உலகம்

கர்ப்பிணி பெண் கொலைக்கும் சந்தேகநபர்களுக்கும் தொடர்பில்லை – சட்டத்தரணி விண்ணப்பம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த தினத்தன்று சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்து உள்ளார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தன் ஊடாக குறித்த வழக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றார். 
 
அதன் போது சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி மன்றில் விண்ணபம் செய்தார். அதில், கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் கொலை நடந்ததாக கூறப்படும் 24ம் திகதி காலை 11.30 மணியளவில்,  சம்பவம் நடந்த ஊர்காவற்துறை பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மருதனார்மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பி உள்ளார்.
அதற்கு ஆதாரமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவற்றை பெற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
மற்றைய சந்தேகநபர் வேலணையில் நின்றார். 
 
அதேவேளை மற்றைய சந்தேக நபர்  சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் வேலணை பகுதியில் நின்று உள்ளார்.  அவர் வேலணை பகுதியில்  துவிசக்கர வண்டியில் விபத்துக்கு உள்ளாகிஉள்ளார்.
அதனால் அவருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அதற்காக வேலணையில் உள்ள மருத்துவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று உள்ளார்.
அதனை அங்கு சிகிச்சை அளித்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் உட்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் அவர்களின் வாக்கு மூலங்களின் ஊடாகவும் அவற்றை உறுதிப் படுத்திக்கொள்ளலாம்.
தொலைபேசி அழைப்புக்களை விசாரிக்க வேண்டும். 
அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களின் தொலை பேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.அதன் மூலம் அவர்கள் தொலைபேசியில் உரையாடியதனை வைத்து அவர்கள் எந்த தொலைத்தொடர்பு கோபுர வலையத்தினுள் இருந்து உரையாடல்களை மேற்கொண்டார்கள் என்பதனை கண்டறிய முடியும்.
அதன் மூலம் அவர்கள் கொலை நடந்த நேரத்த்தை அண்மித்த நேரங்களில் எந்த பகுதியில் இருந்தார்கள் என்பதனை கண்டறிய முடியும்.எனவே தொலை பேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.
 
விசாரணைக்கு உத்தரவு. 
அதனை அடுத்து நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் மருதனார்மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமராவின் ஒளிப்பதிவு காட்சிகளை பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறும் , வேலணையில் சந்தேக நபர்களில் ஒருவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் சிகிச்சை நிலையத்தில் வைத்தியர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களின் வாக்கு மூலங்களை பெறுமாறும் உத்தரவு இட்டார்.
தொலைபேசி அழைப்புக்களை விசாரிக்கவும் உத்தரவு. 
அத்துடன் கடந்த 21ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான கால பகுதியில் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவு இட்டார்.
கர்ப்பிணி பெண் படுகொலை.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ம் திகதி ஒரு பிள்ளையின் தாயான 7 மாத கர்ப்பிணி பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் இருவர் கைது. 
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல் நிலைய சோதனை சாவடியில் வைத்து , முச்சக்கர வண்டியில் வந்த இருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அதில் ஒருவரின் ஆடையில் இரத்த கறையும் காணப்பட்டது.
விளக்க மறியலில் வைக்க உத்தரவு. 
அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மறுநாள் 25ம் திகதி இரு சந்தேக நபர்களையும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் முற்படுத்தினர். அதனை தொடர்ந்து நீதிவான் இருவரையும் எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
கண்கண்ட சாட்சியம். 
 
இதேவேளை  குறித்த படுகொலை சம்பவத்தினை கண்ணால் கண்ட சாட்சியமாக வாய் பேச முடியாத எட்டு வயது சிறுவன் ஒருவன் உள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு. 
அதனை அடுத்து 8ம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதிவான் உத்தரவு இட்டு இருந்தார்.
சாட்சியத்திற்கு அச்சுறுத்தல். 
 
அதன் பின்னர் கடந்த 27ம் திகதி குறித்த வழக்கின் கண் கண்ட சாட்சியமான எட்டு வயது சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சாட்சியத்திற்கு காவல்துறை பாதுகாப்பு. 
அதனை அடுத்து அன்றைய தினம் பதில் நீதிவான் இ.சபேசன் சாட்சியமான சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு இட்டு இருந்தார்.
இந்நிலையிலையே இன்றைய தினம் கர்ப்பிணி பெண் படுகொலைக்கும் கைது செய்து தடுத்து வைக்கபப்ட்டு உள்ள சந்தேக நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றில் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி விண்ணப்பம் செய்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.