Home இலங்கை கூட்டமைப்பின் குழப்பம் – செல்வரட்னம் சிறிதரன்:-

கூட்டமைப்பின் குழப்பம் – செல்வரட்னம் சிறிதரன்:-

by admin
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 திர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டுமா இல்லையா என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள், விவாதமாகத் தொடங்கி இப்போது விவகாரமாக விஸ்வரூபமெடுத்திருக்கின்றது.
யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூற வேண்டும் என்பதை ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்தத் தீர்மானம் மிகத் தெளிவாக வரையறுத்து விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இந்தப் பிரேரணையை உள்ளது உள்ளவாறாக ஏற்று, அதன்படி செயற்படப் போவதாக உறுதியளித்து, அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதனையடுத்து, இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, மனித உரிமைப் பேரவையினால் அரசாங்கத்திற்கு  ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கால அவகாசம் ஒரு வருடத்தைக் கடந்து ஒன்றரை வருடமாகியது. ஆயினும் இந்தக் காலப்பகுதியில் ஆக்கபூர்வமான – ஆமோதித்து மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், திருப்திகரமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.
இந்தக் காலப்பகுதியில், ஐநா பிரேரணையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மந்தமான போக்கையே கடைப்பிடித்தது.  பிரேரணையில் கூறப்பட்டுள்ளவாறு, விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குகின்ற விடயத்தை உதாசீனப்படுத்தியது. தொடர்ந்து அதனை  உதறித்தள்ளியது.
சர்வதேச விசாரணையை கலப்பு நீதிவிசாரணை பொறிமுறையாக மனித உரிமைப் பேரவையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிகளின் முன்னிலையில் ஏற்றுக்கொண்டிருந்த அரசாங்கம் உள்நாட்டில் அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது மட்டுமல்லாமல், கலப்பு நீதிவிசாரணை பொறிமுறைக்கு இடமே இல்லை. முற்று முழுதாக உள்ளக விசாரணைகளையே நடத்துவோம். அதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. முடியுமானால் தடுத்துப் பார் என்ற சண்டித்தனப் போக்கில் முரண்பட்ட ஒரு நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தது.
இத்தகைய ஒரு நிலைமையில்தான் மனித உரிமைகள் பேரவையின் 2017 மார்ச் மாத அமர்வில் ஐநாவின் 30ஃ1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலும் 2 வருட கால அவகாசம் வேண்டும் என கோரியிருக்கின்றது. இராஜதந்திர நிலைப்பாட்டில், கௌரவமான ஒரு நடைமுறையாக அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதற்கு ஐநா மனித உரிமைப் பேரவை முன்வந்திருந்தது.
ஆனாலும், பிரேரணையை நிறைவேற்றுவதாக ஏற்று, இணை அனுசரணை வழங்கியிருந்த பின்னணியில், உள்நாட்டில் மனித உரிமை விடயத்தின் பல்வேறு அம்சங்களில் நிலவுகின்ற மோசமான நிலைமைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யது ராஅத் அல் ஹுசைன் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன் ஏற்றுக்கொண்டவாறு பேரவையின் பிரேரணையை, அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலிதான முறையில் வற்புறுத்தியிருக்கின்றார்.
இது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரினதும், ஐநா பேரவையினதும் நிலைப்பாடு. இதன் பின்னணியில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற தமிழர் தரப்பின் நிலைப்பாடு, அரசியல் ரீதியான நகைப்புக்கு உரியதாகவும், தீவிரமான அரசியல் சிந்தனை நிலைமையில் சீற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது.
தீர்வுகளை எட்ட வல்ல தலைமையைத் தேடும் அரசியல் பயணம்
கொடுங்கோல் ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த முன்னைய அரசாங்கத்தைத் தோற்கடித்து, ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிறுவுவதற்காக நாட்டு மக்களில் பெரும்பாலோனோர் ஆர்வம் கொண்டு செயற்பட்டதன் விளைவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் என பெயர் சூட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஆட்சி மலர்ந்தது. அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஒத்துழைத்திருந்தது.
இந்த நிபந்தனையற்ற ஆதரவும், ஒத்துழைப்பும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய எரியும் பிரச்சினைகளுக்கு முடிவு காண உதவும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலில் நம்பியது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் நம்பினார்கள். ஆனால், அரசாங்கம் மறைமுகமானதொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டு, தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
ஏனோதானோ என்ற வகையிலான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டன. பேச்சுக்களில் தேன் வழிந்தது. நடைமுறைகளில் வஞ்சகமான போக்கே வெளிப்பட்டு வருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளின் விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையிலானதோர் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றது என்பதை வெளிப்படுத்துவதற்குரிய நம்பகமான நல்லெண்ண சமிக்ஞையைக்கூட நல்லாட்சி அரசாங்கம் உரிய நேரங்களில் வெளிப்படுத்தவில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து அது தவறியிருக்கின்றது. அதனைத் தட்டிக்கழித்திருக்கின்றது.
