கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பவதிகள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்றையதினம் (18/02/017) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதை உணர்ந்துகொண்டு மக்கள் கூடும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேரூந்துப் பயணங்கள், புகையிரதப் பயணங்களை தவிர்ப்பதாலும், இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தலை தவிர்ப்பதனாலும், கர்ப்பவதிகளை இந்த நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாதாரண வைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த H1N1 வைரசுக்காய்ச்சலினை வேறு பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக்கண்காணிப்புமே H1N1 வைரசுக்காய்ச்சலினை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவசியமாகும்.
எனவே எந்தவொரு கர்ப்பவதிக்கோ அல்லது பிரசவித்ததாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின், உடனடியாக –காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே- அவர் அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கார்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடவும். அங்கிருந்து மாவட்ட பொதுமருத்துவமனைக்கு உங்களை பாதுகாப்பாகவும் உடனடியாகவும் அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நோயின்அறிகுறிகள்
சளிக்காய்ச்சல், தடிமன், தொண்டைப்புண், சளி, தலையிடி, உடல்நோ அதிகூடிய காய்ச்சல், மூச்சுவிடமுடியாமை, நெஞ்சுநோ, மறதிக்குணம், நெஞ்சுப்படபடப்பு, வலிப்பு,வயிற்றோட்டம். போன்ற அறிகுறிகள் காணப்படும் எனவே தற்போதைய சூழலில் அலட்சியமாக இருந்து விடாது உடனடியாக உரிய சிகிசையை பெற்று உயிராபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனர்.
Add Comment