இலங்கை பிரதான செய்திகள்

முப்படையினர் மீது குற்றப் பத்திரிகை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கு தயாரில்லை – ஜனாதிபதி


வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று பலாலி விமானப் படை முகாமில் அவதானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் முப்படையினரையும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சந்தித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த ஆலோசனையை தான் முற்றாக நிராகரித்ததாக தெரிவித்த ஜனாதிபதி;, தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கௌவரத்திற்காக தனது பதவிக்காலத்தில் பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

நிதி நோக்கோடு செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும், தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் எதிர்தரப்பு அரசியல் சக்திகளும் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும் நாட்டின் படையினரின் பிரதான பாதுகாவலன் தானே என தெரிவித்த ஜனாதிபதி படையினரின் கௌவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் தனது பதவிக் காலத்தில் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை என்ற ஜனாதிபதியின் கருத்துக் குறித்து ஆச்சரியப்பட எதுவும் இல்லை! 2009 ம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போரை வழிநடாத்தியவர்களான இவர்களால், எப்படி ஆயுதப்படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்? மேலும், படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிவு ஜனாதிபதிக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதும் உண்மையே! தான் சோடை போகக்கூடாது என்பதற்காக ஜனாதிபதி எதையெதையெல்லாமோ நாளாந்தம் கூறி வருகின்றார்!

    போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளச் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளை தான் என்றைக்கும் அனுமதிக்கப் போவதில்லை என்று அண்மையில் கூறிய ஜனாதிபதி, அதற்காகக் கூறிய காரணங்களில் ஒன்று, எமது நீதிபதிகளும் சர்வதேச தரத்துக்கமையத் திறமையானவர்கள் என்பதுதான்! உண்மைதான்! அவற்றை யாரும் மறுக்கவில்லையே? எமது நீதிபதிகள் திறமையற்றவர்கள் என்றோ, அவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே? பாதிப்புக்குள்ளான தமிழர்களும், சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களும் கூறும் காரணமெல்லாம், ‘இலங்கையில் போரை நடத்திய ஆட்சியாளர்களுக்கும், போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான படையினருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கு எதிரான விசாரணைகளை ஆட்சியாளர்கள் நியாயமாக நடத்தப் போவதில்லை, என்பதே! பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சுயாதீனமாகவே இயங்குகின்றனவென்று ஆட்சியாளர்களால் நிரூபிக்க முடியுமா? பாதுகாப்புத் தரப்பினரால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் நியாயமாக நடத்தப்பட்டதென யாராலும் கூற முடியாது! பல வழக்குகள் இன்னமும் நிலுவையிலேயே இருக்கின்ற அதே வேளை, சந்தேகக் குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது,’வெந்த புண்ணில் வேல் பாச்சுவதற்கு ஒப்பானது.

    எல்லாவற்றும் மேலாக, ‘இலங்கையில் காணப்படும் சட்டதிட்டங்களுக்கமைய போர்க் குற்ற விசாரணைகளை நடத்த முடியாது’, என்ற வாதம், போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து விவாதப் பொருளாகக் காணப்பட்ட நிலையில், இன்று வரை அதற்கான சட்டத்திருத்தமெதனையும் மேற்கொள்ளாத இந்த அரசு, எந்த அடிப்படையில், எப்பொழுது இந்த விசாரணைகளைத் தொடங்கப் போகின்றது? குறைந்த பட்சம் இன்று வரை சட்டத்திருத்தம் எதனையும் செய்யாத அரசு, ஐ. நாவில் காலநீடிப்புக் கேட்கின்றது?

    திட்டமிட்டுப் போர்க்குற்றம் புரிந்த சில அரச அதிகாரிகளுக்கும், படையினருக்கும் எதிராகத்தான் விசாரணையைக் கோருகின்றோம்? ஒட்டுமொத்த படைவீரர்களையும் நாம் குற்றவாளிகளாகப் பார்க்கவில்லையே? தனது ஒருதரப்பு மக்களுக்கு நேர்ந்த அநீதிக்கெதிராக நியாயத்தை வழங்க முன்வராத இந்த அரசு, தன்னை, ‘நல்லாட்சி அரசு’, என்று எப்படித் கூறுகின்றதோ தெரியவில்லை?

    மனச்சுத்தி, நீதி, நேர்மை என்றெல்லாம் பேசும் ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேன அவர்கள், தமிழர்களுக்கு அப்பட்டமாகத் துரோகமிழைக்கின்றார், என்பதை மறுக்க முடியாது! ஆகத் தமிழர்கள் இவரை, ‘ஒரு கையாலாகாத ஜனாதிபதியாகவே பார்க்கின்றார்கள்’, என்பதைச் சொல்லவும் வேண்டுமா?