இத்தகைய ஒரு நிலைமையில்தான் கண்துடைப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை, அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. பொறுமையாக இருங்கள். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகத் தென்னிலங்கையில் எழுந்துள்ள் தீவிரவாத அரசியல் போக்கிற்குத் துணை சேர்த்து, அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக சங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை பங்காளிக்கட்சிகளுக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் போதித்து வந்தது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றமில்லை. அரசியல் தீர்வுக்காகக் கொண்டுவரப்படவுள்ளதாகச் சொல்லப்பட்ட புதிய அரசியலமைப்பில் தீர்வு கிடைப்பதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர் தாயகப் பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையிலான சமஸ்டி ஆட்சிக்கான வழிமுறை என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி நிலைப்பாடுகளுக்கு முரணான வகையிலேயே அரசியல் தீர்வுக்கான ஆலோசனை முன்மொழிவுகளும், அரசாங்கத் தரப்பின் நிலைப்பாடுகளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய அழுத்தங்களை அரசாங்கத்திற்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அரசுக்கான நிபந்தனையற்ற ஆதரவை வலுப்படுத்திச் செல்கின்ற போக்கிலேயே தமிழ்த்ததேசிய கூட்டமைப்பின் கவனம் குவிந்திருந்தது. இன்னும் குவிந்திருக்கின்றது.
இதன் விளைவு மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைமை மீது நம்பிக்கை இழந்து தாங்களே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக வீதியில் இறங்கிப் போராடத் துணிந்தார்கள். வடக்கில் பல இடங்களில் மட்டுமல்லாமல், கிழக்கிலும் மக்கள் வீதியில் இறங்கி, வீதிகளிலேயே குடியிருந்து போராடி வருகின்றார்கள்.
இது, தமிழர் தரப்பைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட மக்களின் தீவிரமானதோர் அரசியல் நிலைப்பாடு. தூரநோக்கும், சாணக்கியமுமில்லாத மிதவாத அரசியல் போக்கின் மீதான சலிப்பின் வெளிப்பாடு.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளாமல் தடம் மாறிச் செல்கின்ற அரசியல் தலைமைக்கு விடுக்கப்படுகின்ற ஓர் அரசியல் ரீதியான எச்சரிக்கையின் அடையாளம். சாத்வீகம் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் பின்னரும் பிரச்சினைகளுக்குத் தந்திரோபாய ரீதியில் தீர்வு காணத்தக்கதோர் அரசியல் தலைமையைத் தேடத் தொடங்கியிருக்கின்ற ஓர் அரசியல் பயணத்தின் ஆரம்பமுமாகும்.
இதன் அடையாளமாகவே ஐநாவின் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான மேலதிகக் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும், கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டு இருகூர் நிலையில் மோதிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
கூட்டமைப்பின் இருவேறு நிலைப்பாடுகள்
தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் தலைமையாகக் குறிப்பிடப்படுகின்ற கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும், தமிழரசுக் கட்சியின் வெளிவிவகாரச் செயலாளருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா ஆகியோர், ஐநா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய துரைரட்னசிங்கம், சரவணபவன் ஆகியோரும் இதற்கு ஆதரவானவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.
கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர்கள் ஐவரையும் தவிர ஏனைய 11 பேரும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது எனக் கோரி ஐநா மனித உரிமை ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்கள். இந்தக் கடிதமே கூட்டமைப்புக்குள் சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தி விவகாரமாக மாறியிருக்கின்றது.
பிளவுபட்டுள்ள இரண்டு தரப்பினருமே ஐநாவின் பிரேரணையை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறதியான ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் அரசாங்கம் கோரியிருக்கின்ற கால அவகாசத்தைக் கொடுப்பதா இல்லையா என்பதிலேயே அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டிருக்கின்றது.
அரசாங்கம் சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக அரசாங்கம் கோருவதைப் போல, அதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் கடும் நிபந்தனையுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்காணித்து பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாடு.
ஆனால் போதிய அளவு கால அவகாசமும் சலுகைகளும் அரசாங்கத்திற்கு ஏற்கனவே வழங்கியாகிவிட்டது. ஆனால் முன்னேற்றத்தைக் காணவில்லை. ஆகவே அரசாங்கத்தை இனிமேலும் நம்பிப் பயனில்லை. அடுத்த கட்டமாக மனித உரிமை ஆணையாளர் இலங்கை விடயத்தை மனித உரிமைப் பேரவையின் பொதுச் சபைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் அல்லது போர்க்குற்றம் தொடர்பானதொரு தீர்ப்பாயத்தை உருவாக்கி அதில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நிலைப்பாடாகும்.
பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 4 பங்காளிக் கட்சிகளில் 3 கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இணைந்திருக்கின்றார்கள்.
மோதல்களும் காலத்தின் தேவையும்
கால அவகாசம் வழங்கக் கூடாது என்று ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கூட்டமைப்பின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கடிதம் எழுத முடியும்? யாரைக் கேட்டு அதனை அவர்கள் செய்தார்கள் என்று கூட்டமைப்பின் பேச்சாளராகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் பகிரங்கமாக வெகுண்டெழுந்;தார்.
இவ்வாறு கடிதம் எழுதுவது பற்றி தங்களுக்கு அவர்கள் ஏன் ஒன்றும் சொல்லவில்லை? சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ள தனக்குக்கூட அவர்கள் தெரிவிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டுமல்லாமல், ‘இவர்கள் என்ன தெரிந்து கையொப்பம் இட்டார்கள் எந்த முட்டாள் கால அவகாசம் வேண்டாம் எனச்சொல்லுவான். இவர்கள் அவ்வாறு ஏன் செய்தார்கள் எனத்தெரியவில்லை. எங்கள் உறுப்பினர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் அவர்களுக்கு இதன் தாற்பரியம் புரியுமா? இவ்வளவு நாட்களாகியும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உலக அறிவு தெரியவில்லையா?’ என்றும் அவர் வினவியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், இந்த கடித விவகாரம் குறித்து, கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆராயப்பட்டபோது, அதில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சுமந்திரன் மீண்டும் முட்டாள்கள் என விளித்ததையடுத்து, அங்கு காரசாரமான விவாதம் எழுந்திருந்தது.
அப்போது, அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கின்றது, அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயம் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து தனது மனச்சாட்சிக்கு ஏற்ற வகையிலேயே அதில் கையெழுத்திட்டிருந்ததாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்கத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கையெழுத்திட்டது குற்றம் என்று கருதினால், அதற்காகக் கட்சியில் இருந்து தன்னை நீக்கினாலும் நீக்குங்கள் அதற்காகத் தான் கவலைப்படப் போவதில்லை. தன்னைப்பொறுத்தமட்டில் சரியாகவே செயற்பட்டிருக்கிறேன் என்று உறுதிப்பட அவர் கூறினார்.
அதேவேளை, அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் கையெழுத்திடவில்லை என்று தங்களுக்குத் தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டியிருந்தது பற்றியும் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த மூவரில் ஒருவர் அவ்வாறு எவருக்கும் கூறவில்லை என அந்தக் கூட்டத்தில் தெரிவித்ததையடுத்து, சுமந்திரனின் அந்தக் குற்றச்சாட்டும் பிசுபிசுத்துப் போனது.
அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுப்பது குறித்து கருத்து வெளியிடுவதற்கு முன்னரே தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கூட்டத்தைக் கூட்டி கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இங்கு சுட்டிக்காட்டினார். அப்போது தலைவர் இரா.சம்பந்தன் தான் அரசுக்கு கால அவகாசம் கொடுப்பது தொடர்பில் அவசரப்பட்டு கருத்து வெளியிட்டது தவறு என்பதை ஏற்றுக் கொண்டார்.
அதேநேரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கனை முட்டாள்கள் என விளித்தமை பிழையான நடவடிக்கை என்பதை தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியதுடன், கூட்டமைப்புக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதற்காக ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில்; வெய்யில் காரணமாகப் புழுதியில் தோய்ந்தும், கொட்டும் மழையில் நனைந்தும், இராக்காலப் பனிப்பொழிவின் குளிரில் நடுங்கியும், உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
தமக்குச் சொந்தமான காணிகளில் அடாத்தாகக் குடியிருக்கின்ற இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றி தமது காணிகளில் தங்களைக் குடியேற்ற வேண்டும் என்று தொண்டையில் தண்ணீர் வற்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களையும், கையேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் அரசாங்கம் என்ன செய்தது, அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழுது அரற்றி அன்னம் தண்ணியின்றி ஒப்பாரி வைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு போராடுகின்ற மக்களுக்குச் சரியான அரசியல் தலைமையை வழங்கி அவர்களைச் சரியான முறையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருந்து கூட்டமைப்பின் தலைமை வழி தவறிச்சென்று கொண்டிருக்கின்றது.
அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு நன்மை பயக்கின்ற எல்லையைத் தொட்டதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து, அவர்களை உதாசீனம் செய்கின்ற அராசங்கத்தின் போக்கிற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை துணை போவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்படாகாது.
பாதிப்புகளுக்கு உள்ளாகி நீதியையும் நியாயத்தையும் எதிர்நோக்கி, காலம் கடந்த நிலையில், அதற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களுக்கு  பொறுப்பேற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இத்தகைய அரசியல் போக்கானது, ஒட்டு மொத்தமாகத் தமிழினத்தையே படுகுழிக்கு இழுத்துச் செல்வதற்கு ஒப்பானதாகவே அவதானிகளினால் கருதப்படுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் நிலையானது, மிகவும் ஓர் இக்கட்டான சூழலில் இப்போது சிக்கியிருக்கின்றது. இந்த நிலையில், அனுபவமும் ஆற்றலும், அரசியல் ஞானமும் பொருந்தியுள்ள தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் மக்களையும் தவறான வழியில் இட்டுச் சென்றிருந்தது என்ற எதிர்காலப் பழிச் சொல்லுக்கு இடமளிக்காத வகையில் அவர் செயற்பட வேண்டும்.
இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More