இலங்கை

யுத்தம் நிலவிய காலங்களில் கடமையாற்றிய சுகாதார தொண்டர்களின் சேவை அளப்பரியது – சத்தியலிங்கம்

வடக்கு மாகாணத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் கடமையாற்றிய சுகாதார தொண்டர்களின் சேவை அளப்பரியது. அவர்களின் சேவையை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனால்தான் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்படி தொடர்ந்தும் மத்திய சுகாதார அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் யுத்தம் நிலவிய காலங்களிலும் சரி ஆழிப்பேரலைபோன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும் எமது மாகாணத்தில் சுகாதார நிலமை நன்றாகவே இருந்துள்ளது. குறிப்பாக யுத்தகாலங்களில் வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மருந்துப்பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்த காலங்களிலும் அங்கு தொற்றுநோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதற்கு விடுதலைப்புலிகளின் தமிழீழ சுகாதார சேவையின் பங்களிப்பு அளப்பரியது. அத்துடன் வேதனம் ஏதுமின்றி தொண்டர்களாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களினது அர்ப்பணிப்பான சேவையும், சுகாதார திணைக்களத்தின் பணியாளர்களினது சேவையுமே சுகாதார நிலமை மேம்பட காரணமாக இருந்தது. பொதுவாக யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில் உள்ளுர் சுகாதார நிலமைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது வழமை. எனினும் எமது பிரதேசத்தின் நிலமை அவ்வாறு இருக்கவில்லை. இதற்கு சுகாதார தொண்டர்களின் சேவையும் ஒருகாரணமாகும். எனினும் அவர்களில் ஒருபகுதியினருக்கான நிரந்தர நியமனம் இதுவரை கிடைக்கவில்லை.

குறிப்பாக 2014ம் ஆண்டு அரசாங்க சுற்றறிக்கையின் பிரகாரம் எம்மால் 900 ற்கு மேற்பட்ட தொண்டர்களுக்க நிரந்தர நியமனம் வழங்க முடிந்தது. இதில் நீண்டகாலம் கடமையாற்றிய பலருக்கு நியமனம் கிடைக்கவில்லை. காரணம் சுற்றுநிருபத்தில் கூறப்பட்ட நிபந்தனைகள் ஆகும். மாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர் வடக்கில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் தமக்கு தேவையானவர்களை பணியிடங்களுக்க நியமித்தமையினால் உண்மையாக தொண்டர்களாக கடமையாற்றிய பலர் நியமனம் கிடைக்காது தவறவிடப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் தொடர்ச்சியாக மத்திய சுகாதார அமைச்சுடன் பேசிவருகின்றோம். அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்தின அவர்களிடம் மீண்டும் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இதுதொடர்பில் முக்கியமான கூட்டமொன்று வடக்கு ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சாதகமான பல விடயங்கள் கலநதுரையாடப்பட்டிருந்தாலும் நிரந்தர நியமனத்திற்கான அடிப்படை கல்வித்தகைமை தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக நாம் முயற்சிக்கையில் சில அரசியல்வாதிகளின் பெயர்களை பாவித்து நிரந்தரநியமனம் பெற்றுத்தருவதாக சில போலிமுகவர்கள் விண்ணப்படிவங்களை விநியோகித்துவருவதாக தகவல்கள் கிடைக்கின்றன். இவ்வாறானவர்களிடம் ஏமாந்துவிடவேண்டாமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சு சுகாதாரதொண்டர்களை கேட்டுக்கொள்கின்றது என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers