதொரு வழிமுறையில் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers