இலங்கை பிரதான செய்திகள்

மக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காத வடமாகாண சபை – போராடுவதே வேலையா போச்சு என்கிறார் அவைத்தலைவர்


வடமாகாண மக்களின் போராட்டங்கள் தொடர்பில் எந்த ஒரு விடயமும் வடமாகாண சபையில் இன்றைய தினம் பிரஸ்தாபிக்க படவில்லை.

வடமாகாண சபையின் 85 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

அதில் முன்னதாக வடமாகாண குடிநீர் பிரச்சனை தொடர்பான விசேட அமர்வு ஒன்றினை நாளைய தின நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சருக்கு திடீர் உடநல குறைவு ஏற்பட்டு தற்போது கொழும்பில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றார்.

விவசாய அமைச்சர் தற்சமயம் நாட்டில் இல்லை. எனவே நாளைய அமர்வினை பிற்போடுவோம் என சபையில் கருத்து முன் வைக்கப்பட்டது. அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கடுமையான ஆட்சேபனைகளை முன் வைத்து கருத்துக்களை முன் வைத்தனர்.

அதன் போது முதலமைச்சரையும் , விவசாய அமைச்சரையும் கருத்துக்களால் தாக்கவும் அவர்கள் பின் நிற்கவில்லை. கடுமையான வாத பிரதி வாதங்களுக்கு பின்னர் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பின்னர் ஒரு முடிவுக்கு வந்து, எதிர்வரும் மார்ச் மாதம் 7 ம் திகதி குறித்த விசேட அமர்வை நடாத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் மாகாண சபைக்கு வரும் நிதி திரும்புகின்றதா,  இல்லையா என 30 நிமிடம் உறுப்பினர்களுக்கு இடையில் வாத பிரதிவாதம் இடம்பெற்றது. அது ஒருவாறு முடிவுக்கு கொண்டு வந்து தேநீர் இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் சபை மீண்டும் ஆரம்பமானது அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி வடமாகணத்தில் உள்ள கள்ளு தவறணைக்கு வருடாந்திர அனுமதி பத்திரம் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதாகவும்,  அவற்றை பரிசீலித்து சிபாரிசு செய்ய குழு நியமிக்க வேண்டும் என பிரேரணை ஒன்றினை முன் வைத்தார்.

அதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் கள்ளு தவறணையை முன்னேற்ற வேண்டும். பனை , தென்னை ஏறுவதற்கு நவீன இயந்திரங்கள் வந்துள்ளன அவற்றை வடமாகாண தொழிலாளிகளும் பயன்படுத்த வேண்டும் என கள்ளு உற்பத்தியை அதிகரித்து தொழிலாளிகளின் வாழ்கையை முன்னேற்றுவது தொடர்பில் பல கருத்துக்களை முன் வைத்தனர்.

அதற்காக சுமார் ஒரு மணித்தியாலங்கள் செலவு செய்தனர். அதனை தொடர்ந்து 30நிமிடங்களுக்குள் 4 பிரேரணைகளை முன் மொழியப்பட்டது.அதனை சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து சபை அமர்வினை மதியம் 2மணியுடன்  எதிர்வரும் 9ம்  திகதிக்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

சபை அமர்வு நிறைவுக்கு வரும் வேளை ஆளும் கட்சி உறுப்பினர் தியாகராஜா ‘இன்றைக்கு நான் சபைக்கு வரும் போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடாத்தி வருவதனை கண்ணுற்று அவர்களுடன் சென்று கதைத்தேன். அதன் போது அவர்கள் , எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வரையில் மாகாண சபை உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொள்ளும் போது கறுப்பு ஆடையுடன் கலந்து கொள்ளுங்கள் ‘ என கேட்டு இருந்தனர். இதனை இந்த சபையின் கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன் என தெரிவித்தார்.

அதன் போது பதிலளித்த அவைத்தலைவர் ‘இப்ப போராடுவது ஒரு வேலையா போச்சு ‘ கறுப்பு ஆடை அணிவது தொடர்பில் அடுத்த அமர்வில் தீர்மானிப்போம் என கூறி சபையினை ஒத்தி வைத்தார்.

வடமாகணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 31ம் திகதி முதலாக 22 நாட்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

அதேபோன்று புதுக்குடியிருப்பு மக்களும் தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிபாஞ்சன் மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காணமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு போதிய அழுத்தம் கொடுக்காமையே போராட்டம் நீண்டு செல்வதற்கு காரணம் என பரவிபாஞ்சான் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ள நிலையிலையே இன்றைய தினம் வடமாகாண சபையில் மக்கள் போராட்டம் தொடர்பில் எவரும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers