இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

புதிய அரசியலமைப்பில் தமிழர் கோரிக்கைக்கு இடமுண்டா? தீபச்செல்வன்

(ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பான அரச உத்தியோகத்தர்களுடான கலந்துரையாடலில் பதிவு செய்த கருத்துக்கள்) 

இன்று கிளிநொச்சியில், ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு தமது அறிக்கையை முன்வைத்து கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளர் வின்சன் பத்திராஜா, உறுப்பினர் எஸ். இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மேகலை மதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரச உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் மற்றும் கேள்விகள் என்பனவும் முன்வைக்கப்பட்டன.
இலங்கையில் பௌத்தம், சிங்கள இனம், சிங்கள மொழி என்பவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவங்கள் காரணமாகவே இன, மத, மொழி ஒடுக்குமுறைகள் ஏற்பட்டன என தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதில் அளித்த உறுப்பினர் இளங்கோவன், உணர்ச்சி அடிப்படையில் அக் கருத்து இடம்பெறுவதாக கூறினார். எனக்கு கருத்து தெரிவிக்க கிடைத்த சந்தர்பத்தின்போது, அதனை நிராகரித்து கருத்தை பதிவு செய்தேன். இலங்கைத் தீவில் நடந்த இனக் கொலைகளையும், மதவன்முறைகளையும், மொழி ஒடுக்குமுறைகளையும் உணர்ச்சி என்ற சொல்லை வைத்து நிராகரிக்க முடியாது. அவை நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகள். அதன் அடிப்படையிலிருந்தே புதிய அரசியலமைப்பு பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.
மக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளர் வின்சன் பத்திராஜா கூறுகையில் தெற்கில் பொதுபலசேனாவையும் வடக்கில் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனையும் ஒப்பிட்டு பேசினார். இருவரும் மத, இன வாத அடிப்படையில் செயற்படுவதாக குறிப்பிட்டார். இதுவே புதிய அரசியலமைப்பு இடைஞ்சல் என்றும் பேசினார். அதுவும் நிராகரிக்கப்படவேண்டியது என்ற என் கருத்தை தெரிவித்தேன்.
தெற்கில் காணப்படும் பொதுபலசேனா போன்ற மதவாத, இனவாத அமைப்பு வடக்கில் இல்லை. எங்கள் தலைவர்களை அப்படி ஒப்பிட முடியாது. ஏனெனில் பொதுபலசேனா  போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் எங்கள் தாயகத்தில் விகாரைகளை நிறுவ வேண்டும் என்கிறார்கள். நாங்கள், எங்களுடைய தலைவர்கள் எங்கள் மண்ணில் அவைகளை நிறுவி பண்பாட்டை அழிக்க  வேண்டாம் என்றே கேட்கிறோம். இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியாது என்றும் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன. அதற்கான வாய்ப்புக்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர். இது பற்றியும் எனது கருத்தை தெரிவித்தேன். புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் தன்னாட்சி உரிமையை வடக்கு கிழக்கு மக்கள் கோரியதை உங்கள் அறிக்கை முன்னிலைப்படுத்தியா? என்றும் அதனை முறையாக பதிவு செய்ய வேண்டியது உங்கள் கடமை என்றும் குறிப்பிட்டேன். அதற்கு பதில் அளித்த எஸ். இளங்கோவன், வடக்கு கிழக்கில் அநேகமானவர்கள் இதனை வலியுறுத்தியதாகவும் அதனை ஒரு பரிந்துரையாக தமது அறிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் உண்மையான நீதிமன்றம், சுயாதீனமான நீதிமன்றங்கள் இருந்திருந்தால், உண்மையான நீதியை எடுத்துரைக்கும், அரசியலாக கையாளாத நீதிமன்றங்கள் இருந்திருந்தால், தமிழ் மக்கள் இன்றைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நிலைக்கு சென்றிருக்கமாட்டார்கள் என்றும் புதிய அரசியலமைப்பில் உண்மையான, சுயாதீன தன்மை கொண்ட நீதிமன்றங்களுக்கான  ஏற்பாடுகள் உண்டா என்றும் என்னுடைய இரண்டாவது கேள்வியை பதிவு செய்தேன். சுயாதீன நீதித்துறைக்கான ஏற்பாடுகள் குறித்தும் அறிக்கையின் சரத்துக்கள் அமைந்திருப்பதாக இளங்கோவன் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் குறித்து ஏதும் தமது அறிக்கை குறிப்பிடவில்லை என்றும் அதனை தமது கருத்தறியும் அமர்வு அறிக்கையுடன் தொடர்புபடுத்த இயலாது என்றும் மேகலை மதன் பதில் அளித்தார். எனது கேள்வி அந்த அடிப்படையில் அமையவில்லை என்று அவருக்கு பதில் அளித்தேன். அத்துடன் இலங்கையின் அரசியலற்ற, உண்மையான, நீதியான நீதித்துறை இருந்திருந்தால் தமிழ் மக்கள் இனப்படுகொலைகள், இனவன்முறைகளை சந்திதத்தபோது அவை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அப்படி இல்லாமை காரணமாகவே முப்பது ஆண்டுகாலமாக நாங்கள் அழிக்கப்பட்டோம் என்பதையும் பதிவு செய்தேன்.
இதேவேளை, இதடன் சர்வதேச விசாரணையை தொடர்புபடுத்தவில்லை என்றும் குறிப்பிட்டேன். ஏனெனில் 2009இல் நடந்த இன அழிப்புச் செயல் இலங்கைக்குள் தீர்க்கும் விடயமல்ல. அது சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்க்கப்படவேண்டும். அதனை எமது மக்களும் தலைவர்களும் பல வழிகளில் வலியுறுத்தி வருகின்றனர் என்பதையும் மீண்டும் பதிவு செய்தேன். புதிய  அரசிலயமைப்பு எமது உரிமைகளை அங்கீகரிக்குமா? அவை எக்காலத்திற்கும் நம்பிக்கைக்குரியதா? போன்ற பல கேள்விகளை, விவாதத்தை அரச உத்தியோகத்தர்கள் நிகழ்த்தினர்.
பௌத்த மாதத்திற்கு முன்னிலை என்ற இலங்கை அரச தரப்பினரின் கருத்துக்கள் குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெற்கில் இருப்பதாக எஸ். இளங்கோவன் குறிப்பிட்டார். அரசியலமைப்பை மாற்ற இது உகந்த காலம் என்று வின்சன் பத்திராஜா கூறினார்.  தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு புதிய அரசியலமைப்பு எத்தகைய இடத்தை அளிக்கும் என்ற கலந்து கொண்டவர்கள் கேள்விகளுடன் இருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers