இலங்கை கட்டுரைகள்

புதிய அரசியலமைப்பும் வடக்கு கிழக்கின் வெளிப்பாடுகளும்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறுகின்றது. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்புடுமா என்பதே தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்ற சந்தேகம் ஆகும். இலங்கை அரச தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துக்களே இந்த சந்தேகத்தை உருவாக்குகின்ற என்பதும் இங்கே முக்கியமானதாகும்.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு குறித்த கருத்தறியும் அமர்வை வடக்கு கிழக்கில் நடத்தியபோது இணைந்த வடக்கு கிழக்கில் தன்னாட்சி உரிமை வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு மாநிலத்திற்கு தமிழீழம் என பெயரிட வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தினார்கள். அரசியலமைப்பு கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கையிலும் நல்லிக்கணப் பொறிமுறைக்கான செயலணியின் அமர்வுகளிலும் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தன்னாட்சி உரிமை வேண்டும் என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பாடசாலை இல்லம் ஒன்று வடக்கு கிழக்கு வரைபடத்தை தமது இல்லத்தின் முகப்பாக வரைந்திருந்தனர். அதனை தமிழீழம் என்று எடுத்துக்கொள்வதும் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்று எடுத்துக் கொள்வதும் இலங்கை அரசாங்கத்தையும் அரச படைகளையும் பொறுத்தது. ஆனால் தமிழ் மக்கள் தாம் வாழும் நிலத்தின் வரைபடத்தைக் குறித்திருக்கிற உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கை  அரசின் இன ஒடுக்குமுறைகளைக் கண்டும், அவ் அரசின் இன அழிப்புச் செயல்களைக் கண்டும் தனி நாடு கோரி ஈழத் தமிழ் மக்கள் போராடினார்கள். இந்தப் போராட்டத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் இன அழிப்பை ஆயுதமாக வைத்தே இலங்கை அரசு ஒடுக்கியது. ஆனாலும் மாபெரும் இனப் படுகொலைகளின் பின்னரும் தமிழ் மக்கள் தமக்கான உரிமையையும் தமது தேசத்தை பாதுகாக்கும் அவசியத்தையும் பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.  தனிநாடு கேட்ட தமிழ் மக்கள்  இன்று விட்டுக் கொடுப்புக்களுடன் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியை கோருகின்றனர்.
ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்தினால் மீண்டும் முரண்பாட்டிற்கே வழி வகுக்கும் என்றும் வடக்கு கிழக்கில் நடத்திய கலந்துரையாடல்களில் அனைத்து தமிழ் மக்களும் தன்னாட்சியையே  வலியுறுத்தியதாகவும் மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார். ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றும்  சர்வஜன வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறியதும் கவனிக்கத் தக்கது.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இலங்கைத் தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு காட்டும் வரைபடம் சர்வஜன வாக்களிப்பிலும் தமிழ் மக்கள் தமது முடிவை தாயக வரைபடத்தின் ஊடாக வெளிப்படுத்துவார்கள். இலங்கை அரசு சமஷ்டியை நிராகரித்தால் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பாடசாலை சிறுவர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பை தமது இல்லத்தின் முகப்பாக  அமைத்துக் கொண்டனர். மாவீரர் துயிலும் இல்லங்கள் என்பது ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு தொன்மங்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கை அரசு முழுமையாக விடுவிக்க வேண்டும். கடந்த மாவீரர் நாளின்போது இலங்கை அரசு மாவீரர் நாளைக் கொண்டாடத் தடுக்கவில்லை. தமிழ் மக்கள் அதனை வரவேற்றனர்.
ஆனால் ஒரு சில துயிலும் இல்லங்களே விடுவிக்கப்பட்டன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தை மக்கள் துப்புரவாக்கி, விளக்கேற்றிய நிலையில், மீண்டும் அங்கு ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை புனித நினைவிடங்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏக கோரிக்கையாகும். இதனை கடந்த மாவீரர் தின நிகழ்வுகளே உலகிற்கு உணர்த்தியது.
விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து உள்ள நிலையில் ஏனைய மாவீரர் துயிலும் இல்லங்களையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும். ஒரு சில துயிலும் இல்லங்களை விடுவித்து சர்வதேச  நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கொள்ள இலங்கை அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் ஈழ மக்களிடம் உண்டு. அத்துடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் ஊடாக பிரதேச சபைகளின் கீழ் அவற்றை நினைவிடமாக கொள்ள வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை மக்களிடம் கையளித்து அவற்றை புனித இடங்களாக கருத வேண்டும் என்றும்அரசியலமைப்பு கருத்தறியும் அமர்வில் தமிழ் மக்கள் தெரிவித்தனர். இதனை புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளுமா? அதனை தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வலியுறுத்தியும் வெளிப்படுத்தியும் வரும் நிலையில் கல்லறைகளுடன் நல்லிணக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் முன்வருமா?
ஈழத் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சித் தீர்வை வலியுறுத்தி வாக்களித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த தீர்வு முயற்சிகளில் பின்வாங்கப் போவதில்லை என்று கூறுகிறது. மாபெரும் இனப்படுகொலையின் பின்னர்,  தொடரும் இன ஒடுக்குமுறைச் சூழலில், தமிழ் மக்களின் அபிலாசைகளை அங்கீகரித்து இத் தீவில் அமைதியை இலங்கை அரசு நிறுவுமா அல்லது? தமிழ் மக்களை வேறு தீர்வுகளுக்கு நிர்பந்திக்குமா?
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers