இலங்கை பிரதான செய்திகள்

தாய்நிலத்துக்கான மக்களின் குரலோடு அனைவரும் இணைவோம்:- தமிழ் மக்கள் பேரவை


சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு  மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு , இடைத்தங்கல் முகாம்களை மூடி,  மக்களை சொந்த  இடங்களுக்கு மீள அனுப்புவதாக  முன்னைய அரசாங்கம் ஐ.நா. மன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பாவனை செய்தே,  சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றி இடைத்தங்கல் முகாம்களில் இருந்த இந்த மக்களை, அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பாது,  கேப்பாப்பிலவு காடுகளில் ஒரு மாதிரிக்கிராமத்தை அமைத்து (அந்த காட்டுப்பகுதிக்கு போலியாக கேப்பாப்பிலவு என பெயர் சூட்டி) குடியமர்த்தியிருந்தது.

சர்வதேசத்தையும் மக்களையும் போலியான நடவடிக்கைகள் மூலம் ஏமாற்றும் முன்னைய ஆட்சியாளர்களின் அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே, இந்த அரசும் மக்களை அவர்களது சொந்த இடத்துக்கு மீள அனுப்பாது, அவர்களின் நிலங்களை இராணுவம் மூலம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தம் தாய் நிலத்துக்காக இந்த மக்கள் எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி 2012 இலிருந்து எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் போலி வாக்குறுதிகளுக்கும் மத்தியிலும் போராடி வருகின்றார்கள். இம்மக்களின்  அறப்போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

பனியிலும் வெயிலிலும் கடும் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் தமது நிலம் தமக்கே வேண்டும் என்ற  ஓர்மத்துடன் போராடி வருகின்ற இந்த மக்கள் போராட்டத்துடன் தமிழ் மக்கள் பேரவையும் கைகோர்ப்பதோடு, நீதியிலும் மனித உரிமையிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து மக்களையும்  இன,மத, பிரதேச வேறுபாடின்றி  நீதிக்காக போராடும் மக்களின் குரலுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

ஒரு தனிப்பட்ட பிரதேசத்தின் நிலத்துக்கான பிரச்சினை என்கிற பரிணாமத்தை தாண்டி  ஒட்டுமொத்த நில ஆக்கிரமிப்புகளுக்கெதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு குறியீட்டு வடிவமாக இன்று இது உருக்கொண்டுள்ளது.

எவரிலும் தங்கியிராது,  தமது நியாயமான இலக்கில் எந்தவித விட்டுக்கொடுப்பின்றி தமது பிரச்சினைக்கு மக்கள் தாமாகவே அணிதிரண்டு குரலெழுப்ப முன்வந்திருப்பது  எமது இனம் கடந்து வந்த பயணத்தில் மிக முக்கியமானதொரு அம்சமாகும். மக்கள் மயப்படுத்தப்பட்ட அறப்போராட்டங்களின்  நம்பிக்கை தருகின்ற ஒரு முன்னோடிச்செயற்பாடாகவே தமிழ் மக்கள் பேரவை இதனைப் பார்க்கின்றது.

மக்கள் விழிப்புணர்வுடன் தமக்கான குரலை தாமே எழுப்ப முன்வரவேண்டும் என்பதிலும்  விழிப்புணர்வு கொண்ட மக்கள் அணிதிரள்வுகளே எமக்கான நீதிக்கான பாதையை திறக்கும் என்பதிலும் தமிழ் மக்கள் பேரவை திடமான நம்பிக்கை கொண்டுள்ளதோடு ஆரம்பம் தொட்டு அதனை வலியுறுத்தியும் வருகின்றது.

இனமொன்றின் இருப்பை தீர்மானிக்கின்ற முக்கிய அம்சமாகிய  நில அடையாளத்தை சிதைப்பதற்கு எதிரான இப்படியான உரிமைக்குரல்களையும்   காணாமல் போகச்செய்யப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கான நீதிக்கான குரல்களையும்   எமது அரசியல் அபிலாசைகளுக்கான குரல்களையும்  தனித்தனியான பிரச்சினைகளுக்கான குரல்களாக  அல்லாது எம்மீதான தொடர்ச்சியான இன அழிப்புக்கெதிரான  ஒரு கூட்டுக்குரலாகவே சர்வதேச நாடுகள் கருதவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை வேண்டுகிறது.

வடமாகாணத்தில் மட்டும் ஏறத்தாழ 66,000 ஏக்கர் நிலம் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கையில், ஊடக வெளிச்சத்துக்குள்ளும் சர்வதேச கவனத்திற்குள்ளும் வந்துள்ள  குடாநாட்டின் சில நிலப்பகுதிகளை மட்டும் தெட்டம் தெட்டமாக விடுவித்து அதனை தமது பெரும் அடைவாக காட்ட நினைக்கும்  தொடர்ச்சியான சிறிலங்கா அரசுகளின் போலியான நடவடிக்கைகளை  சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை கோருகிறது.

சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்றி எமது மக்களுக்கான நீதியான தீர்வு கிடைக்கப்போவதில்லை  என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில்  எமது மக்கள் தமது சொந்த நிலத்துக்கு திரும்புவதற்கான  அழுத்தங்களையும் வழிமுறைகளையும் சர்வதேச நாடுகளும் ஐ.நா. மனித உரிமைப்பேரவையும் துரிதப்படுத்தவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொள்கிறது.

அத்தோடு , எம்மீதான ஆக்கிரமிப்பிற்கெதிரான ஒரு குறியீடாகவும் சுயமுனைப்பில் மக்களால் முன்னெடுக்கப்படும் முக்கியமானதொரு போராட்டமாகவும் பரிணமித்துள்ள  புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்திற்கு  எமது மக்கள் அனைவரும் தாயக பகுதியெங்கும் ஒன்றுதிரண்டு ஒருசேர ஆதரவளித்து மக்களின் குரலுக்கு உரம் சேர்க்கவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை வேண்டுகிறது.

தமிழ் மக்கள் பேரவை
16-02-17

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.