Home இலங்கை இயற்கை விவசாயத்துக்குரிய இடுபொருட்களை உற்பத்தி செய்யும் கிறீன் விஸ்வா நிறுவனம் சங்கானையில் திறந்துவைப்பு:-

இயற்கை விவசாயத்துக்குரிய இடுபொருட்களை உற்பத்தி செய்யும் கிறீன் விஸ்வா நிறுவனம் சங்கானையில் திறந்துவைப்பு:-

by admin

இயற்கை விவசாயத்துக்குரிய இடுபொருட்களை உற்பத்தி செய்யும் கிறீன் விஸ்வா என்ற நிறுவனம் நேற்று வியாழக்கிழமை (02.03.2017) சங்கானையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டின் 24 மில்லியன் ரூபா நிதி உதவியில் ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தால் அதிகரித்துவரும் சனத்தொகைக்கு உணவு படைக்க முடியாதென்று விவசாய இரசாயனங்களை உற்பத்தி செய்துவரும் பன்னாட்டு நிறுவனங்களும், கலப்பின விதைகளுக்கும் மரபணுமாற்று விதைகளுக்கும் காப்புரிமை பெற்றுவைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் பரப்புரை செய்து வருகின்றன. ஆனால், கியூபா ஏற்கனவே இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்துகாட்டியுள்ளது. இந்தியாவில் சீக்கிம் மாநிலம் முற்றுமுழுதாகச் சேதன விவசாயத்துக்குத் திரும்பியிருக்கிறது. கோவா மாநிலமும் ராஜஸ்தான் மாநிலமும் சேதன விவசாயத்துக்கென மிக அதிகளவு நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளன. எங்களது விவசாயிகளும் இயற்கை விவசாயம் மேற்கொள்ள முன்வர வேண்டும். ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையானோர் இயற்கைவழி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்து இலங்கையில் இயற்கை விவசாயத்தில் வடமாகாணம் முன்னிலை என்ற இலக்கை எட்ட வேண்டும் என இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பூச்சி கொல்லி இரசாயனங்கள் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் பூச்சிகளை மாத்திரம் அழிக்கவில்லை. இயற்கையாகவே பீடைகளைக் கட்டுப்படுத்தி உழவர்க்கு நன்மை செய்து வரும் சிலந்திகளையும், மகரந்தசேர்க்கையை ஏற்படுத்தும் பூச்சிகளையும் அழித்து வருகின்றன. நன்மைதரும் பூச்சிகள் அழிந்துவரும் அதேநேரம் பீடைப்பூச்சிகள் இரசாயனங்களால் பாதிக்கப்படாதவாறு மேலும் மேலும் விஸ்வரூபம் பெற்று வருகின்றன.


விவசாய இரசாயனங்களின் பாவனையால் மண் நுண்ணங்கிகள் இறந்து மண் மலடாகி உள்ளது. மண் நுண்ணங்கிகள் இல்லாததால் உக்குதல் தடைப்பட்டுக் கனிப்பொருட்களின் சுழற்சி இல்லாமல் போகிறது. இதனால் விவசாயி மேன்மேலும் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தும் அளவு அதிகரித்துச் செல்கிறது. ஆனால் எவ்வளவுதான் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தினாலும் அதிக உற்பத்தியைப் பெற முடியவில்லை. இந்தக் காரணங்களினால்தான் விவசாயம் இன்று விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக மாறியுள்ளது. வங்கிக்கடன் சுமையால் எமது விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இரசாயனங்களை நம்பிய விவசாயம் உழவர்களை மட்டும் பாதிக்கவில்லை. நுகர்வோர் அனைவரினதும் பிரச்சினையாக மாறியுள்ளது. விவசாய இரசாயனங்கள் நிலத்தடி நீரை நச்சுப்படுத்தி வருகின்றன. விவசாய இரசாயனங்கள் உணவின் மூலம் எமது உடலின் உள்ளே குவிந்து வருகின்றன. நாம் இன்று அனுபவித்து வரும் புதிய புதிய நோய்களுக்கு உணவின் சத்துக்குறைபாட்டைவிட உணவில் அதிகமாக ஊறிப்போயிருக்கும் நச்சு இரசாயனங்களே காரணமாகும். இந்தப் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளும் உலகமும் மீண்டெழுவதற்கு இயற்கை வழி விவசாயத்துக்கு திரும்புவது காலத்தின் கட்டாயம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கனடாவின் இலங்கை அபிவிருத்தித் திட்டத்துக்கான பணிப்பாளர் குளோறியா வைஸ்மன், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளர் இரா.கணேசராஜா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், பேராசிரியர் கு.மிகுந்தன், விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி, வலிமேற்கு பிரதேச செயலர் அ.சோதிநாதன், வலி தென்மேற்கு பிரதேச செயலர் உ.யசோதா ஆகியோரும் விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More