உலகம் கட்டுரைகள் பல்சுவை பிரதான செய்திகள்

நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து?

நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. வயிற்றில் உண்டாகும் பல விதமான கிருமி பெருக்கத்தால் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தங்களின் புதிய ஆராய்ச்சி முடிவோடு இணைத்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜர்னல் கட் என்ற மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மேலும் விசாரணை தேவையென்றும் அதனால் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். குடல் சுவரில் உண்டாகும் பாலிப்பஸ் என்ற சிறு சிறு கட்டிகள்  பிரிட்டனின் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேரை பாதிப்படையச் செய்கிறது.

பெரும்பாலான சமயங்களில் அவை எந்த அறிகுறியும் ஏற்படாமல் புற்றுநோயாக மாறாமல் இருப்பதுண்டு. அதே வேளையில் சில சமயங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் இவை புற்றுநோயாக மாறக்கூடும்.செவிலியர் சுகாதார ஆராய்ச்சி என்றழைக்கப்படும் ஒரு நீண்ட கால அமெரிக்க ஆராய்ச்சி பாதையில் பங்கேற்ற 16,000 செவிலியர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை இந்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

தங்களின் 20 மற்றும் 30 வயதுகளில் நீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்ளாதவர்களை ஒப்பிடுகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கு மேலாக ஆண்டிபயாடிக்குகளை எடுத்துக் கொண்ட 20 முதல் 39 வயது வரையுள்ள செவிலியர்களின் குடலில் பிற்காலத்தில் அடினோமாக்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட வகை குடல் கட்டிகள் உண்டாவது கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல் தங்களின் 40 மற்றும் 50 வயது காலகட்டத்தில் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் பெண்களுக்கு சில தசாப்தங்களுக்கு பின்னர் அடினோமா கட்டிகள் உண்டாவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வு இக்கட்டிகள் எவ்வாறு புற்று நோய் கட்டியாக மாறுகிறது என்பதை விளக்கவில்லை. ஆண்டிபயாடிக்கால் புற்றுநோய் கட்டி வளர்வதை தங்களால் நிரூபிக்க இயலவில்லையென்றும் உட்கொள்ளப்படும் மருந்துகளால் வெளிப்படும் பாக்டீரியாக்கள் இதில் ஒரு முக்கிய பங்காற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள்  தங்கள் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் நார்சத்து குறைவான உணவுகளை குறைவாக உண்பது குடல் புற்றுநோய் உண்டாகும் ஆபத்தினை அதிகரிப்பதாக நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் (என்ஹெச்எஸ்) சாய்சஸ் எனப்படும் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. மேலும் அதிக எடையுள்ள மற்றும் உடல்பயிற்சி இல்லாத நபர்களுக்கு குடல் புற்று நோய் சாதாரணமாக இருப்பதை என்ஹெச்எஸ் நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

மிகுதியான மது அருந்தும் பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவையும் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புக்களை அதிகரிக்கிறது. மேலும் குடும்பத்தில் பரம்பரையாக குடல் புற்றுநோய் இருந்தால் மற்றவர்களுக்கும் குடல் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகமாக உள்ளது.

பிரிட்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுகாதார தகவல்துறை பிரிவு அதிகாரியான மருத்துவர் ஜாஸ்மின் ஜஸ்ட் பிபிசியிடம் கூறுகையில் ”இந்த ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் தான் தற்போது உள்ளது. அதனால் ஆண்டிபயாடிக்குகளை நீண்ட காலமாக உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து உறுதியான முடிவுகளை இவ்வளவு விரைவாக எடுப்பது இயலாது” என்று தெரிவித்தார்.

”மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டிபயாடிக்குகளை மக்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்இ அது குறித்து அவர்கள் தங்களின் மருத்துவரோடு ஆலோசிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.

ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆராயும் போதுஇ இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின்படி தனி நபர்களுக்கு ஏற்படும் ஆபத்தின் அளவை சரியாக கணிப்பது மிகவும் சிரமம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த ஆராய்ச்சி புற்றுநோய் குறித்து கவனம் செலுத்தவில்லை. புற்றுநோய் உண்டாவதற்கான காரணிகளைத்தான் உற்று நோக்குகிறது. குடல் புற்றுநோய் உண்டாவதற்கு மிகுதியான மதுப்பழக்கம் புகைப்பழக்கம் குடும்ப ரீதியான குடல் புற்று நோய்இ உணவு பழக்கம் என பல காரணங்கள் உண்டு.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விளக்கிய மருத்துவர் குருக்க்ஷங் ஆண்டிபயாடிக் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவும் அதன் தன்மை மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளதாக கூறினார்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ஜஸ்ட் கூறுகையில் ”இந்த ஆராய்ச்சியின் மூலம் இது குறித்த சரியான காரணம் மற்றும் பாதிப்பு குறித்து அறிய முடியாது. ஆனால் ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு அதிகப்படியான புற்றுநோய் ஆபத்து ஏற்படுமா என்று பரிந்துரைக்க இந்த ஆராய்ச்சி ஒரு படி முன்னோக்கி செல்கிறது” என்று எடுத்துரைத்தார்.

”குடலில் உண்டாகும் நுண்ணுயிரிகள் நமது உடல்நலனை எவ்வாறு பாதிக்கும் என்று ஆராய்ந்து வரும் மற்ற ஆராய்ச்சிகளுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முன்மாதிரியாகவும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் ” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

BBC

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers