இலங்கை பிரதான செய்திகள்

சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமணனின் உடலில் 06 வெளிக்காயங்கள். 16 உள்காயங்கள்.

சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, சுமணன் எனும் இளைஞனின் உடலில் 06 வெளிகாயங்களும் 16 உள்காயங்களும் காணப்பட்டதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யபப்ட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் புதன் கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு எட்டு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது அதில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபப்ட்டு உள்ள 7 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் ஒரு சந்தேக நபருக்கு எதிராக மன்றினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின் போதே அவ்வாறு சாட்சியம் அளிக்கப்பட்டது. குறித்த வழக்கில் மேலும் சாட்சியங்கள் அளிக்கபடுகையில்,

குறித்த வழக்கின் 22 ஆவது சாட்சியமான உப காவல்துறை பரிசோதகர் ஜெயரட்ன சில்வா தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில்,

கடந்த 2011. 11. 26ம் திகதி இணுவில் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற காவல்துறை நடமாடும் சேவையில் கடமையாற்ற காலை சென்று இருந்தேன். கடமையை முடித்துக்கொண்டு மாலை 14.25 மணியளவில் காவல் நிலையம் திரும்பினேன்.

மாவீரர் நாளுக்காக ரோந்து பணி.

அன்றைய தினம் மாவீரர் நாளுக்கு முன்னைய நாள் என்பதனால் வீதி ரோந்து கடமைக்கு என காவல்துறை ஜீப் ரக வாகனத்தில் மாலை 15.55 மணியளவில் சென்று இருந்தேன். தொடர்ந்து வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பின்னர் இரவு 22.55 காவல்நிலையம் திரும்பி கடமையை நிறைவு செய்தேன்.

நாம் அவ்வாறு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தவேளை காவல் நிலையத்தில் இருந்து தொலை பேசி ஊடாக,  எம்மை உடனே காவல் நிலையம் வருமாறும்,  கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்த வேண்டும் என அழைத்தார்கள்.

நால்வரையே முற்படுத்தினோம்.

அதன் பிரகாரம் காவல் நிலையம் திரும்பிய நாம் சந்தேக நபர்கள் நால்வரையும் தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று மருத்தவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இரவு 19.30 மணிக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் சந்தேக நபர்களை முற்படுத்தினோம்.

24 மணி நேரத்திற்குள் முற்படுத்த வேண்டும். 

சந்தேக நபர்களை கைது செய்து 24 மணி நேரத்திற்குள் அவர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த வேண்டும் எனும் சட்டத்தின் பிரகாரம் அவர்களை கைது செய்து 24 மணி நேரம் அன்மித்தமையால் தான் அவர்களை நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தினோம்.

26 ஆம் திகதி அறிக்கையில் சுமணனின் பெயர் இல்லை. 

சந்தேக நபர்களை நீதிவானின் முன் முற்படுத்த படும் போது காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்படும்.  முதல் அறிக்கையில் ( 640 / 11 ) நால்வரின் பெயர்களே குறிப்பிடப்பட்டு இருந்தது. குறித்த வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணனின் பெயர் குறிப்பிடப்படாது, இராசதுரை சுரேஷ் என்பவரின் பெயரே குறிப்பிடப்பட்டு இருந்தது.

27 ஆம் திகதி சமர்ப்பித்த மேலதிக விசாரணை அறிக்கையில் சுமணனின் பெயர் உள்ளது. 

அதன் பின்னர் மீண்டும் 27ம் திகதி   மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சமர்பித்த கொள்ளை வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கையில் (649 / 11)  22. 11. 2011 ஆம் திகதி புன்னாலைக்கட்டுவான் தெற்கில் வீடு புகுந்து 33 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 23ம்  திகதி , ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு உள்ளனர்.

மற்றையவரான சுமணன் எனும் நபர் தனது வாக்கு மூலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , ராஜபக்ஷே , ஜெயந்த , வீரசிங்க , மயூரன் மற்றும் சாரதி வீரசிங்க ஆகியோர் காவல்துறை வாகனத்தில் வட்டகச்சி பகுதிக்கு அழைத்து சென்றனர்.  வட்டக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் வைத்து 26  ஆம் திகதி மதியம் 12.10 மணியளவில் சந்தேக நபர் காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்து தப்பி காட்டு பாதையூடாக ஓடியுள்ளார்.

3 மணித்தியாலத்திற்குள் சடலம் நீரில் மிதந்தது. 

 தப்பியோடியவரை காவல்துறையினர் தேடிய போது மாலை 15 மணியளவில் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் முகம் மேல் பார்த்த வாறு சுமணனின் உடல் காணப்பட்டது.

காவல்துறையினர் உடலை மீட்டு 15.30 மணியளவில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர் அந்நபர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கிளிநொச்சி நீதிவான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு வழங்க வேண்டும் என மல்லாகம் நீதிவான் நீதிமன்று கோர வேண்டும் என மேலதிக விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் மேலதிக விசாரணை அறிக்கையை 27 ஆம் திகதி தாக்கல் செய்தேன் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.

முன்னதாக 26 ஆம்திகதி தாக்கல் செய்யபட்ட முதல் அறிக்கையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நால்வரின் பெயர்களே குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மறுநாள் 27 ஆம் திகதி தாக்கல் செய்யபப்ட்ட மேலதிக விசாரணை அறிக்கையில் ஐந்து பேர் கைது செய்யபப்ட்டு உள்ளனர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. சுமணன் கைது செய்யபப்ட்டதாக முதல் முறையாக 27 ஆம் திகதி நீதிமன்றில் சமர்பிக்கபப்ட்ட மேலதிக விசாரணை அறிக்கையிலையே குறிப்பிடப்பட்டு உள்ளது.

காவல்துறையின் ஏனைய பதிவுகளில் சுமணன் 25 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு கைது செய்யப்பட்டு உள்ளதாக காணப்படுகின்றது. ஆனால் நீதிமன்றத்தில் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட காவல்துறையின் முதல் அறிக்கையில் சுமணனின் பெயர் இல்லை. 48 மணி நேரத்தின் பின்னர், மறுநாள் 27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையில் சுமணனின் பெயர் உள்ளது. 

அதே வேளை செவ்வாய்க்கிழமை சாட்சியம் அளித்த சாட்சியங்கள் காவல்துறை வாகன சாரதி லலித் என்பவர் என சாட்சியம் அளித்து இருந்தனர். ஆனால் மேலதிக விசாரணை அறிக்கையில் சாரதி வீரசிங்க என குறிப்பிடப்ப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் சுமணன் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் 28ஆம் திகதி மதியம் தான் பொலநறுவை பொது வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப் பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து 26 ஆவது சாட்சியமாக விசேட சட்ட வைத்திய அதிகாரி திலக் அழகியவண்ண சாட்சியம் அளிக்கையில் , 

பொலநறுவை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்தேன். கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் தான் செய்தேன்.

சுமணன் உயிரிழந்ததை வைத்தியர்கள் 26ம் திகதி உறுதிப்படுத்தவில்லை. 

குறித்த நபர் உயிரிழந்தது 2011.11.26ஆம் திகதி பிற்பகல் 2.35 மணிக்கு என கூறப்பட்டது. அதனை வைத்திய அதிகாரி எவரும் உறுதிப்படுத்த வில்லை.

இரண்டு நாட்களின் பின்னர்  28 ஆம் திகதியே உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் நான் குறித்த சடலத்தை பொலநறுவை பொது வைத்திய சாலை வெளி நோயாளர் பிரிவுக்கு அனுப்பி உடலை பரிசோதித்து இறந்து விட்டார் என்பதனை வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியது  28 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு அதன் பின்னர் பிற்பகல் 14.10 மணியளவில் உடல் கூற்று பரிசோதனையை மேற்கொண்டேன்.

அடையாளம் காட்டப்பட்டது. 

நான் உடல் கூற்று பரிசோதனையை மேற்கொள்ள முன்னர்  உயிரிழந்தவர் ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என அவரது சகோதரனும் மாமனாரும் அடையாளம் காட்டி இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு பின்னரும் சடலம் ஈர தன்மையுடன் காணபட்டது. 

உடல் கூற்று பரிசோதனைக்காக சடலத்தை பொறுபேற்கும் போது சடலம் கறுப்பு பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு சடலம் ஈரமாக இருந்தது. சடலத்தில் காணப்பட்ட ஜீன்ஸ் சேற்றுடன் காணப்பட்டது.

சடலத்தில் ஆறு வெளிக்காயங்கள் காணப்பட்டன. 

அவைகள் உராய்வு காயங்களாக காணப்பட்டன. இடது முழங்கையின் கீழ் பகுதி , மணிகட்டு பகுதி , இடது தோள் பட்டை பகுதி வலது முழங்கையின் கீழ் பகுதி மற்றும் மணிக்கட்டு பகுதி ஆகிய இடங்களில் காணப்பட்டன.

அவற்றில் வலது மற்றும் இடது மணிக்கட்டு பகுதியல் காணப்பட்ட காயமானது கைவிலங்கு இடப்பட்டமையால் ஏற்பட கூடிய காயத்திற்கு ஒத்ததாக காணப்பட்டது.

உடலின் உட்காயங்களாக 16 கண்டல் காயங்கள் 

இடது தோள் பட்டை , இடுப்பு பகுதியின் பின் புறம் , இடுப்பு பகுதியின் கீழ் புறம் , பிட்டம் , வலது பிட்டத்தின் மேல் பகுதி , கீழ் பகுதி , முழங்காலின் மேற்பகுதி , கீழ் பகுதி , இடது காலின் மேல் பகுதி,  கீழ் பகுதி உள்ளடங்கலாக 16 கண்டல் காயங்கள் உடலில் காணப்பட்டன.

சிறு இரத்த கசிவும் காணப்பட்டது.

கண்ணின் கீழ் பகுதி இமை பகுதியின் கீழ் பகுதியில் இரத்தம் உறைந்து காணப்பட்டது. சிறு இரத்த கசிவும் காணப்பட்டது. கழுத்து பகுதி தலைபகுதி மண்டையோட்டு பகுதிகளில் காயங்கள் இல்லை. சுவாச பை விரிவடைந்து இருந்தது. இரைப்பையில் ஆயிரம் மில்லி லீட்டர் நீர் இருந்தது.

நீரில் மூழ்கி தான் ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது.

இந்த மரணம் நீரில் மூழ்கி தான் ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது.  நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை எனவும் உறுதியாக கூற முடியாது.

உடலில் உள்ள கண்டல் காயங்கள் மொட்டையான கூர் மழுங்கிய ஆயுதத்தின் விசையை பிரயோகித்ததால் ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம்.

பிட்டத்தில் ஏற்பட்ட கண்டல் காயம் முன் புறமாக ஒருவரை குனிய வைத்து விட்டு பிட்டத்தில் மொட்டையான கூர் மழுங்கிய ஆயுதத்தால் தாக்கும் போதும் ஏற்படாலம் , பின் புறமாக பிட்டம் அடிபட கூடியவாறு வீழ்ந்தாலும் ஏற்படாலம் .

உடலில் காணப்படும் 16 கண்டல் காயங்களில் எட்டு ஒருவரின் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டால் ஏற்படும் காயங்களாக ஏற்படும் சந்தர்ப்பமும் உண்டு அல்லது கை கால்கள் கட்ட பட்ட நிலையில் தொடர்ந்து வீழ்ந்து எழுந்தாலும் அவ்வாறான காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளி காயங்களான நான்கு உராய்வு காயங்களும் கரடு முரடான ஆயுதங்களால் தாக்கப்படும் போதோ அல்லது கரடு முரடான பாதையின் ஊடாக உட்செல்லும் போதோ , உடலை உட்செலுத்தும் போதோ ஏற்படலாம்.

 பாரதூரமான காயங்கள் இல்லை. 

சடலத்தில் காணப்பட்ட உட்காயங்களோ வெளிக் காயங்களோ மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு , பாரதூரமான காயங்கள் இல்லை. கை மணிக்கட்டு பகுதியில் காணபட்ட காயம் கயிற்றினால் கட்டபப்ட்டதால் ஏற்பட்ட காயம் இல்லை. மூக்கு, கழுத்து , நெற்றியில் , எந்த காயங்களும் இல்லை.  உடலில் காணப்பட்ட காயங்கள் இரண்டு நாளைக்கு முன்னர் ஏற்பட்ட காயங்கள் என கூற முடியும்.

26 ஆவது சாட்சியமான குற்ற புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவின் அதிகாரி சமிந்த சானக்க சில்வா சாட்சியம் அளிக்கையில் , 

காவல்துறையின் பாதுகாப்பில் உள்ள சந்தேக நபர் ஒருவர் தப்பியோடி உயிரிழந்தமை தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்து இருந்தேன். அதில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் நபர் கைது செய்யப்பட்டது 25 ஆம் திகதி.

கைது செய்யபப்ட்டு 24 மணி நேரம் கடப்பதற்கு முன்னர் 24 மணி நேரத்தை அண்டிய நேரத்தில் மறுநாள் காலை அவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறிய கிளிநொச்சி பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

உயர் அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும். 

சந்தேக நபர் ஒருவரை ஒரு காவல்நிலைய பிரிவில் இருந்து இன்னுமொரு காவல் நிலைய பிரிவுக்கு கொண்டு செல்ல உயர் அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்பட வேண்டும் என எந்த சுற்றுநிருபணம் மூலமும் அறிவிக்கப்படவில்லை.

பெறப்பட்ட அனுமதியில் சுமணனின் பெயர் இல்லை 

அன்றைய தினம் சுன்னாகம் காவல் நிலையத்தில் இருந்து கிளிநொச்சிக்கு செல்வதற்கு உயர் அதிகாரியிடம் பெறப்பட்ட அனுமதியில் எந்த வழக்கு எனவோ என்ன குற்ற செயல் தொடர்பான விசாரணை எனவோ சந்தேக நபரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை

தனியே வாகனத்தின் இலக்கம் மாத்திரம் குறிக்கப்பட்டு வாகனத்திற்கு மாத்திரமே அனுமதி பெறப்பட்டு இருந்தது.

சந்தேக நபர் தப்பி சென்றதாக கூறப்படும் இடம் பற்றை காடுகள் நிறைந்த இடம் , சடலம் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட இடம் சந்தேக நபர் தப்பியோடிய இடத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் உள்ள குளம் ஒன்றாகும். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து அவரின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.

30 ஆவது சாட்சியமாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா சாட்சியம் அளிக்கையில், 

 குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் கட்டளை படி விசாரணை செய்தேன். என சாட்சியம் அளித்தார்.

 எட்டு சாட்சியங்கள் விடுவிப்பு.

எட்டு சாட்சியங்கள் வழக்கில் இருந்து இன்றைய தினம் விடுவிக்கப்பட்டன. 21ம் , 23ம் , 24ம் , 25ம் , 28ம் , 29ம் , 31ம் மற்றும் 32 ம் சாட்சியங்கள் குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு பிரதி சொளிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏற்றுக்கொண்டு குறித்த சாட்சியங்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக கட்டளையிட்டது.

சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டன. 

அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் குறித்த வழக்கின் வழக்கு தொடுனர்கள் சார்பிலான சாட்சியங்களை முடிவுறுத்தி கொள்கின்றோம். என தெரிவித்தார்.

எதிரி தரப்பு சாட்சி பதிவு 04ஆம் திகதி. 

 எதிரி தரப்பு தமது சாட்சியங்களை முன் வைக்கலாம். ஒவ்வொரு எதிரிகளும் சாட்சி கூண்டில் நின்று சாட்சியம் அளிக்க முடியும் அவ்வாறு சாட்சியம் அளிக்க முன் வந்தால் , சத்தியபிரமாணம் செய்ய வேண்டும் , குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இல்லை எனில் எதிரி கூண்டில் நின்று சாட்சியம் அளிக்க முடியும் அவ்வாறு சாட்சியம் அளிக்கையில் சத்தியபிரமாணம் செய்ய தேவையில்லை. குறுக்கு விசாரணைகளும் நடைபெற மாட்டாது. மௌனமாக இருக்க விரும்பினாலும் எதிரிகள் சாட்சியம் அளிக்காது மௌனமாக இருக்கலாம் . என நீதிபதி தெரிவித்தார்.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி மா. இளஞ்செழியன் அதுவரையில் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

வழக்கின் பின்னணி. 

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய    8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.