இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

வடகிழக்குக்கு வெளியே வாழும் 16 இலட்சம் தமிழ் மக்களின் 10 இலட்சம் வாக்குகள் எங்களுக்கு உரித்தானது – மனோ கணேசன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி அவர்களே, கிமு 543ல் விஜயன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தார். மலையக மக்கள் 1823லிருந்து இந்நாட்டுக்கு   வரத்தொடங்கினார்கள். ஆகவே, ஜனாதிபதி அவர்களே, எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் இங்கே வந்துள்ளோம்.

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய நிலப்பரப்பில் இருந்து இங்கே வந்துள்ளோம். இப்படி வந்து இந்நாட்டில் இன்று வாழும் 16 இலட்சம் மலையக தமிழர்களில், சுமார் 6 இலட்சம் பேர் தோட்டங்களில் வாழ்கிறார்கள். இரண்டு இலட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமாக இம்மக்கள் தோட்டங்களில் வாழ்கிறார்கள். இவ்விதம் வடகிழக்குக்கு வெளியே வாழும் 16  இலட்சம் தமிழ் மக்களின் 10  இலட்சம் வாக்குகள் எங்களுக்கு உரித்தானது. இது எங்கள் கோட்டை. இங்கே எவரும் இனி எம்மை அசைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  தலவாக்கலையில் நடைபெற்ற மலையக மக்களுக்கான, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டபூர்வ காணி-வீடு உறுதி வழங்கல் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சிங்கள மொழியில்  மேலும் கூறியதாவது,

இந்நாட்டின் தேசிய மனித அபிவிருத்தி புள்ளிவிபரங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கின்றன. ஆனால் தோட்ட மக்களின் வளர்ச்சி விகிதம் மாத்திரம் பின்தங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், போஷாக்குசிசு மரணம், வீடமைப்பு, காணியுரிமை ஆகிய துறைகளில் இந்த பின்தங்கிய நிலைமைகள் காணப்படுகின்றன.

இதில் மிக முக்கியமான வீடமைப்பு, காணியுரிமை தொடர்பில் ஒரு வரலாற்று மைல் கல்லை நாட்டவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி. இன்று இங்கே கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவினது சட்ட உரிமை கொண்ட காணியுறுதி பத்திரம் வழங்கப்படுகின்றது. அதை நினைவுகூறும் முகமாக ஒரு முத்திரையும் வெளியிடப்படுகிறது.  இதுவே இங்கே வரலாற்று மைல்கல். இதுவே எம் அரசாங்கத்தின் வெற்றி. இதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி.

தம்பி திகா காணி உறுதி  வழங்கி வீடு கட்டுகிறார். அண்ணன் ராதா கல்வி கண்ணை திறக்க பாடசாலை கட்டுகிறார். நான் தேசிய தலைமையை வழங்கி, தேசிய நீரோட்டத்தில் எமக்குரிய பங்கையும், அந்தஸ்த்தையும் உறுதி செய்கிறேன். எங்கள் மக்கள் பணிகளை பிரித்துக்கொண்டு நாம் ஒற்றுமையாக செயற்படுகிறோம்.

1978ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை சுமார் 40 ஆண்டுகள், மாறி மாறி வந்த அனைத்து பச்சை, நீலம் என்ற எல்லா அரசுகளிலும் பங்காளியாக இருந்த கட்சியல்ல, எமது கூட்டணி. நாம் 2015 ஆகஸ்ட் தேர்தலுக்கு பிறகே ஆட்சியில்  முழுமையான பங்காளி ஆனோம். எனவே எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின்  காலம் ஆக, ஒன்றரை வருடம்தான். இதற்குள்தான் இத்தனையும் அமைதியாக படிப்படியாக செய்து வருகிறோம்.  இதை மலையக மக்களும், நாட்டு மக்களும் புரிந்துக்கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் நாம் உருவாக்கிய எங்கள் ஜனாதிபதி. மத்தியமேல், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் நாம் உங்களுக்கு வாக்கு வாங்கி கொடுத்துள்ளோம். அந்த உரிமையுடன்தான் இன்று நாம் உங்களுடன் உறவாடுகிறோம். தேர்தலின் போதுமகிந்தவுக்கு வால்  பிடித்துவிட்டு, இப்போது ஓடோடி வந்து உங்கள் காலடியில் நாம் விழவில்லை. இதையும் உங்கள் கவனத்துக்கு நாம் கூறி வைக்கிறோம்.

மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் – மனோ கணேசன்

மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கவனிப்பது போல் பல்வேறு உரிமை பிரச்சினைகளின் அடிப்படையில் வாழ்கின்ற மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியால் நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி பதுளை, இரத்தினபுரி, கண்டி என பரவலாக மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள மனோ கணேசன் இதற்கமைவாக எதிர்காலத்தில் மலையக மக்களுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இந்த அரசாங்கத்தின் ஊடாக செயல்ப்படுத்தப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers