இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

பந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 
ஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வா? திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருப்பது யார்? முள்ளிவாய்க்காலை கொச்சைப்படுத்தும் இச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளின்போது உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதற்கு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இந்த உதைபந்தப் போட்டியின்போது பணப் பரிசுகளும் அறிவுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ் மக்களின் வாழ்வில், வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு நெகிழ்ச்சியான நிகழ்வாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலின்போது இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது தவறான செயற்பாடு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஈழக் கவிஞர்களில் ஒருவரான சேரன்,  நினைவும் துயரமும் காசாகும். இது கடந்த முப்பதாண்டுகளாகத் தெரிந்த விடயம்தானே. ஹிட்லரின் யூத இனப்படுகொலையை வைத்து வியாபாரம் செய்வது பற்றிய Holocaust as business பற்றி நாம் அறியாததா? முள்ளிவாய்க்கால் மிளகாய்ப்பொடி இங்கே கிடைக்கிறது. 4.99 டொலர்கள். இனி முள்ளிவாய்க்கால் கச்சையும் வரும். வாங்குவோம் என்றும் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் போர்க்காலத்திலும போரின் முடிவுக்குப்பின்னரான காலத்திலும் மக்களின் அவலங்களை பயன்படுத்தி வியாபாரம் செய்த, செய்கிற கூட்டம் ஒன்று இருக்கிறது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இப்படி ஒரு நினைவேந்தல் தேவையா ?விளையாட்டுக்கழகங்களே சிந்தித்து செயல்படுங்கள்.இனவழிப்பை மறக்கடிக்க அரசு செய்யும் சதிக்கு துணைபோகாதீர்கள். படுகொலை செய்யப்பட்டமக்களினதும் மாவீர்ர்களினதும் ஆன்மா மன்னிக்காது என சிறிநவரட்னம் தன்னுடைய எதிர்வினையை எழுதியுள்ளார்.

இனப்படு கொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வல்ல. இனப்படுகொலைக்கான நீதிக்காக, இனப்படுகொலையின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக எமது நிலம்  போராடிக் கொண்டிருக்கையில் பல்லாயிரம் உயிர்கள் புதைக்கப்பட்ட சிதைமேட்டில் – குருதி நிலத்தில் உதைபந்தாட்டுவது மனித மாண்புக்கும் பண்பாட்டுக்கும் இழுக்கான செயல்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தும் நாள். இந்த நாளில் கொல்லப்பட்ட எங்கள் மக்களை கண்ணீரோடு நினைவுகூரவேண்டும். அவர்களுக்கான நீதியை பெறுவதற்கான உபாயங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் மிக்க நாளில் விளையாட்டுத்தனமான நிகழ்வுகளை நிறுத்தி இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு மரியாதை செய்து அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையும் விதமாய் செயற்படுவோம்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers