இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் அந்தஸ்துடன் வாழ வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமாகின்றது

சிறுபான்மை  சமூகங்கள் அடுத்த ஆண்டு நாட்டின்   70 ஆவது சுதந்திரத் தினத்தை  அரசியல் தீர்வைப் பெற்று சகல சமூகங்களும் நிம்மதியுடனும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழ்நிலையில்  கொண்டாட வேண்டும்.

இன்றைய தினம் (04.02.2017) அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்தவர்களாக சிறுபான்மையினத்தவர்களான நாம்  69 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்,

சிறுபான்மையினத்தவர்களின் ஒரே அபிலாஷை சுதந்திர இலங்கையில்  நிம்மதியாகவும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடனும்  தமது தாய்த் திருநாட்டில் வாழ வேண்டும் என்பதே ஆகும்,

எனவே சிறுபான்மை மக்கள் தமக்கான அரசியல் ரீதியான உரிய அங்கீகாரம் உட்பட சகல விதமான உரிமைகளுடனும்  வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின்  சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு, உள்ளது என்பதை யாராலும் மறுதலிக்க முடியாது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறுபான்மை கட்சிகளின்  ஒத்துழைப்புடன் அரசியல் தீர்வொன்றுக்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்ற போதும் சில பேரினவாத சதிச் சக்திகள் தங்களுடைய அரசியல் சுயலாபத்துக்காக  தீர்வினை குழப்புவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன்  அரசியல் தீர்வொன்றினைப் பெறுவதற்கான இந்தப் பயணத்தில்    தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக இணைந்து  செயற்பட வேண்டும் என்பதுடன் இந்த மக்களின் ஒற்றுமையினை குழப்புவதற்காக பலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதுடன் அவர்களை மிகத் தௌிவாக அடையாளங்கண்டு மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

இந்த நாட்டிற்கு சுதந்திரத்தைப்  பெற்றுக் கொடுப்பதற்கான  போராட்டத்தில் முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களவர் என அனைவரும் இணைந்தே செயற்பட்டனர் என்பதால் இந்த நாட்டின் உரிமைகளை சமமாக அனுபவிப்பதற்கு சகலருக்கும் உரிமையுள்ளது

இதேவேளை சகல சமூகங்களும் தமக்கான அரசியல் அந்தஸ்துடன் வாழ வேண்டுமானால்  அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமாகின்றது என்பதுடன் அரசியல் யாப்பில் எழுத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்  அதிகாரப் பகிர்விற்காக இன்று நாம் இவ்வளவு குரல் எழுப்புவதற்கான எந்த விதமான தேவையுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்,

ஆகவே அடுத்து வரும்  மாதங்களுக்குள் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வினை வழங்கி சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் வென்றெடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்,

கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.